மகாநதியில் ஜெமினி வேடத்தில் துல்கர் சல்மான்

ஜெமினி கணேஷன் அந்தக் கால ‘காதல் மன்னன்’ என அவரது ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர். துல்கர் ஜெமினியின் கதாபாத்திரத்தில் சோபிப்பாரா? என்று படம் வெளிவந்தால் தான் தெரியும்.
மகாநதியில் ஜெமினி வேடத்தில் துல்கர் சல்மான்

பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினாலும் இறங்கினார்கள். அந்தப் படத்தில் இடம்பெறப்போகும் அந்நாளைய பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களில் இன்னின்னவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகப் பரவிக் கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்பது படக்குழுவினரின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு. படத்தில் சமந்தாவும் இருக்கிறார் என்பதால் அவர் ஏற்று நடிக்கவிருப்பது யாருடைய கதாபாத்திரத்தை என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் அந்நாளில் சாவித்திரிக்கு போட்டியாகக் கருதப்பட்ட நடிகை ஜமுனாவின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றார்கள், சில ஊடகங்களிலோ இல்லை, சமந்தா ‘மகாநதி’ திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கவிருக்கிறார் என்றார்கள். ஆனால் அவர் எவருடைய கதாபாத்திரத்தை ஏற்கவிருக்கிறார் என்பது குறித்து படத்தயாரிப்புக் குழுவிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதே நிஜம்.

அதோடு கூட கடந்த வாரத்தில் திடீரென இத்திரைப்படத்தில் அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் நடிக்கவிருக்கிறார் என்றார்கள். கீர்த்தி சுரேஷைக் காட்டிலும் அதிக நடிப்பு அனுபவமும் திறமையும் கொண்ட அனுஷ்கா இப்படத்தில் நடித்தால் அவருக்கான முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று அனுஷ்கா ரசிகர்கள் யோசனையில் இருப்பதாகத் தகவல். சாவித்திரியின் வாழ்க்கைச் சித்திரமான மகாநதியைப் பொறுத்தவரை இன்னும் எதிர்பார்ப்புகள் தீர்ந்த்தபாடில்லை.

இன்று அப்படத்தில் நாயகனாக மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினியின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், நடிகர் மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக செய்தி அடிபடுகிறது. ஜெமினி கணேஷன் அந்தக் கால ‘காதல் மன்னன்’ என அவரது ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர். துல்கர் ஜெமினியின் கதாபாத்திரத்தில் சோபிப்பாரா? என்று படம் வெளிவந்தால் தான் தெரியும்.

அதோடு கூட சாவித்திரி தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிரபலமான 4 தென்னிந்திய மொழிகளிலும் திறமையாக நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகை என்பதால் அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் போது அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த மொழிகளில் பிரதானமாக விளங்கிய அன்றைய சூப்பர் ஸ்டார்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், என்டிஆர், ஏஎன்ஆர், கன்னடத்தில் ராஜ் குமார், உள்ளிட்ட அத்தனை கதாபாத்திரங்களுமே மகாநதியில் இடம் பெற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

தெலுங்குத் தயாரிப்பாளர்களான பிரியங்கா தத், ஸ்வப்னா தத் இருவரது முயற்சியால் அவர்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப் படவிருக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. காரணம் அதில் இடம்பெறப் போகும் பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் இன்றைய பிரபல நடிகர்கள் யார் யார்? எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால். 

Image courtsy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com