கர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு... சாப்பிட்டதுண்டா?!

பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள். அது ஒரு பாரம்பரியச் சுவை என்றால் மிகை இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப்படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை.
கர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு... சாப்பிட்டதுண்டா?!

விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போய் சில பல நாட்கள் சீராடுவதெல்லாம் கல்யாணம் ஆன கையோடு கனவு போலத்தான் ஆகி விட்டது, இப்போதெல்லாம் அப்படிப் போனாலும் கூட எங்கே தங்க முடிகிறது? குழந்தைகளுக்குப் பள்ளி, ஓரிரு நாட்களுக்கு மேல் அலுவலகத்தில் விடுமுறை கேட்க முடியாது. என்னதான் பாட்டி வீடு என்றாலும் அடிக்கடி போய்த் தங்கினால் பிரியம் கெட்டு விடும். இப்படிச் சில பல காரணங்களைக் இட்டுக் கட்டிய பின், பாட்டி வீட்டு செல்லச் சீராடல் எல்லாம் கானல் நீரானது தான் மிச்சம் .

அதை ஏன் இங்கே புலம்புவானேன்! சொல்ல வந்த விஷயம் வேறு... பாட்டி வீடு என்றதும் எல்லோருக்குமே சில விஷயங்கள் சட்டென்று நினைவை நிரப்பும் அப்படி ஒரு விஷயம் தான் எனக்கு உச்சிக்குடுமி முட்டாசுக் கடை! இந்த மனிதருக்கு ஏன் இப்படிப் பெயர் வந்ததென்பது இன்னும் கூட எனக்குப் புரியாத விஷயம். அவருக்கு தலையில் முடியே இருந்ததில்லை... முழு வழுக்கை. பெயரா முக்கியம்? தினம் தினம் மாலையானால் போதும் அவர் கடையில் சுடச் சுடத் தயாராகும் கருப்பட்டி முட்டாசின் சுவைக்கு எதுவும் ஈடில்லை!

அப்போது உச்சிக்குடுமி கடையில் மைதா கேக், அதிரசம், முறுக்கு என்று இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள், ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை,

அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு அகலமான பெரிய மூடி போன்ற ஓலை நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி கை இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள், கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போட சுருக்குப் பையுடன் வருவான்.

அவர்கள் தலையைக் கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும். தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம், இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள். மாலையானால் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை, உலகக் கதை, அடுத்த வீட்டுப் புறணி, ஆகாசப் புறணிகள் எல்லாம் பேசுவது வாடிக்கை ஆயிற்றே. முட்டாசோடு ஊர், உலகக் கதைகளை மெல்வதும் கூட சுகம் தான் போலும்.

சென்ற விடுமுறையில் அம்மா வீடு, மாமியார் வீடு, சித்தி வீடு, அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது பாட்டிக்கும் வயதாகி விட்டது... சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் ஆசைதீரப் பாட்டியோடு தங்கினால் தான் என்ன?! என்று தோன்றி விட... தங்கினோம். வழக்கம் போல உறவுகள், நட்புகள், தெரிந்தவர், தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.

‘மொறு மொறுவென்று பங்காரம் போல (பங்காரம் என்றால் தெலுங்கில் தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு!’

‘இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி, வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு, ஆனா ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல, சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு, நம்ம உச்சிக்குடுமி முட்டாசு மாதிரி இல்லை ஹூம்! ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,

பாட்டி உடனே உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.

எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது?! இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும்.

அதென்னவோ நீண்ட நேரம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.

சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி, கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள். அங்கே கேட்டால், பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள். அது ஒரு பாரம்பரியச் சுவை என்றால் மிகை இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப்படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.

இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை அல்வாவையும் சொல்லாம். பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை. இங்கே இனிப்பானவை முட்டாசும், அல்வாவுமா? இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது.

ம்... என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பதே!

உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும்!

அவர் இறந்து விட்டார்.

கருப்பட்டி முட்டாசை சாத்தூர், சிவகாசிக்காரர்கள் எப்போதுமே தங்களது வீடுகளில் செய்து சாப்பிட நினைக்க மாட்டார்கள். ஏனெனில் பக்குவம் சரியாக அமையாது என்பதோடு அதொரு சல்லை பிடித்த வேலையாகி விடக்கூடும் என்பதாலும்!

ஆனால் தினமணி வாசகர்கள் எல்லோரும் இதற்காக சாத்தூருக்கும், சிவகாசிக்கும் சென்று இந்தப் பண்டத்தை ருசி காண்பது முடியாது என்பதால், செய்முறையையும் தருகிறோம்.

ஆர்வமிருப்பவர்கள் வீட்டிலேயே தயாரித்து ருசியுங்கள். பக்குவம் சரியாக அமைந்து நீங்கள் செய்த கருப்பட்டி முட்டாசை எவரேனும் பாராட்டினால் அதைக் குறித்து எங்களுக்கும் எழுதி அனுப்புங்கள்.

தேவையான பொருட்கள்:

வெல்லம்- 3/4 கிலோ 
சுக்கு- 1 டீஸ்பூன் 
பச்சரிசி மாவு / அரிசி மாவு - 1/2 கிலோ 
உளுந்து - 50 கிராம் 

செய்முறை: 

ஒரு அடி கனமான பத்திரத்தை எடுத்து கொண்டு, பச்சரிசியையும், உளுந்தையும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும் இப்பொழுது வெல்லத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் தண்ணீரை நன்றாகச் சுட வைத்து அதில் இந்த வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லப்பாகு தயாரான பின் அதைத் தனியாக வைத்து கொள்ளவும் ஒரு துணியை எடுத்து கொண்டு அதில் காலணா சைஸில் துளையிட்டுக் கொண்டு அதில் மாவுக்கலவையை இட்டு, கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவது போல் பிழிய வேண்டும். பிழிந்த மாவு வெந்து பொன்னிறமாக வந்த பின் அதை வெல்லப்பாகில் பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்தால் கருப்பட்டி முட்டாசு தயார்.

Image courtesy: pettikadai.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com