புத்தம் புது மோஸ்தர் நகை விரும்பிகளுக்கு ஜோயாவின் கிருஷ்ணா கலெக்‌ஷன்ஸ்!

சங்கீதா ’கிருஷ்ணா’ கலெக்‌ஷனுக்காக உருவாக்கிய தங்கம் மற்றும் வைர நகைகளின் விலை 1.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறதாம்.
புத்தம் புது மோஸ்தர் நகை விரும்பிகளுக்கு ஜோயாவின் கிருஷ்ணா கலெக்‌ஷன்ஸ்!

நகை வடிவமைப்பு அப்படி ஒன்றும் எளிதான வேலையில்லை, இதில் போட்டிகள் நிறைய இருந்தாலும் ஒரு நகையை வாடிக்கையாளர் விருப்பத்திற்கும், திருப்திக்கும் ஏற்ப வடிவமைத்து வெற்றி காண்பதென்பது மிகவும் சவாலான விசயம். இதைச் சொல்வது யார் தெரியுமா?  டாட்டாவின் ’ஜோயா’ ஜூவல்லரி கலெக்சன்ஸின் தலைமை நகை வடிவமைப்பாளரான சங்கீதா திவான்.

நகை வடிவமைப்பில் கிட்டத்தட்ட 20 முழு ஆண்டுகள் பரிச்சயமும், அனுபவமும் உள்ள சங்கீதா சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். ஏனெனில் பெண்கள் தங்களுக்கான நகைகளைத் தேர்வு செய்வதில் அத்தனை எளிதாக திருப்தி அடையவே மாட்டார்கள் என்பதற்கு நம் ஊர் நகைக்கடைகளே மவுன சாட்சிகள். சங்கீதாவின் நகை வடிவமைப்பு மேன்மைக்கு சிறந்த உதாரணமாக ’ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் ஜோதாவாக வரும் ஐஸ்வர்யாவின் நகை மாதிரிகளைக் கூறலாம்.

அண்ணாச்சி பலசரக்குக் கடை ரேஞ்சில் இப்போதெல்லாம் பெரு நகரம், சிறு நகரம் எங்கு பார்த்தாலும் மூலை, முடங்குகளில் கூட நகைக்கடைகள் எங்கிருந்தோ முளைத்து விடுகின்றன. தங்கமோ, வைரமோ விலை ஏறினாலும், இறங்கினாலும் மக்களிடையே நகை வாங்கிக் குவிக்கும் ஆர்வம் மட்டும் ஒரு குறையும் இன்றி போஷாக்காக பேணி வளர்க்கப்படுகிறது. அதற்கு முதல் காரணம் தங்கத்திலும், வைரத்திலும் பணத்தைக் கரைப்பது செலவே அல்ல அது ஒரு முதலீடு என்ற ஆழமான அடிப்படை எண்ணம் தான். 

தங்கமும், வைரமும் முதலீடு என்பதற்காக அதை அப்படியே தங்க பிஸ்கட்டுகளாகவோ, தனிக் கற்களாகவோ சேமிக்க முடியும் தான். ஆனால் அதை நண்பர்களிடம் காட்டிப் பெருமை கொள்ள முடியாதே. அங்கே தான் நகை வடிவமைப்பிற்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பத்தில் பூக்கள், இலைகள், முக்கோணம், வட்டம், கோளம் கணித வடிவங்கள் என்று திருப்தி அடைந்த மக்கள் இப்போது நகைகளில் நாளுக்கொரு புது மோஸ்தர் தேடுகிறார்கள். கற்பனைக்கு எட்டாத கலைநயமிக்க பல நகை வடிவமைப்பு மாதிரிகளுக்கு மக்களின் அல்லது வாடிக்கையாளர்களின் தணியாத இந்த ஆர்வம் தான் மிகப்பெரிய உந்துசக்தி.

அதற்கொரு உதாரணமாக டாட்டாவின் சமீபத்திய ஜோயா பிராண்ட் நகை கலெக்‌ஷனான ’கிருஷ்ணா’வைச் சொல்லலாம். கிருஷ்ணனைப் பற்றிய பாரதக் கதைகள், பாகவத புராணக் கதைகள் இவற்றிலிருந்தெல்லாம் சம்பவங்களை ஒருங்கமைத்து அதைச் சார்ந்து நகை வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். அதாவது கோகுலத்தில் மரத்தடியில் கன்றோட்டிக் கொண்டு புல்லாங்குழல் இசைக்கும் கண்ணன் தங்கமாகவும், வைரமாகவும் இழைக்கப்பட்டு குட்டி பென்டண்ட்டாக நம் கழுத்தில் ஆடினால் கசக்குமா நமக்கு?! குழலூதும் கண்ணன் மட்டுமல்ல கோபிகைகளுடன் ஆடும் கண்ணன், ராதையுடன் ஏகாந்தமாய் ஊஞ்சலில் ஆடும் கண்ணன்...

விளையாட்டுப் பிரியனான பிருந்தாவனக் கண்ணனின் பிள்ளைக் குறும்புகள், கோவர்த்தன மலையைத் தூக்கும் கண்ணன், மைக்ரோ பகவத் கீதை பென்டண்ட், மயிற்பீலி அணிந்த மாயோனின் புன்னகை முகம் இத்தனையையும் அணிவதற்கு எளிதாக காம்பாக்ட் டிஸைன்களில் வடிவமைப்பது நகை வடிவமைப்பாளர்களுக்கு மிகப்பெரும் சவால் மட்டுமல்ல சாதனையும் கூடத்தான் இல்லையா?

நெய்க்குடமும், பால்குடமும் சுமந்து செல்லும் ஆயர்குலப் பெண்களைப் பாருங்கள்...

ஒரு தேர்ச்சி பெற்ற நகை வடிவமைப்பாளராக தன்னை கவர்ந்திழுப்பவை இத்தகைய சவால்கள் தான் என்கிறார் சங்கீதா திவான். ஏனெனில் மக்களிடையே பணப் புழக்கம் பெருகி விட்ட இந்நாட்களில் தேவைக்காக நகை வாங்குவதைத் தாண்டி விருப்பதிற்காக நகை வாங்கும் பழக்கம் மற்றும் அடிக்கடி நகைகளை எக்சேஞ்ச் செய்யும் பழக்கம் பெருகி வருகிறது. இப்படியான சூழலில் வாடிக்கையாளர்களின் விருப்பம் சில சமயங்களில் புதுமையையும், பழமையையும் ஒருசேர எதிர்பார்க்கிறது. ஜோயாவின் கிருஷ்ணா கலெக்‌ஷன் நகைகள் அத்தகைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் தான் இதற்கு ‘கேப்ஸூல் கலெக்‌ஷன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் சங்கீதா கூறினார்.

ஜோயாவின் ’கிருஷ்ணா கேப்சூல் கலெக்‌ஷன்ஸ்’ நகைகளைக் காண்பதற்கான யூ டியூப் வீடியோ இணைப்பை இங்கு தரிசிக்கலாம்.

அதெல்லாம் சரி தான் ஆனால் இந்த வகை நகைகளின் விலையை அறிந்தால் கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது, ஏனெனில் சங்கீதா ’கிருஷ்ணா’ கலெக்‌ஷனுக்காக உருவாக்கிய தங்கம் மற்றும் வைர நகைகளின் விலை 1.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறதாம். வடிவமைப்பு, வைரங்களின் எண்ணிக்கை மற்றும் கலைநயத்தைப் பொறுத்து 15 லட்சம் வரை விலைப் பட்டியல் நீள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com