ஒரேநாளில் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஹிட்டடித்த பாகிஸ்தானி பச்சைக் கண் பேரழகன்!

யாரந்தப் பச்சைக் கண் அழகன் என்று தேடினால் அட... கடைசியில் அவர் ஒரு பாகிஸ்தானி டீக்கடை உரிமையாளராம். பெயர் அர்ஷாத் கான், வயது 18. உலகம் முழுக்க சோசியல் மீடியாக்கள் இவரை வலை போட்டு தேடிக் கொண்டிருக்க..
ஒரேநாளில் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஹிட்டடித்த பாகிஸ்தானி பச்சைக் கண் பேரழகன்!

இது வரை ஐஸ்வர்யா ராய் மூலமாக பச்சைக் கண் அழகியைத் தான் நாம் கண்டிருக்கிறோம், இதோ ஒரே நாளில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் என உலகம் முழுக்க மல்ட்டி பல்ட்டி ஹிட் அடித்திருக்கிறார் ஒரு பச்சைக் கண் அழகன்! யாரந்தப் பச்சைக் கண் அழகன் என்று தேடினால் அட... கடைசியில் அவர் ஒரு பாகிஸ்தானி டீக்கடை உரிமையாளராம். பெயர் அர்ஷாத் கான், வயது 18. உலகம் முழுக்க சோசியல் மீடியாக்கள் இவரை வலை போட்டு தேடிக் கொண்டிருக்க இந்த 18 வயது பாக் டீக்கடைத் தம்பியோ கர்மமே கண்ணாக இஸ்லாமாபாத் இத்வார் பஜாரில் இருக்கும் தனது டீக்கடையில் சமத்தாக டீ ஆற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். ஊர் முழுக்க தன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாவம் அதுவரை அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.

எப்படிக் கிடைத்தது உலகப் புகழ்? 

புகைப்படக் கலைஞர் ஜியா அலி இந்த பாகிஸ்தானி சாய்வாலாவை அவரது கடையில் டீ ஆற்றிக் கொண்டிருக்கும் போது இஸ்லாமாபாத்தில் வைத்து அப்படியே லைவ்வாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார். அது முதல் பற்றிக் கொண்டது இந்த பச்சைக்கண் அழகனுக்கான டிமாண்ட். உலகம் முழுதும் அதிகம் பகிரப்பட்ட, கூகுளிலும், பிற தேடு பொறிகளிலும் அதிகம் தேடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக ஆனது இவரது புகைப்படம். படம் எடுத்த ஜியா அலியை விட அர்ஷாத் கான் இன்று மெகா ஹிட் ஆகி விட்டார்.
 
தான் உலகப் பிரபலமான விசயமே இவருக்கு தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. முதலில் உள்ளூர் பையன்கள் அர்ஷாத் கானின் புகைப்படத்தை துண்டுப் பிரசுரங்கள் ஆக்கி ஊர் முழுக்க விநியோகிக்கத் தொடங்கிய போது தான் தனது புகைப்படம் வைரல் ஆன விசயமே இவருக்குத் தெரிந்திருக்கிறது. பிறகென்ன லோக்கல் மீடியாக்கள் இவரை பேட்டியெடுக்க அலைமோதத் தொடங்கின. அவர்களிடம் அர்ஷாத் தெரிவித்துக் கொண்டது என்னவென்றால். ”நான் ஓரிரவில் புகழ் வெளிச்சத்தில் மின்னத் தொடங்கி இருக்கலாம். ஆனால் தயவு செய்து எனது வேலையிடத்தில் நான் டீ ஆற்றிக் கொண்டு இருக்கும் போது புகைப்படம் எடுப்பது, பேட்டி எடுப்பது என்று என் வேலையைக் கெடுக்காதீர்கள்” என்பது தான்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க “முதலில் வருவபர்களுக்கே முன்னுரிமை” ரேஞ்சுக்கு நேற்று புதன் கிழமை சட்டு புட்டென்று அர்ஷாத்தை தனது விளம்பர மாடலாக ஒப்பந்தம் செய்த இணையதள ரீடெயில் ஆடை விற்பனையாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் பிராண்ட் உடைகளில் அர்ஷாத்தைப் புகைப்படம் எடுத்து, அந்தப் படங்களை தனது இணையப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்களும் சோசியல் மீடியாக்கள் வாயிலாக மீண்டும், மீண்டும் பகிரப்பட்டு  அதிரி புதிரி ஹிட் அடித்திருக்கின்றன. உலகம் முழுக்க வைரல் ஹிட் என்றால் அது இந்தியாவிலும் தானே!

அங்கே தான் பிரச்சினை ஆரம்பம்...

இந்திய சோஷியல் மீடியாக்களிலும் வஞ்சனையின்றி இந்த பாகிஸ்தானி இளைஞனின் புகைப்படம் பகிரப்பட்டதில் தொடங்கியது பிரச்சினை. கடந்த மாதம் கஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் 19 இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மக்களிடையே பாகிஸ்தானுக்கு கிளர்ச்சியான மனநிலை அதிகரித்திருந்தது. அதற்கேற்ப மும்பையில் இயங்கும் இந்து அமைப்புகள் பாலிவுட்டில் பாகிஸ்தானி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்யக் கூடாது என எச்சரித்து அறிக்கை விட்டிருந்தனர். இந்த எதிர்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் பாகிஸ்தானி ஹீரோ ஃபாவத் கான் நடிப்பில் வெளிவரவிருந்த ரொமாண்டிக் காமெடித் திரைப்படத்துக்கு மிகுந்த அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மும்பையிலிருக்கும் பாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கூட்டமைப்பினர் பாகிஸ்தானி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை தங்களது திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் பங்கேற்க தடை விதித்திருக்கின்றனர்.

பாலிவுட்டில் பாகிஸ்தானி நடிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கும் இந்த அதகள நேரத்தில் இந்தப் பச்சைக் கண் பேரழகன் அர்ஷாத் கான் தனது குறுகிய காலத்திய உலகப் புகழ் தனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும், தொடர்ந்து  திரைப்படங்கள் மற்றும் சின்னத் திரை தொடர்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது உலகப் புகழுக்கு வரவிருப்பது வளர் பிறையா? தேய்பிறையா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

எது எப்படியோ இந்தியாவில் டீக்கடைக்காரராக உலகப் புகழ் பெற்றவர்கள் வரிசையில்  நமது பிரதமர் மோடிக்குப் பின்  இந்தத் தம்பி தான் அனேகப் பேர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Photo Courtsy : theguardian.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com