கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’!

பாருங்கள்.. இந்த பாஸ்தாவும் சரி அதற்கான ஸ்டப்பிங்கும் சரி நாமே நமது கைகளால் சொந்தமாக வீட்டில் தயாரித்தது. இதில் எதுவுமே கடைகளில் வாங்கிய ரெடிமேட் சரக்குகள் அல்ல.
கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’!

பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி வந்து வீட்டில் வெந்நீரில் காய்கறிகளை அரை வேக்காட்டில் அவித்து அதனுடன் நீரில் ஊற வைத்த பாஸ்தாவையும் போட்டு சமைத்து அதன் மீது ரெடிமேட் சாஸ் ஊற்றி சாப்பிடத் தருவதைக் காட்டிலும் ஃப்ரெஷ் ஆக நாமே பாஸ்தா தயாரித்துச் சமைத்தால் என்ன என்று தோன்றியது.

பாஸ்தா மாவு தயாரிக்கும் முறை...

  • டபிள் ஜீரோ ஃப்ளோர் (மாவு) - 150 கிராம்ஸ் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும்)
  • துரம் வீட் செமொலினோ பெளடர் - 50 கிராம்ஸ் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும்)

(துரம் வீட் செமோலினா பெளடர் என்பது கோதுமை மாவு தான். ஆனால் இது நாம் சப்பாத்திக்கு பயன்படுத்தும் வழக்கமான கோதுமை மாவில்லை, அதைக் காட்டிலும் மென்மையாக பாஸ்தாவுக்கென்றே விளைவிக்கப்படும் கோதுமையில் இருந்து அரைக்கப்படும் மாவு. இவை தனியாக டெட்ராபிளாய்ட் கோதுமை என்ற பெயரில் அறுவடை செய்யப்படுகின்றன. கோதுமை மாவு மிகமிக நைஸாக சுத்திகரிக்கப்பட்ட நிலை இது என்கிறார்கள். இந்த மாவில் தான் பாஸ்தா தயாரிக்க முடியுமாம். அதனால் பாஸ்தாவுக்கான மாவை மட்டும் நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் தான் வாங்கியாக வேண்டும்)

இரண்டும் சேர்த்து 200 கிராம் மாவை ஒரு அகன்ற கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு நாட்டுக்கோழி முட்டைகளை உடைத்து ஊற்றவும். பின்னர் ஒரு ஸ்பூனால் மாவை நன்கு கிளறி முட்டையில் மாவை நன்கு புரட்டிப் பிசையவும். எப்படி என்றால் நம்மூர் சப்பாத்தி மாவு பிசைவதைப் போல அல்ல. இதற்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் கவனம் தேவைப்படுகிறது. மாவை நீட்டி இழுத்து மீண்டும் மடக்கி பாய்போலச் சுருட்டி நன்கு பிசைய வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு இளகு தன்மையும், அதற்குண்டான நிறமும் நாம் கலந்து மாவுக் கலவையில் வரும் வரை அதைப் பிசைந்து கொண்டே இருக்கவும். ஒரு வழியாக மாவை பாஸ்தா பிழிவதற்கு தோதாக நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பிசைந்து முடிந்ததும் அதை ஒரு காற்றுப்புகாத பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கவும்.

அதற்கான விடியோக்கள்...

மார்க்கெட்டில் ஏகப்பட்ட ஷேப்களில் பாஸ்தா கிடைக்கிறது. நம்மூரில் திருகு, குழல் மற்றும் சங்கு வடிவ பாஸ்தாக்கள் ஃபேமஸ். நூடுல்ஸ் வடிவிலும் பாஸ்தாக்களை வெட்டிக் கொள்ளலாம். இதற்கென்று பிரத்யேக மெஷின்கள் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு நமக்குப் பிடித்த வடிவத்தில் பாஸ்தாக்களைப் பிழிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மெஷின் வாங்க முடியாதவர்கள் பூரிப்பலகை கொண்டு பாஸ்தா மாவை வட்டமாகத் திரட்டி அதிலிருந்து தங்களுக்குத் தேவையான டிசைனில் பாஸ்தாக்களை வெட்டிக் கொள்ளலாம்.

பிசைந்து ஃப்ரிஜ்ஜில் வைத்த பாஸ்தா மாவை எடுத்து சப்பாத்திக்கு மாவு திரட்டுவதைப்போல மெலிதாகத் திரட்டவும். மாவு ஒட்டாது... ஆனால் ஒட்டிக் கொள்ளும் என்று அச்சம் இருந்தால் அதில் கொஞ்சம் செமோலினா மாவைக் கொட்டி புரட்டவும். கிட்டத்தட்ட மாவில் புரட்டி சப்பாத்திக்கு திரட்டுவதைப் போலத்தான். ஓகே... இப்போது பாஸ்தா மாவு தயார். அப்புறம் டிசைன் எல்லாம் அவரவர் விருப்பம்.

