கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீனக்குழந்தை?

தற்போது குழந்தைக்கு வெளியில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் குழந்தை அதன் தாயோடு இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தாய் சிறையில் இருப்பதால், குழந்தையும் சிறையில் இருக்கிறது.
கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீனக்குழந்தை?

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு தன் மகளோடும், நண்பரோடும் சுற்றுலா வந்தார் ஜியாலைன் எனும் சீனப் பெண். இந்தியாவில் கடவுளின் தேசமான கேரளாவில் காக்கநாடு பகுதி அவருக்குப் பிடித்துப் போனதால், அங்கிருக்கும் மலையாளி ஒருவரின் உதவியுடன் அந்த ஊரில் வீடெடுத்து தன் மகளோடு தங்குகிறார் ஜியாலைன். திடீரென்று ஒரு நாள் காவல்துறையினர் வந்து ஜியாலைனை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். காரணம் அவரது இந்திய விசா காலம் முடிவடைந்த பின்னும் அவர் இங்கேயே தங்கி இருப்பதாகக் கூறி அவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. ஜியாலைன் சிறை சென்றால் அவரது 4 வயது மகள் என்ன செய்வாள்/. குழந்தையைத் தனியே விட முடியாது. ஜியாலைன் சிறையிலிருந்து வெளிவரும் வரையில் பெண் குழந்தையான ஹான் ரியூ ஹோவைப் பராமரிக்க கேரளாவில் அவர்களுக்குச் சொந்தமென்று எவருமே இல்லை. வாடகைக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுத்த மலையாளியைக் கூட இப்போது கண்ணில் காண முடியவில்லை. ஜியாலைன் கைது செய்யப்பட்டது முதலே அந்த மலையாளி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார்.

தற்போது குழந்தைக்கு வெளியில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் குழந்தை அதன் தாயோடு இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தாய் சிறையில் இருப்பதால், குழந்தையும் சிறையில் இருக்கிறது. அங்கே ஹான் ரியூ ஹோவுடன் விளையாடக் குழந்தைகள் யாரும் இல்லை. அவளது தாயுடன் சேர்த்து மேலும் 5 பெண்கள் இருக்கிறார்கள். விளையாட்டுச் சாமான்கள் என்றெல்லாம் எதுவும் அங்கு கிடையாது. அந்தக் குழந்தைக்குத் தேவையான சைனீஷ் உணவுகளைச் சமைத்து அவளுக்கு சாப்பிடத் தரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் திருச்சூரில், வையூர் எனுமிடத்தில் உள்ள அந்த சிறைச்சாலையில் சைனீஷ் உணவுகளைத் தயார் செய்யும் அளவுக்கு வசதிகள் இல்லாததால் பிற சிறைக்கைதிகள் என்ன உண்பார்களோ, அதே உணவு தான் தற்போது அந்த 4 வயதுக் குழந்தைக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

வாழ்வின் கருணையற்ற சில பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பருவத்தில் தெரியவரும். ஆனால் இந்த சீனக் குழந்தைக்கு அது இத்தனை சீக்கிரம் தெரிய வந்திருக்க வேண்டியதில்லை.

இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டினருக்கான இந்திய பீனல் கோட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விஷயத்தில் ஒரே ஒரு சின்ன ஆறுதல் கடந்த சனிக்கிழமை தாய், மகள் இவருக்குமே பெயில் கிடைத்திருக்கிறது என்பது மட்டுமே! இதுவரை கேரளச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட சிறைக்கைதிகளில் மிக மிக இளம் வயது கைதியாக இந்தக் குழந்தை கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com