எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் ‘நான் கிருஷ்ணதேவராயன்’ நாவல் வாசித்திருக்கிறீர்களா?

மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் வாழ்க்கையை நாவலாக வடித்திருக்கிறார் ரா.கி. இதற்கான இன்ஸ்பிரேஷனாக அவர் குறிப்பிட்டிருப்பது நடிகர் கமல் பரிசளித்த ‘ஐ கிளாடியஸ்’ எனும் ஆங்கில நாவல்.
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் ‘நான் கிருஷ்ணதேவராயன்’ நாவல் வாசித்திருக்கிறீர்களா?

முதலில் தொடர்கதையாக எழுதப்பட்டு பிறகு நாவலானது.

பிரபல எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் ‘நான் கிருஷ்ணதேவராயன்’ எனும் நாவல் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி மூலமாக ஆங்கிலம் கண்டிருக்கிறது. குமுதத்தில் தொடராக வெளிவந்த போது பரவலாக வாசக கவனம் பெற்ற இந்த நாவலை சுகந்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நாவலின் தலைப்பிலேயே கதை என்ன என்பது புரிந்து விடக்கூடும்... ஆம், மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் வாழ்க்கையை நாவலாக வடித்திருக்கிறார் ரா.கி. இதற்கான இன்ஸ்பிரேஷனாக அவர் குறிப்பிட்டிருப்பது நடிகர் கமல் பரிசளித்த ‘ஐ கிளாடியஸ்’ எனும் ஆங்கில நாவல். நாவலை ரா.கி யின் கையில் அளித்த கமல்; இந்த நாவலை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்தால் மகிழ்வேன் என்றாராம். கிளாடியஸை மொழி பெயர்த்தாரோ இல்லையோ, நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான கிருஷ்ணதேவராயரின் வாழ்வை அழகான சரித்திர நாவலாக்கி அளித்து விட்டார் ரா.கி. தற்போது இதை ஆங்கிலப்படுத்திய சுகந்தி கிருஷ்ணமாச்சாரிக்கு இது முதல் மொழிபெயர்ப்பு நூல் இல்லை, இதற்கு முன்பே அவர் எழுத்தாளர் சுஜாதாவின் நைலான் கயிறு நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நாவலை தமிழில் வாசிக்கும் போது கிடைக்கக் கூடிய அத்தனை சுவாரசியமான அனுபவங்களும் ஆங்கிலத்திலும் கிடைக்க வேண்டும் என ஆர்வத்துடனும், மிகுந்த கவனத்துடனும் இதை ஆங்கிலப்படுத்தியது சற்று சிரமமான காரியமாக இருந்த போதிலும், தென்னிந்தியாவில் கோலோச்சிய ஒரு மாமன்னரின் வாழ்வு குறித்து மிகப் பரந்து பட்ட தெளிவை உண்டாக்க இந்த நாவல் துணை நிற்கும் என்பதால் தனது சிரமம் வெகு சீக்கிரத்தில் சுலபமாகி விட்டதாக சுகந்தி தெரிவித்திருக்கிறார்.

ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்கி தஞ்சையிலும், மதுரையிலும் ராயர் சமஸ்தானத்துப் பிரதிநிதிகள் மூலம் தமிழ்நாட்டையும் ஒரு போது ஆண்ட மாமன்னரின் வாழ்வை வெறுமே அரசனுக்குரிய மரியாதைகளோடு மட்டுமாக கடந்து விடாமல் சாதாரண மனிதர்களுக்குரிய சஞ்சலங்கள், காதல், பெருந்தன்மை, கொடை, பாசம், மரியாதை, வீரம் என பல வகையில் விரித்துக் கூறியவாறு நாவல் பயணிப்பதால் தமிழில் அது தொய்வில்லாத வாசிப்பை நல்கியது. ஆங்கிலத்திலும் அவ்வாறே இருக்குமென நம்பலாம். 

வாய்ப்பிருப்பவர்கள் வாங்கி வாசியுங்கள்... நாவல் பிரபலமான அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

நாவல்: I Krishnadevaraya (நான் கிருஷ்ணதேவராயன்)

விலை ரூ.399

Image courtsy: சொல்வனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com