பாகுபலி சிவகாமியாக ‘ஜெயப்ரதா’வை யாராவது யோசித்திருக்கிறீர்களா?

ராஜமெளலி பாகுபலியின் சிவகாமி கதாபாத்திரத்துக்காக ஹேமாமாலினி, ஸ்ரீதேவி, மஞ்சு லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் எனப் பலரை அணுகியதாக இணையத்தில் செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன.
பாகுபலி சிவகாமியாக ‘ஜெயப்ரதா’வை யாராவது யோசித்திருக்கிறீர்களா?

70 களின் பிற்பகுதியில் வெளிவந்த ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில்... இது மெளனமான நேரம்... இளமனதில் என்ன பாரம்’ எனக் கேட்டு  தென்னிந்திய ரசிகர்கள் பலரது மனதில் பாரத்தை ஏற்றி வைத்த வெண்ணிறப் பளிங்குத் தேவதை ஜெயப்ரதாவை யாராலும் அத்தனை எளிதில் புறக்கணித்து விட முடியாது. ஜெயப்ரதா தமிழில் 47 நாட்கள், நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசாவதாரம் என மிகக் குறைந்த திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார்.  ஆனாலும் 70 களின் தமிழ் ரசிகர்களால் ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவை இன்றும் கூட மறக்கவே முடிவதில்லை. அப்படி ஒரு ஸ்டைலிஷான நடிப்பைத் தந்திருப்பார் அந்தப் படத்தில்! என்ன தான் அழகாக இருந்தாலும், அபாரமான நடிப்பாற்றல் இருந்தாலும் ஒரு நடிகையால் தனது வாழ்நாளில் எத்தனை மொழிகளில் தான் ஒரே நேரத்தில் ஆக்டிவாக இருந்து விட முடியும்?! இத்தனைக்கும் நடுவில் ஜெயப்ரதா பரபரப்பான அரசியல் வாழ்க்கையையும் கொண்டவராக இருந்தபடியால் தெலுங்கிலும், இந்தியிலும் கவனம் செலுத்த முடிந்த அளவுக்கு தமிழில் அவரால் கவனம் செலுத்த முடிந்ததில்லை. தமிழில் ஜெயப்ரதாவின் படங்களை மேலே சொன்னது போல விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனாலும் தமிழிலும் ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் முதல் சாமானியர்கள் வரை பலதரப்பட்ட வகையில் ஜெயப்ரதாவுக்கென்றே கணிசமாக ரசிகர்கள் இருந்தார்கள்... இருக்கிறார்கள் என்பதும் தான் ஆச்சர்யமான விஷயம். தாங்களும் ஜெயப்ரதா ரசிகர்கள் தான் என்பதை சூப்பர் ஸ்டார்கள் தசாவதாரம் திரைப்பட வெளியீட்டை ஒட்டி நிகழ்ந்த ஒரு மேடை நிகழ்வில், அருகே ஜெயப்ரதாவையும் வைத்துக் கொண்டு கமல் கூற, ரஜினி அதை ஆமோதித்ததாகக் கூட முன்பு செய்திகள் உண்டு. ஒரு தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவில் கலந்து கொண்ட இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ‘நினைத்தாலே இனிக்கும்’ காலத்து ஜெயப்ரதாவின் தீவிர விசிறிகளில் தானும் ஒருவர் என்பதால் தசாவதாரம் திரைப்படத்தின் கமலின் ஜோடிகளில் ஒருவராக ஜெயப்ரதாவைத் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருந்தார்.

