காலாவதியான மருந்து, மாத்திரைகளை முறையாக டிஸ்போஸ் செய்வது எப்படி? 

மருந்துகளை நாம் குப்பையில் கொட்டினாலும் சரி, டாய்லட்டில் ஃப்ளஷ் அவுட் செய்தாலும் சரி இரண்டு முறையிலுமே இந்த மருந்துகள் பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரைத் தான் மாசுபடுத்தக் கூடும்.
காலாவதியான மருந்து, மாத்திரைகளை முறையாக டிஸ்போஸ் செய்வது எப்படி? 

மீந்து போன சாதம் குழம்புகளை என்ன செய்வோம்? கெட்டுப் போகாமல் இருந்தால் மாடுகளுக்கு கரைத்து வைக்கலாம், இல்லையேல் நாய்களுக்கு உண்ணத் தரலாம். கெட்டுப் போனால் குப்பையில் தான் கொட்ட வேண்டும். சரி சாதம் குழம்பை குப்பையில் கொட்டலாம் அவை மக்கிப் போய் மண்ணோடு மண்ணாக மாறிச் சிதைந்து விடும். அதே நாம் வாங்கிய மருந்து, மாத்திரைகள் மீந்து விட்டால் அல்லது காலாவதியாகி விட்டால் என்ன செய்வது? குப்பையில் கொட்டலாமா? அல்லது பாத்ரூம் டாய்லட்டில் ஃப்ளஷ் அவுட் செய்யலாமா? என்ன செய்வதாக உத்தேசம்? பலரும் வாடிக்கையாகச் செய்வது குப்பையில் வீசி விடுவது அல்லது பாத்ரூம் சிங்க் அல்லது டாய்லட்டில் ஃப்ளஷ் அவுட் செய்வது தான் வழக்கம்.

ஆனால் மருத்துவக் கட்டுரைகளும் மருத்துவப் பேராசிரியர்களும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இப்படிச் செய்வது எதிர்காலத்தில் மீட்டெடுக்க முடியாத சுற்றுச் சூழல் சீர்கேட்டில் தான் கொண்டு வந்து நிறுத்தும் என்கிறார்கள். எல்லா மருந்துகளும், மாத்திரைகளும் அவையவற்றுக்கான சில விசேஷமான நச்சுக் காரணிகளைக் கொண்டுள்ளனவாம். அவை காலாவதியான பின் அவற்றை மனிதர்கள் பயன்படுத்த முடியாது என்பதோடு அவற்றின் நச்சுத் தன்மை அப்படியே தான் நீடிக்கும். இந்த மருந்துகளை நாம் குப்பையில் கொட்டினாலும் சரி, டாய்லட்டில் ஃப்ளஷ் அவுட் செய்தாலும் சரி இரண்டு முறையிலுமே இந்த மருந்துகள் பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரைத் தான் மாசுபடுத்தக் கூடும். நீர் மாசுபாடு பற்றி எத்தனையோ விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகிறோம். இந்த விசயத்தையும் இனி கவனத்தில் கொண்டால் நீர் மாசுபாட்டை கொஞ்சமேனும் தடுத்தவர்களாவோம். நீர் மாசுபாடு என்று பெரிதாக திட்டமிட சோம்பேறித் தனப்படுபவர்கள் குறைந்தபட்சம் தங்களது டிரைனேஜ் குழாய்கள் அடைத்துக் கொள்ளக் கூடாது என்பதையாவது மனதில் வைத்து மருந்து மாத்திரைகளை முறையாக டிஸ்போஸ் செய்ய முயலலாம்.

இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விசயமும் உண்டு, சில மருந்து, மாத்திரைகளின் உறைகளிலேயே அவற்றை எப்படி டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும். சிலவற்றில் குறிப்புகள் எதுவும் இருப்பதில்லை, அல்லது அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

அப்படியான நேரங்களில் நாம் செய்ய வேண்டுவது என்ன தெரியுமா?

சிம்பிள்... மாத்திரை மருந்துகளை சிறு துகள்களாக நுணுக்கி அவற்றை பயன்படுத்திய காப்பி பவுடர் துகள்களுடன் கலந்து ஒரு பிளாஸ்டிக் பையிலிட்டு, அந்தப் பையை மிக இறுக்கமாக மூடி குப்பையில் வீசி விடலாம். இந்த முறையில் அகற்றுவதால் வேதியியல் கழிவுகளால் நேரடியாகவும், உடனுக்குடனாகவும் பூமிக்கடியிலிருக்கும் நிலத்தடி நீர் மாசுபடுவது சற்றுக் குறையும் என்று அயல் நாட்டு மருத்துவப் பேரசிரியர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருக்கின்றனர். இனி இந்த முறையைப் பின்பற்றிப் பார்க்கலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com