குழந்தைங்க கண்ல படாம பார்த்துக்குங்க... இல்லைன்னா உங்க பர்ஸ் பழுத்துடும்!

குழந்தைகள் கூகுள் வாய்ஸ் தேடுதல் பொறி முறையைப் பயன்படுத்துவது போல இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ் செயல்பாடுகளை தங்களது குரல் மூலம் கட்டுப்படுத்த முடியும். 
குழந்தைங்க கண்ல படாம பார்த்துக்குங்க... இல்லைன்னா உங்க பர்ஸ் பழுத்துடும்!

உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியானால் நிச்சயமாக குறைந்த பட்சம் ஐந்தாறு பார்பி பொம்மைகள், இரண்டு மூன்று எல்சா பொம்மைகள், கணக்கு வழக்கற்று ஃபர்ரில் தயாரான டெடி பியர் பொம்மைகள், நாய்க்குட்டி பொம்மைகள் எனக் கூடை நிறைய பொம்மைகள் வைத்திருப்பீர்கள். அதிலும் பெண் குழந்தைகள் இருக்கும் வீடென்றால் சொல்லவே தேவையில்லை நிச்சயம் பார்பிகளும், எல்சாக்களுமாக விடுமுறைநாட்களில் வீடு முழுக்க பொம்மைகள் இரைபடும். வெறும் பார்பிகள் மட்டுமென்றால் கூட அவற்றை கைக்கோ, காலுக்கோ சிக்கும் போதெல்லாம் அவ்வப்போது எடுத்து வைத்து விடலாம். ஆனால் இந்த பார்பிகளுக்கும், எல்சாக்களுக்குமாக அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தார் அள்ளி வழங்கும் ஈடு இணையற்ற இணைப் பொருட்கள் அரை டஜன் இருக்கும். அவை

சிறு முகம் பார்க்கும் கண்ணாடி
இரண்டு மூன்று விதமான ஹை ஹீல்ஸ் ஷூக்கள்
பார்பி ஹேண்ட் பேக்
பார்பிக்களுக்கு பொருத்தமாக இரண்டு மூன்று செட் உடைகள்
பார்பிக்களுக்கு தலை வார ஒரு ஸ்பெஷல் சீப்பு
எல்சா பொம்மைகளுக்கு தலையில் ஒரு குட்டி கிரீடம்
கழுத்துக்கு குட்டி நெக்லஸ் வேறு!

இவற்றை பத்திரப் படுத்துவதற்குள் சில அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் போதும், போதுமென்றாகி விடும்!. இவையெல்லாம் பார்க்க அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் மூன்றூ வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடென்றால் அந்தக் குழந்தைகள், அளவில் சின்னஞ் சிறியவையான இந்த பார்பி துணைப் பொருட்களை வாயில் போட்டு விழுங்கி விடக் கூடாதே என்பது வேறு அனாவசியமான பீதி! இதுவரை பார்பி பொம்மைகள் குறித்து அப்படியான எதிர்மறை செய்திகள் எதுவும் பதிவானதாகத் தெரியவில்லை. ஆனாலும் அம்மாக்களுக்கு என்றே இருக்கும் பொதுவான பயத்தைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும் தானே? 
பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப் பட்ட காலம் தொட்டே உலகம் முழுதும் இன்றளவிலும் அதற்கு மிகப்பெரிய வரவேற்பிருக்கிறது. கிடைத்த வரவேற்பை என்றென்றைக்குமாக தக்க வைத்துக் கொள்ளவென்றே பார்பி பொம்மை தயாரிப்பாளர்கள் குழந்தைகளை ஈர்ப்பதற்கென்றே புதிது, புதிதாக எதையாவது கண்டுபிடித்து குழந்தைகளின் பொம்மை வாங்கும் ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள் எனவும் சொல்லலாம். அந்த வகையில் பார்பியின் சமீபத்திய கண்டு பிடிப்பு ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ்’

