தலைவன் ஆக ஆசையா? உங்களுக்கு தேவையான பண்புகள் இவைதான்!

அனைவருக்கும் தலைவனாக விளங்க ஆசை நிச்சயம் இருக்கும். பள்ளியில் வகுப்பு லீடரில் தொடங்கி அலுவலகத்தில்
தலைவன் ஆக ஆசையா? உங்களுக்கு தேவையான பண்புகள் இவைதான்!

அனைவருக்கும் தலைவனாக விளங்க ஆசை நிச்சயம் இருக்கும். பள்ளியில் வகுப்பு லீடரில் தொடங்கி அலுவலகத்தில் மேலாளர் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் நமக்கு மேலே சிலர் நம்மை வழிநடத்திச் செல்வார்கள். ஏன் நாம் மந்தையில் உள்ள ஆடுகளாக இருக்க வேண்டும்? மேய்ப்பனாக மாறுவது அத்தனை கடினமா என்ன என்று யோசித்திருக்கிறோமா? யோசித்தாலும் நடைமுறை சாத்தியங்களை கணித்திருக்கிறோமா? எந்த ஆசையும் நிறைவேறும், ஆனால் அதற்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

மிகச் சிலருக்கு இயல்பிலேயே தலைமைப் பண்புகள் இருக்கும். அதனைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப பயிற்சி செய்தால் நிச்சயம் தலைவனாக உருவாகலாம். தலைவனாக இருக்க விரும்புபவர்களுக்கு human relations என்று சொல்லப்படும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் சுமுகமான நட்புறவு கொள்ளத் தெரிய வேண்டும். அறம் சார்ந்து இயங்கத் தெரிய வேண்டும். பரந்த அறிவும், சுருங்கிப் போகாத மனதும் அவசியம். மேலும் தன்னைப் போல பிறரை எண்ணும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

அதிகாரம் செய்வதும் அதட்டி உருட்டுவதும் தலைமைப் பண்பு என்று தவறாக கருதப்படுகிறது. ஒரு நல்ல தலைவன் அரவணத்துச் செல்பவனாகவே இருப்பான். அவனுடைய ஆளுமையில் கடினமும் உறுதியும் இருக்குமே தவிர மனிதர்களிடம் பழகும் தன்மையில் அவை இருக்காது. சோம்பேறிகளையும், செயல் திறன் அற்றவர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தான் சார்ந்த கூட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பதுடன், மேன்மேலும் தன்னைப் போல் தலைவர்களை உருவாக்கிச் செல்பவனே நல்ல தலைவன். இந்த உலகம் சங்கிலித் தொடராக அத்தகைய தலைவர்களின் வழிநடத்துதல்களால் இயங்குகிறது. மக்கள் விரும்பும் சில தலைவர்கள் மகாத்மா காந்தி, காமராஜ், நெல்சன் மண்டேலா, சேகுவாரா, லீ குவான் யூ உள்ளிட்ட பலர்.

தலைவனாக இருப்பதற்கான அடிப்படை மற்றவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளும் திறன். தனது நடத்தையாலும் கருத்தாகத்தாலும், செயல்பாடுகளாலும் அனைவருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள் தலைவர்கள். துணிவே துணை, செய் அல்லது செத்து மடி, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை எனும் உறுதியான நிலைப்பாட்டை உயிரே போனாலும் எடுப்பார்கள். தான் எடுத்த சார்பிலிருந்து ஒரு போதும் மாற மாட்டார்கள். செயற்கரிய விஷயங்களை துணிச்சலாக செய்து முடிப்பார்கள்.

நான் சொல்கிறேன் நீ கேட்டுத் தான் ஆகவேண்டும், இல்லையென்றால் உன் வேலை போய்விடும், அல்லது உயிரையே எடுத்துவிடுவேன் என்ற அளவுக்கு அதிகார போதையுடன் செயல்பட்டால் வெகு விரைவில் அவன் அருகில் சொந்த நிழல் கூட நிற்காது. அவனால் தலைவனாக இல்லை, ஒரு மனிதனாகக் கூட இருக்க முடியாது. மனித நேயமும், உடல் ஆற்றலும், தீர்க்கமான சிந்தனையும், எதிர்காலத்தைப் பற்றிய சரியான கணிப்பும் தலைமைப் பண்புகளின் சில கூறுகள். 

நல்ல தலைவனாக விளங்குபவன் கருத்துப் பரிமாற்றத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி தன்னுடைய கருத்துக்கு எதிர் கருத்தை வைப்பவர்களையும், விமரிசனம் செய்பவர்களையும் கூர்ந்து கவனிப்பான். அது சரி என்று மனதுக்குத் தோன்றினால் தீவிர பரிசோதனைக்கும் சுய அலசலுக்குப் பிறகும் அதனை ஒப்புக் கொள்வான். அவ்வகையில் அவனது மனிதத் தொடர்பின் சங்கிலி அறுபடாமல் அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் விரிவாக்கம் பெற்றுக் கொண்டிருக்கும். இத்திறனை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள்.