இதில் இவர் பட்டர்ஃபிளை பாஸ்தா செய்யக் கற்றுத் தருகிறார். நாம் நமக்குப் பிடித்த வேறு எந்த வடிவத்திலுமாக வெட்டிக் கொள்ளலாம்.

சரி இப்போது ஃப்ரெஷ் பாஸ்தா தயார்... ஆனால் அதை அப்படியே சாப்பிட்டால் சுவையாக இருக்காதே.. அதை சாப்பிடத் தோதாக மாற்ற சில அலங்காரங்கள் தேவைப்படுகின்றன.

இப்போது ஃப்ரெஷ் பாஸ்தா தயார். இதைக் காய வைத்து எடுத்து வைத்தால் அது ட்ரை பாஸ்தா. நாம் கடைகளில் வாங்கி சமைத்து உண்பது ட்ரை பாஸ்தா வகையறா.

இந்த காணொளியில் ஃப்ரெஷ் பாஸ்தா மாவு தயாரிக்கவும், அதை விருப்பத்துக்கு ஏற்றவாறு வெட்டிக் கொள்ளவும் நமக்குக் கற்றுத்தருகிறாரே அந்த மனிதரின் பெயர் ஜென்னாரோ கண்டல்டோ. இத்தாலியின் பாப்புலர் செஃப்களில் ஒருவர்.

பட்டர்ஃபிளை பாஸ்தாவுக்குப் பொருத்தமாக பூசணிக்காய் ஸ்டஃபிங்...

  • மஞ்சள் பூசணிக்காய் - 400 கிராம் துண்டுகள் (துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
  • ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
  • பூண்டு - 5 பல் (முதலில் நசுக்கிக் கொள்ளவும்)
  • மிளகாய் - 2 (அதிகக் காரம் வேண்டாம் என்பவர்கள் விதைகளை நீக்கிக் கொள்ளவும்)
  • பூண்டு மற்றும் மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு மற்றும் மிளகாயை நறுக்கியதும் ஆலிவ் எண்ணெயில் இட்டு வதக்கவும்.

அடுத்ததாக அதனுடன் ரோஸ்மேரி செடியின் இரு சிறு கிளைகளை ஒடித்து சேர்க்கவும். இது நாம் தயார் செய்யும் பதார்த்தங்களுக்கு மிக அருமையான சாப்பிடத் தூண்டும் மணத்தைத் தரும். ரோஸ் மேரி ஃப்ரெஷ் ஆக கிடைக்கவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ட்ரை ரோஸ் மேரி இலைகள் மற்றும் தண்டுகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசமாக இருக்கிறதே என்று அதிகமாக ரோஸ் மேரி சேர்த்து விடக்கூடாது. 400 கிராம் பூசணிக்காய்க்கு இரண்டு ரோஸ்மேரி தண்டுகள் போதும். 

ரோஸ்மேரி வதங்கி லேசாக வாசமெழத் தொடங்கியதுமே அவற்றுடன் பொடியாக நறுக்கி வைத்த பூசணிக்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பூசணி வதங்கிக் கொண்டிருக்கும் போதே அதில் மூன்று டேபிள் ஸ்பூன் காய்கறி சூப் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். 

காய்கறி சூப்பில் பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போதே அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மற்றொரு பர்னரில் மூடி போட்ட பாத்திரமொன்றில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் ஃப்ரெஷ் பாஸ்தாவை அதில் அளவாக நீரூற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும் அதை இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய பாஸ்தாவை அப்படியே வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காய் கலவையில் கொட்டிக் கிளறவும். நீங்கள் விரும்பிய ஃப்ளேவர் பெற பூசணிக்காயை இறக்கும் முன் அதில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்க்கலாம். இப்போது பூசணிக்காய், பாஸ்தாவில் நன்கு கலந்து மணம் நாசியை நிரப்பும். இந்த் நிலையில் பாஸ்தாவை பிளேட்டில் கொட்டி அதன் மீது துருவிய சீஸ் தூவி மேலே அழகுக்காக நம்மூர் ஸ்டைலில் கொத்தமல்லி இலைகளையோ, புதினாவையோ வைத்து அலங்கரித்து அப்படியே சூடாகச் சாப்பிடலாம்.

பாருங்கள்.. இந்த பாஸ்தாவும் சரி அதற்கான ஸ்டப்பிங்கும் சரி நாமே நமது கைகளால் சொந்தமாக வீட்டில் தயாரித்தது. இதில் எதுவுமே கடைகளில் வாங்கிய ரெடிமேட் சரக்குகள் அல்ல.

பாஸ்தாவைக் கூட இப்படிச் சொந்தமாக நாம் வீட்டில் தயாரித்து உண்பதால் ஆரோக்யத்துக்கு ஆரோக்யம் என்பதோடு இத்தாலியன் ஸ்பெஷல் உணவுகளை தயாரிக்கத் தெரியும் என்ற பெருமையும் நம்மை வந்து சேரும். இது கூட ஒருவகை தன்னம்பிக்கை தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com