அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா?

சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! 
அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா?

சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! 

நேற்று கடையில் அதலைக்காயைக் கண்டதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்!

கெட்டிப் பருப்புச் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து உருட்டி அதன் நடுவில் லட்டுக்கு நடுவில் முந்திரிப்பருப்பு போல பொரித்த அதலைக்காயை கையோடு அதக்கி எடுத்து உண்டிருந்தால் தானே தெரியக்கூடும் அதன் அருமை. பாகற்காய் கசப்புத்தான், காஃபீ கூட கசப்புத்தான் தான் ஆனால் சாப்பிடாமலோ அருந்தாமலோ இருக்கிறோமா என்ன? அந்தந்தச் சுவைகளை அது அதற்கு ஏற்றமாதிரி பக்குவமாகச் சமைத்துண்ணலும், அருந்தலும் ஒரு கலை. 

அந்த வகையில் அதலைக்காயையும் கூட நன்கு அலசி, அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி பக்குவமாக ஒரே கொதியில் இறக்கி வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்துக் கருவேப்பிலை இட்டுப் பொரிந்து வருகையில் பொடியாக நறுக்கிய வெங்காயமும், நீள நறுக்கிய பச்சை மிளகாயும் இட்டு அதலைக்காய்க்கு வலுக்குமோ, வலிக்காதோ எனப் பூம்பிரட்டலாக நான்கைந்து முறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து வாணலியைத் தட்டுப் போட்டு மூடி விடவேண்டும்.

பிறகு சூடான சாதத்தில் கெட்டிப் பருப்பும் நெய்யும் விட்டுப் பிசைந்து கூட இந்த அதலைக்காய்ப் பொரியலையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அப்புறம் பரிமாறுபவர்களை அடிக்கடி கேட்பீர்கள்;

ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என்று!

மழைக்காலத்தில் தான் அதலைக்காய் சீசன் தொடங்கும்; இதோ இப்போது கூட சீசன் தான். காய்கறி மார்க்கெட்டிலோ அல்லது தெருவில் விற்று வரும் காய்கறி வண்டியிலோ எங்கே கண்டாலும் அதலைக்காயை மட்டும் விட்டு விடாதீர்கள். வெறுமே ருசிக்காக மட்டுமில்லை. அதலைக்காய்க்கும், பாகற்காய் போலவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. அதைப் பற்றியும் பார்த்து விடலாம்.

மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் சாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமோகமாக விளைந்து வருகிறது.
 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியான கரிசல்பட்டி, கலிங்கபட்டி, வண்ணிமடை, ஓடைப்பட்டி, கொல்லபட்டி, பெத்துரெட்டிபட்டி, பெரியஓடைப்பட்டி, நடுவபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர் காலங்களில் தானகவே அதலைச் செடிகள் முளைக்கின்றன. இந்தச் செடிகளில் மழையின் ஈரப்பதம் காரணமாகவும், மண்ணின் தன்மை காரணமாகவும் அதிக அளவில் அதலைக்காய்கள் விளைகின்றன.
 

இந்த காய்கள் சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் இவற்றை அனைவரும் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர். மேலும் அதலைக்காயின் மனமும், ருசியும் அனைத்து தரப்பினரையும் கவர்வதால், சாத்தூர் பகுதியில் விளையும் அதலைக்காய்களுக்கு சுற்று வட்டார பகுதிகளில் தனி மவுசு ஏற்பட்டுள்ளது. இங்கு விளையும் அதலைக்காய்கள் திருச்சி, மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 

அதலைக்காய்கள் பிற மாவட்டங்களில் விளைவதற்க்கு முன்பே சாத்தூர் பகுதியில் விளைவதற்கு இப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. பிற மாவட்டங்களைவிட முன்பே விளைச்சல் காண்பதால் சாத்தூர் பகுதி அதலைக்காய்கள் பிரபலமாகி வெளிமாவட்டங்களுக்கும், வெளியூர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
 பொதுவாக அதலைக்காயை பறித்த உடன் உடனடியாக சமைத்துவிட வேண்டும். அதனாலயே பிஞ்சு அதலைக்காய்களை அனைத்து தரப்பினரும் வாங்கி விரும்பி உண்டு வருகின்றனர். இவற்றைத் தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே கரிசல்காட்டில் வளரக் கூடிய தன்மை கொண்ட, இத்தகைய செடிகள் களையை போல் தானகவே வளரும் தன்மை கொண்டவை.
 

இதுகுறித்து அதலைக்காய் வியாபாரிகள் கூறியது: 

காலையில் காட்டுக்கு போகும்போது சாதாரணமாக வளர்திருக்கும் அதலைக்காய்களை பறிப்போம், மழை காலமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 7-லிருந்து 15 கிலோ கிடைக்கிறது. இதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். கிலோ ரூ. 60 முதல் 80 வரை கிடைக்கும். இது விதையாக விதைக்க கூடியது அல்ல, மேலும் மற்ற காய் மாதிரி முதலீடு கிடையாது, முதலீடு இல்லாமல் வருமானம் கிடைக்கக் கூடியது.


இதுகுறித்து மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில்: அதலைக்காய், பாகற்காய்-க்கு இணையான மருத்துவக் குணம் கொண்டது. இது சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. கசப்புத்தன்மை இருந்தாலும் ருசியுள்ளது. இந்த அதலைக்காய் மற்ற காய் மாதிரி அறுத்து சமைக்க முடியாது. அப்படியே தான் சமைக்க முடியும். தென்மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் விளையக்கூடியது என்றார்.

தகவல் போதுமல்லவா? இனி கடைகளில் அதலைக்காய்களைக் கண்டால் ஐயோ... என்று விலகி ஓட மாட்டீர்கள் தானே?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com