இயல்பிலேயே சிலரிடம் தலைமைப் பண்பு காணப்படும். சிலர் வாழ்க்கை அனுபவம் மூலமும் சுயம் சார்ந்த தேடலில் அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்வார்கள். உங்களிடம் தலைவனாக மாறக் கூடிய பண்புகள் உள்ளதா என்பதை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ சில நேரங்களில் ஆம் – சில நேரங்களில் இல்லை’, அல்லது ‘இல்லை’ ஆகிய ஏதோ ஒரு விடை அளிக்கவும். விடைகளை நேர்மையாக சுய பரிசீலனையில் அடிப்படையில் எழுத வேண்டும். நான் இப்படித்தான் இருக்க விரும்பினேன். அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையை பதிலாக மாற்றக் கூடாது. உள்ளது உள்ளபடி குறிக்க வேண்டும். ஒரு தலைவனாக இருக்க அடிப்படை குணங்கள் உள்ளதா என்பதற்கான  செக் லிஸ்ட் இதோ :

  1. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கபடி மதிநுட்பத்துடன் / விழிப்புணர்வுடன் செயல்படுகிறீர்களா?
  2. குழுவாகச் செயல்படும்போது அசெளகரியமாக இருந்துள்ளதா?
  3. சிலருடன் மட்டும்தான் உங்களால் சகஜமாகப் பழக முடிகிறதா?
  4. பிறருடைய எதிர்பார்ப்புக்களை துல்லியமாகக் கணித்ததுண்டா?
  5. ஒரு பிரச்னையைத் தீர்க்க பொய் சொல்வதுண்டா?
  6. திடீரென கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தெரிந்தவரா?
  7. புதிய மனிதர்களுடன் பழகும்போது பதற்றமாக உணர்வீர்களா?
  8. குழு கலந்துரையாடலில் பங்கேற்க ஆவல் உண்டா?
  9. திடீரென்று பிரச்னை ஏற்பட்டால் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வரத் திணறியதுண்டா?
  10. உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா? தகுதியானவர்களை உடன் வைத்துக் கொள்வீர்களா?
  11. மேடை பேச்சு என்றால் பயமா?
  12. அறிவார்த்தமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாக உரையாற்றியதுண்டா? புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவரா?
  13. தனிமையில் இனிமை காண்பவரா?
  14. மற்றவர்களுடைய தேவைகளை அறிவீர்களா? அதை நிறைவேற்ற முனைபவர்களா?
  15. புரியாத புதிரா நீங்கள்? 
  16. தன் முனைப்பு அற்றவரா? கேள்வி கேட்கப்பட்டால் பதில் சொல்லவோ தன்னை முன் நிறுத்திக் கொள்ளவோ தயங்குவீர்களா?
  17. ஒழுக்கத்திற்கு முதலிடம் தருபவரா? கொள்கைப் பிடிப்புடன், அதே சமயம் எந்த சூழலிலும் நடுநிலை தவறாமல் இருப்பவரா?
  18. புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
  19. உங்களுடைய பிரச்னைகளை மிகையாக நினைத்து அடிக்கடி கவலை கொள்வதுண்டா?
  20. மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா? சமூக அக்கறையில் கவனம் செலுத்தியதுண்டா?
  21. உயர்ந்த குறிக்கோள்கள் உடையவரா? உங்கள் முடிவுகளை நன்கு யோசித்து தீர்க்கமாக எடுப்பீர்களா? 
  22. குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
  23. உங்கள் மனநிலைக்கு ஏற்றபடி அடுத்தவர்களிடம் பழகுவீர்களா?
  24. கருத்தாக்கம் இல்லாதவரா?
  25. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவரா? அதை விரைவாகச் செயல்படுத்த முனைவீர்களா
  26. பாகுபாடின்றி அனைவரிடம் பழகக் கூடியவரா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கக் கூடிய அதாவது ரோல் மாடலாக விளங்கக் கூடிய தகுதி உள்ளதா?

பதில்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22, 25, 26 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் நீங்கள் உறுதியாகத் தலைமைப் பண்பு மிக்கவர் தான். அரசியல்வாதி, மருத்துவர், மனித வள மேலாளர், கல்வியாளர், மனோதத்துவ நிபுணர், உளவியல் ஆலோசகர், விற்பனையாளர் போன்றவற்றில் தலைமை ஏற்கக் கூடிய திறன் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.

'ஆம்' என்றும், 'சொல்வதற்கில்லை', 'இல்லை' என்றும், 'சொல்லிவிட முடியாது' என்பது போன்ற குழப்பமான பதில்கள் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். 

மேலே குறிப்பிடப்பட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதில்தான் நிறைய அளித்திருந்தால் உங்கள் பலம் வேறு திறனாக இருக்கலாம். அதற்காகக் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com