பார்பி பொம்மைகளுடன் இணைக்கப்பட்டு வரும், கைக்கண்ணாடி, சீப்பு, ஷூக்கள், உடைகள் இவற்றைத் தாண்டி இப்போது பார்பிகளுக்கென்றே லிஃப்ட் வசதியுடன் குட்டியாக ஒரு பொம்மை வீட்டையும் பார்பி நிறுவனத்தார் வடிவமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுக்கான சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளனர். இதன் பெயர் தான் ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ்’ இந்த டிரீம் ஹவுஸில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?  இந்த பொம்மை வீட்டில் லிஃப்ட் இருக்கிறது. பாத்ரூமில் ஷவ்ர் இருக்கிறது, பார்பி பொம்மைகளைத் தூங்க வைக்க அருமையான பெட் ரூம் கூட உண்டு. அதோடு வீட்டிற்கு லிஃப்ட் தவிர மாடிப்படிகளும் உண்டு. தேவைப்பட்டால் படிகளை சறுக்கு மரம் போல மாறச் செய்து பொம்மைகள் வீட்டின் முதல் மாடியிலிருந்து சரிந்தும் இறங்கலாமாம்! பார்பிகள் ஹோம் வொர்க் செய்ய அழகான ஸ்டடி ரூம் உண்டு. இந்த பொம்மை வீட்டின் எல்லா அறைகளிலும் விளக்குகள் பொறுத்தப் பட்டுள்ளன. இந்த ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸை’ மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் குழந்தைகள் கூகுள் வாய்ஸ் தேடுதல் பொறி முறையைப் பயன்படுத்துவது போல இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ் செயல்பாடுகளை தங்களது குரல் மூலம் கட்டுப்படுத்த முடியும். 

பார்பி டிரீம் ஹவுஸ் வசதிகள் அனைத்தும் குழந்தைகளை ஈர்ப்பதாகத் தான் இருக்கின்றன. ஆனால் அதன் கட்டமைப்பில் முதற்கட்டமாக என்ன கோளாறுகள் இருந்தனவோ தெரியவில்லை. நேற்றைய கிறிஸ்துமஸ் நாளில் உலகம் முழுக்க இந்த பொம்மை வீட்டை வாங்கியவர்களிடையே மிகப் பெரும் ஏமாற்றமாகி விட்டது. கிறிஸ்துமஸ் தினமும் அதுவுமாக விடுமுறை நாளில் குழந்தைகளால் இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸில் நேற்று சரி வர விளையாட முடியவில்லையாம். குழந்தைகளின் குரலுக்கு கட்டுப்படாமல் பார்பி டிரீம் ஹவுஸ் மெளனம் சாதித்தால் என்ன அர்த்தம்?! விளையாட முடியாமல் ஏமாற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் இந்த பொம்மை வீடுகளைத் தயாரிக்கும் மேட்டல் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். புகாருக்கு பதிலளித்த மேட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு;

குறைந்த பட்சம் 15 நொடிகளுக்கு தங்களது ஹலோ பார்பி டிரீம் ஹவுஸின் மின் இணைப்பை, துண்டித்து மீண்டும் இயக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இப்படிச் செய்ததால் பிரச்சினை தீர்ந்ததா என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.

எது எப்படியோ குழந்தைகளை ஈர்ர்க்கவென்று  பொம்மை தயாரிப்பாளர்கள் புதிது, புதிதாக எதையெல்லாம் சிந்திக்கிறார்களோ? அவையெல்லாம் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கு சாதனங்களாக இருக்கின்றதோ இல்லையோ? பெற்றோர்களின் பர்ஸை கணிசமாகப் பதம் பார்க்கக் கூடிய வகையானதாகவே இருக்கின்றன.

ஹலோ பார்பி டிரீம் ஹவுஸில் எப்படி விளையாடுவதென்று தெரிந்து கொள்ள இந்த வீடியோ உதவலாம்...

இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ் பார்க்க வெகு அழகாக இருக்கிறது. ஆனால் ஒரே விதமான விளையாட்டு அனுபவத்தை மட்டுமே தான் தரக் கூடியதாக இருக்கும் போல் தெரிகிறது. இதனால் குழந்தைகளிடம் பெரிதாக என்ன சந்தோசத்தை விளைவித்து விட முடியுமென்று தான் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com