திருமண வரவேற்புகளின் பின் இந்த ஷெர்வானிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது?!

இனிமேல் மான்யவார் விளம்பரங்களில் ஷெர்வானி அணிந்த விராட் கோலியை பார்த்து ரசிக்கலாம்.
திருமண வரவேற்புகளின் பின் இந்த ஷெர்வானிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது?!

இப்போதெல்லாம் தமிழ்நாட்டுத் திருமணங்களில் ஷெர்வானி இல்லாத மாப்பிள்ளைகளைக் காண்பது அரிதாகி விட்டது. முன்பெல்லாம் திருமண வரவேற்புகளுக்கு மாப்பிள்ளைகள் கோட், ஷூட் போட்டுக்கொள்வார்கள், பிறகு சில வருடங்களில் ஸபாரி போட ஆரம்பித்தார்கள். பிறகு அதுவும் அழுத்துப் போன ஒரு நாளில் வட இந்தியர்களைப் போல ஷெர்வானி போட ஆரம்பித்தார்கள். இந்த ஷெர்வானி என்ற உடையை விற்பதற்காகத் தான் ’மான்யவார்’ உள்ளிட்ட பிராண்டட் கடைகள் எல்லாம் உருவாகின! 
வட இந்தியர்கள் இந்த உடையை அணிவதற்காகவே  பல சிறப்பான பண்டிகைகளை வகுத்து வைத்திருக்கின்றனர்.  அப்படியான நாட்களில் எல்லாம் இந்த  ஷெர்வானி இல்லாமல் அவர்களைக் காண்பது அரிது. ஆனால் நமது தமிழ் நாட்டில், இந்த ஊர் சீதோஷ்ண நிலையைக் கொஞ்சமும் மதிக்காமல் நமது தமிழ் கூறும் நல்லுலக மாப்பிள்ளைப் பையன்கள் ஷெர்வானியை ஏன் திருமண வரவேற்பு உடையாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தான் புரியாத புதிர்!  உடனே மணப் பெண்கள் எல்லாம் டிசைனர் புடவைகள் உடுத்தவில்லையா? இதென்ன எதற்கெடுத்தாலும் ஆண்களையே வம்புக்கிழுக்கும் வழக்கம் என்று நினைத்து விடக் கூடாது. ஏனெனில் பெண்கள் திருமண வரவேற்புக்கான விலையுயர்ந்த அந்த  டிசைனர் புடவைகளை உடுத்திக் கொள்ள தங்களது வாழ்வில் நிறைய சந்தர்பங்களை  ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு ஆண்கள் நிலை தான் இதில் பரிதாபம்! அவர்கள் அந்த ஷெர்வானியை அதற்குப் பின் எப்போது உடுத்திக் கொள்வார்கள் என்று கேட்டால் எப்போதும் இல்லை என்பது தான் பெரும்பான்மையினரின்  பதிலாக இருக்கும்.

குறைந்த பட்சம் 10,000  முதல் 20,000 ரூபாய்க்கு குறையாமல் விலை கொடுத்து வாங்கும் இந்த ஷெர்வானிகளை பிறகு என்ன தான் செய்வதாம்?

ஷெர்வானி என்றால் ஷெர்வானி மட்டுமா? அதற்கான ஸ்டோல் (துப்பட்டா டைப்பில் துப்பட்டாவும் அல்லாத துண்டும் அல்லாத ஒரு நீளமான துணி) அதற்குப் பொருத்தமாக கால்களுக்கு ஜமீந்தார் ஷூ!!!

வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. பழைய தமிழ் படங்களில் இந்த மாதிரியான ஷூக்களை ஜமீந்தார்கள் தான் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதனால் அதை ஜமீந்தார் ஷூ என்றே சொல்வோம். இத்தனையும் சேர்த்து தான் வாங்க வேண்டும். இதற்குத் தனியாக ஒரு 5000 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஆக மொத்தம் உடை வகையில், அதிலும் திருமண வரவேற்பு உடைக்காக மட்டுமே 25,000 ரூபாய் செலவு செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தான் இன்றைய இளைஞர்களின் திருமணத் திட்டமிடல்கள் இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்க ... சும்மாவே கூவுகிற சேவல்களுக்கு சோளம் போட்ட கதையாக விராட் கோலி  ’மான்யவாரின்’ ஷெர்வானி உடைகளுக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம்.

அதாகப் பட்டது பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப் பட்டுள்ளாராம். இனிமேல் மான்யவார் விளம்பரங்களில் ஷெர்வானி அணிந்த விராட் கோலியை பார்த்து ரசிக்கலாம். ரசிப்பது மட்டுமல்ல இவரால் ஷெர்வானி விற்பனை இந்தியா முழுவதுமே அமோகமாக கூடுமென்றும் நம்பலாம், இந்தியாவில் விராட் கோலியை அறியாதவர்கள் எவரிருக்கப் போகிறார்கள்?!  இந்தியில் மட்டும் தான் இப்போது இந்த விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில் தமிழிலும்  எதிர்பார்க்கலாம். 
அந்த விளம்பரத்தைக் காண்பதற்கான யூ டியூப் லிங்க்.... 

உறவினர் ஒருவரது மகனது திருமண வரவேற்புக்கு எடுத்த ஷெர்வாணி செட் உடையை இப்போது அவரால் அணிந்து கொள்ள முடியவில்லை.  எப்போது அந்த உடையைக் காண நேர்ந்தாலும் அவரது கிராமத்துப் பாட்டியம்மா  'ஏன்டாப்பா இதை கோட் ஷூட் போல கல்யாணங்களுக்கும், டி.வி. சீரியல் மாப்பிள்ளைகளுக்கும்  வாடகைக்கு விட்டா என்னவாம்? சும்மாவாச்சும் பீரோவிலே வச்சுப் பூட்டறதுக்கு, ஏதோ கொஞ்சம் வருமானமாவது கிடைக்குமே!' என்று கேலி செய்து கொண்டே இருக்கிறார். நம்ம ஊரில் ஷெர்வாணிகளின் நிலை இது தான்.  ஆனாலும் ஃபேஷன் உலகில் ஷெர்வாணி இல்லாமல் ராம்ப் வாக்கா?  அதிலும் விராட் கோலிக்கு ஷெர்வாணி படு கச்சிதமாகப் பொருந்துகிறது. விராட் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். தெரிந்து கொள்ள வேண்டியது இனி மான்யவார் ஷெர்வாணிகளில் வண்ண மயமாக விராட் கோலியைப் பார்க்கலாம். அவ்ளோ தான்!!! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com