சந்தியா வந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லை!

சந்தியா வந்தனம் என்பது பிராமணர்களின் அடையாளம் மட்டுமே என்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கியதில் நமது திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சந்தியா வந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லை!

சந்தியா வந்தனம் என்பது பிராமணர்களின் அடையாளம் மட்டுமே என்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கியதில் நமது திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிராமணக் கதாபாத்திரங்களை நகைச்சுவை என்ற பெயரில் பகடி செய்ய ‘சந்தியா வந்தனமும்’ பெரும்பாலான இயக்குனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் பாருங்கள்; சந்தியா வந்தனம் என்பது ஆதியில் மனித சமூகத்தின் நால்வகை வருணத்தினருக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது. பொதுவானதெனினும் அதை கடைபிடிக்கும் முறை என்ற ஒன்றை ஏற்படுத்தியதில் தான் பிராமணர்கள் முன் நிற்கிறார்கள். சந்தியா வந்தனம் என்பது சூரியக் கடவுளை வழிபடுவதற்கான ஒரு முறை என்ற அளவில் இதை சத்ரியர்களும், வைஸியர்களும் கூட கடைபிடித்து வந்தார்கள் என்பதற்கு மகாபாரதத்திலும், புராணங்களிலும் சான்றூகள் உண்டாம். இதை நான் சொல்லவில்லை. பெங்களூரைச் சேர்ந்த்த செளம்யா அரவிந்த் சீதாராமன் தனது ஏழு வருட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கிய புத்தகத்தை சான்றாகக் காட்டிச் சொல்கிறார். 


சில வருடங்களுக்கு முன் இவர் தனது மகனுக்கு உபநயனம் செய்வித்த போது சந்தியா வந்தனம் சார்ந்து தனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை தெரியாதவராகவே இருந்தார். மனித குலத்தின் நன்மைக்காக என்று கடைபிடிக்கப் படும் இது மாதிரியான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் நிச்சயம் சமூகத்தில் இன்னும் பல தரப்பினரையும் சென்றடைய வேண்டும். சந்தியா வந்தனம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உகந்தது எனும் எண்ணத்தை மாற்ற வேண்டும் எனும் நோக்கத்தில் அவர் செய்த ஆராய்சியின் பலனே சந்தியா வந்தனத்தையும் அதன் பலன்களையும், கடைபிடிக்கும் முறைகளையும் உள்ளடக்கி அவர் உருவாக்கிய ‘சூரியனைப் பின்பற்றும் இந்து மதமும்: சந்தியாவந்தனமும்” எனும் புத்தகம். இரண்டு பாகங்களுடனான இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் சந்தியா வந்தனத்துக்கான ஸ்லோககங்களைக் கொண்டது. இரண்டாம் பாகத்தில் சந்தியா வந்தனத்தின் போது கடை பிடிக்கப்பட வேண்டிய முறைகள் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். இந்தப் புகைப்படங்களுக்குச் சொந்தமான புகைப்படக்காரர் வேறு யாருமல்ல அது செளம்யாவின் அம்மா  உஷா கிருஷ்.

சரி இப்போது சந்தியா வந்தனம் என்பதன் சரியான பொருளைத் தெரிந்து கொள்ளலாம்.

‘சந்தி’ என்றால் ‘சந்திப்பு’ என்று பொருள். இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று வேளைகளுக்கும் சந்தியா காலம் என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி ஜெப அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு ‘சந்தியாவந்தனம்’ என்று பெயர். இதனை பின்பற்றுபவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும். என்பது ஐதீகம். அப்படியென்றால் இதை அரசு நமது ஆரம்பப் பள்ளி பாடத்திட்டங்களிலேயே கூட  அறிமுகப்படுத்தலாமே என்று தோன்றுகிறது தானே?! ஆமாம் மாணவர்களுக்கு புத்திக் கூர்மை அளிக்கும் எனில் அதைத் தவிர வேறென்ன முக்கியம்? ஆனால் வருத்தத்திற்குரிய விசயம் என்னவெனில் படித்துப் பட்டம் பெற்ற பலருக்கே கூட சந்தியா வந்தனம் என்றால் என்னவென்று தெரியாது என்பது தான். மற்றெல்லா விசயங்களையும் போல இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் எல்லோருமே கூகுளாண்டவரைத் தான் நம்பி இருக்கிறோம்.

செளம்யா இந்தப் புத்தகத்தை எழுத இந்து மத விற்பன்னர்கள், சமய மேதைகள் எனப் பலரை அணுகியுள்ளார். சும்மா ஏனோ தானோ என்று எழுதி விடவில்லை. ஏழு வருடங்களாக பல இந்து மதத் துறவிகள், இந்து மடாலய அதிபர்கள், ஸ்வாமி பரமாத்மானந்தா, பெங்களூரில் இருக்கும் சங்கராச்சாரியார் எனப் பலரையும் சந்தித்து புத்தகம் உருவாகும் போது தனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவாக்கிக் கொண்டு தனது புத்தகப் பணிகளை முடித்திருக்கிறார்.

மேலும் மக்களிடையே சந்தியா வந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது எனும் எண்ணம் வலுப்பட முக்கியக் காரணம் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களே என்கிறார் செளம்யா ஏனெனில் அந்நாட்களில் இந்திய வரலாற்றை எழுதும் பணியைச் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்கள் ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் அவசியமான நற்பலன்களுடன் கூடிய இந்த சந்தியா வந்தனத்தை பிராமணர்களுக்கு மட்டுமேயான ஒரு சம்பிரதாயமாக, சடங்காக மாற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடைத்து சந்தியா வந்தனத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கும் முயற்சியே இந்தப் புத்தகம் என்கிறார். 
சந்தியா வந்தனம் குறித்த இவரது புத்தகம் அமேஸான் மற்றும் ஃபிளிப் கார்ட்டில் கிடைக்கிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com