அடடே ஆச்சர்யம்! கெண்டைக்கால் வலி தீர்க்கும் கோதுமை ரவை உப்புமா ரெஸிப்பி!

பாரம்பர்ய மருத்துவத்தில் இப்படி ஒரு டிப்ஸ் கிடைக்கையில் அதனால் பக்க விளைவுகள் ஏதுமில்லை எனும் போது நாமும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாமே!
அடடே ஆச்சர்யம்! கெண்டைக்கால் வலி தீர்க்கும் கோதுமை ரவை உப்புமா ரெஸிப்பி!

இன்று காலை ஜீ நியூஸ் சேனலில் ‘பாரம்பர்ய மருத்துவம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் வந்த தம்பதிகள் கூறியது தான் இந்த ரெஸிப்பி. எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத்தன் இருந்தது... சுகர் பேஷண்டுகள் தானே கோதுமை ரவை உப்புமா செய்து சாப்பிடுவது வழக்கம். இதென்ன, இவரகள் கெண்டைக்கால் வலிக்கு கோதுமை ரவை உப்புமா சாப்பிடச் சொல்கிறார்களே என்றிருந்தது. ஆனாலும், அவர்கள் சொன்ன ரெஸிப்பியில் கலந்துள்ள பொருட்களும் சரி கோதுமை ரவையும் சரி இரவு உணவாக உட்கொள்ளும் போது பிற உணவு வகைகளைப் போல வயிற்றை அடைத்துக் கொண்டு இல்லாமல் லைட்டாக ஃபீல் செய்ய வைக்கும் என்பதால் ஆபத்தில்லாத ரெஸிப்பி தான் என்று தோன்றியது. இதைச் செய்து சாப்பிடுவதால் கெண்டைக்கால் வலி தீர்ந்தால் நல்லது தானே?! அதனால் தான் இந்த ரெஸிப்பியைப் பற்றி தினமணி இணையதள வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

தேவையான பொருட்கள்...

கோதுமை ரவை: 1 கப்

தண்ணீர்: 2 கப்

கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்

கருப்பு எள் - 2 டீஸ் பூன்

கடுகு: 1 டீஸ்பூன்

சீரகம்: 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்: 2 அல்லது 3

சின்ன வெங்காயம்: 10 (பொடியாக நறுக்கியது)

உப்பு: தேவையான அளவு

கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை: 2 ஆர்க்

எண்ணெய்: உப்புமா தாளிக்கப் போதுமான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை ஏற்றிப் பற்ற வைத்து, வாணலி காய்ந்ததும் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் முதலில் 2 டீஸ்பூன் கருப்பு உளுந்தை சேர்த்து அது சூடானதும் சீரகம் மற்றும் கடுகு சேர்த்து அது பொரிந்து வருகையில் கருப்பு எள்ளையும் சேர்த்து அது பொரிகையில் வெங்காயத்தைச் சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்தும், தண்ணீர் கொதித்து வரும் போது சிறிது, சிறிதாக கோதுமை ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். கோதுமை ரவை தண்ணீரை ஈர்த்துக் கொண்டு வெந்ததும்... நன்றாகக் கிளறி ரவை நன்கு வெந்திருக்கிறதா எனப் பதம் பார்த்து மேலாக கொஞ்சம் கொத்துமல்லித் தளை தூவி இறக்கிப் பரிமாறவும். இந்த உப்புமாவில் என்ன ஸ்பெஷல் என்றால் சாதரணமாக உப்புமா செய்யும் போது நாம் கடுகும், வெள்ளைஉளுந்தும் சேர்த்துத் தானே தாளிதம் செய்வோம். அப்படியில்லாமல் இதில் கருப்பு உளுந்து, கருப்பு எள் சேர்க்கப் படுகிறது. அவை இரண்டுமே உடல் தசைகள் தளர்ந்திருந்தால் அவற்றை இறுக்கும் ஆற்றம் கொண்டவை என இந்த உப்புமாவைச் சமைத்துக் காட்டிய தம்பதியினர் கூறினார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில் இப்படி ஒரு டிப்ஸ் கிடைக்கையில் அதனால் பக்க விளைவுகள் ஏதுமில்லை எனும் போது நாமும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாமே!


நன்றி: ஜீ நியூஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com