பணியிடங்களில் மிரட்டலுக்கு ஆளானால் ஆண்கள் வேலையை விட்டு விடுவார்களா?

சம்பள உயர்வு, புரமோஷன், எதிர்கால வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தாலும் ஆண்கள் ஏன் தங்களது வேலையை விட முயற்சிக்கிறார்கள்?!
பணியிடங்களில் மிரட்டலுக்கு ஆளானால் ஆண்கள் வேலையை விட்டு விடுவார்களா?

பணியிடங்களில் அதிக வேலைப்பளுவால் மிரட்டப் படும் போது ஆண்களும், பெண்களும் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என டென்மார்க்கிலிருக்கும் ஆர்ஹஸ் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் முண்ட்ஜெர்க் எரிக்சன் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வின் படி வேலைத் தளத்தில் கொடுமைகளுக்கு ஆளாகும் போது ஆண்கள், மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவது உலகம் முழுக்க பொதுவான விசயமாக இருந்தாலும், எதிர்வினையாற்றும் போது ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் செயல்படுகிறார்கள். கடைசியில் ஒரே விதமான பிரச்சினையை ஆண் ஒரு விதமாகவும், பெண் ஒரு விதமாகவும் கையாள்வது இந்த விசயத்திலும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

வேலைத் தளத்தில் மேலதிகாரிகளோ அல்லது சக அலுவலர்களோ ஒரு அலுவலரை கட்டம் கட்ட நினைத்தால் முதலில் அவரது வேலைத்திறனை தடுப்பார்கள், வழக்கமான வேலையைச் செய்ய விடாமல் தொடர்ந்து புதிது, புதிதாக ஏதாவது ஒரு வேலையை அடிக்கடி தருவார்கள், உண்மையில் உற்சாகமாகச் செய்யப் கூடிய அல்லது பாராட்டுதல்களைப் பெற்றுத் தரக்கூடிய வேலைகளை எல்லாம் தங்களுக்கு இணக்கமான பிற அலுவலர்களுக்கு வாரி வழங்கி விட்டு கட்டம் கட்டப் பட்டவரை மொத்தமாக பலிகடாவாக்குவார்கள். இதுவே பெண் அலுவலர்கள் எனில் அதிக வேலைப் பளுவைத் திணிப்பது, நிர்ணயிக்கப் பட்ட அலுவல் நேரம் தாண்டியும் கசக்கிப் பிழிந்து உழைப்பைத் திருடுவது, பாலியல் தொல்லைகள் தருவது என அவர்களுக்கான பணியிடக் கொடுமைகள் ஆண்களை விட சற்றே மாறுபட்டிருக்கும்.

இதனடிப்படையில் 3000 பேர்களிடம் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் 70 சதவிகித மக்கள் தாங்கள் பணியிடங்களில் மிரட்டல் மற்றும் கொடுமைகளுக்காளாவதாகத் தெரிவித்துள்ளனர். அதில் 43 சதவிகிதம் பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத் தக்க விசயம்.

இதில் அலுவலகங்களில் தங்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தவிர்க்க ஆண்கள் எனில் அவர்கள் உடனடியாக அந்த வேலையை விட்டு விட்டு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் வேறு வேலைக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள். அதே பெண்கள் எனில் அவர்கள் வேலையை விட முயற்சிப்பதைத் தவிர்த்து மிக நீண்ட மருத்துவ விடுப்புகள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம். இந்த விசயத்தை கையாள்வதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏன் இத்தனை வேறுபாடு எனப் புரியவில்லை. 
இதனால் சம்பள உயர்வு, புரமோஷன், எதிர்கால வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தாலும் ஆண்கள் ஏன் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது வேலையை விட முயற்சிக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com