‘தசாவதாரம்’ திரைப்படத்துக்குப் பின் கடந்த பத்தாண்டுகளாக ஜெயப்ரதாவை தமிழ் சினிமாவில் யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. தெலுங்கு, கன்னடப் படங்களில் அவ்வப்போது தலைகாட்டினாலும் முழுநேர அரசியல்வாதியாகவே ஜெயப்ரதா தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். இப்போது ‘கேணி’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழுக்கு முகம் காட்டவிருக்கிறாராம் ஜெயப்ரதா. கேணி மலையாளத்தில் ‘கிணறு’என்ற பெயரில் வந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக். இதில் ஜெயப்ரதாவுடன், நடிகர் பார்த்திபனும் இணைந்து நடிக்கவிருக்கிறார். இன்று மக்களின் தலையாய பிரச்னைகளில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை.. அப்படி ஒரு சமூகப் பிரச்னையை மையமாக வைத்து வெளிவந்த படமென்பதால் இந்தப் படத்தில் நடிக்கத் தனக்கு ஆர்வம் வந்ததாக ஜெயப்ரதா தெரிவித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ஜெயப்ரதா; மக்களின் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் உயிரிழந்த ஒரு பேராசிரியரின் மனைவியாக நடிக்கவிருக்கிறார். தன் கணவரின் கனவான அந்தப் பெரும் முயற்சியை அடைய அவரது மரணத்தின் பின் இந்த விதவை மனைவி எப்படி உதவுகிறார் என்பது தான் கதையாம். தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கத் தனது ஆர்வத்தை உறுதிப்படுத்தியுள்ள ஜெயப்பிரதா கதாபாத்திரத் தேர்வுகளில் மட்டும் மிகக் கவனமான போக்கைக் கடைபிடித்து வருவதாகக் கூறி இருந்தார்.

அதோடு... ஒரு பத்திரிகைப் பேட்டியில், மலையாளத்தில் பிரணயம், கன்னடத்தில் ராணி சென்னம்மா என வலிமை வாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே தான் நடிக்க ஆர்வம் காட்டுவதாக ஜெயப்ரதா குறிப்பிட்டுள்ளார். வலிமை வாய்ந்த கதாபாத்திரம் என்று அவர் குறிப்பிட்டிருந்ததால் அதை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு பாகுபலியின் சிவகாமி கதாபாத்திரம் தான் சடாரென ஞாபகம் வந்தது. ராஜமெளலி பாகுபலியின் சிவகாமி கதாபாத்திரத்துக்காக ஹேமாமாலினி, ஸ்ரீதேவி, மஞ்சு லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் எனப் பலரை அணுகியதாக இணையத்தில் செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன. அதில் சிலர் அந்த வாய்ப்பை அவரவர் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்திருந்தனர். முதலில் மறுத்த ரம்யா கிருஷ்ணன் பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து, மிகத்திறன் வாய்ந்த நடிகையாக தனக்கான சிறப்பான இடத்தை இந்திய சினிமா உலகில் தக்க வைத்துக் கொண்டது நாடறிந்த நிஜம். சிவகாமியாக ரம்யா வாழ்ந்திருந்தார் என்பதில் யாருக்கும் இங்கே எந்தவிதமான ஐயங்களும் இல்லை. ஆனால் முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகப் பட்டவர்கள் என்ற லிஸ்டில் ஹேமா மாலினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட ஜெயப்ரதாவின் சமகால நடிகைகளின் பெயர் அடிபட்ட போது ஜெயப்ரதாவும் கூட அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் தானே என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே மேற்கண்ட தலைப்பு!

ஏனெனில் ஜெயப்ரதா இளம் வயதிலேயே முறைப்படி சாஸ்திரிய நடனம் கற்றவர் என்பதால் இன்றும் கூடத் தனது நடன நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். தனது நடன நிகழ்ச்சிகளில் மாஸ்டர் பீஸாக ஜெயப்ரதா குறிப்பிடுவது ‘அம்ராபலி’ நாட்டிய நிகழ்ச்சியைத் தான். அம்ராபலி வைஷாலி ஜனபதத்தின் தலைசிறந்த நடனமாது. சிறந்த புத்த பிக்குணிகளில் ஒருவராக வைத்து இன்றளவும் போற்றப்பட்டு வருபவர். ஜெயப்ரதா ’அம்ராபலியை நாட்டிய நிகழ்ச்சியாக வழங்குகிறார் எனில் அவருடைய சமகால அழகுத் தாரகையாகத் திகழ்ந்த ஹேமாமாலினி, இதே அம்ராபலியின் கதையை தானே அம்ராபலியாக நடித்து தூர்தர்ஷனில் தொடர் நாடகமாகவே வெளியிட்டார். அந்த அளவுக்கு அம்ராபலி ஒரு வலிமை வாய்ந்த பெண்ணாகக் கருதப்பட்டதால் தான் சரித்திரப் புகழ் மிக்க அந்த கதாபாத்திரத்தை அன்றைய அழகுப் பதுமைகளான இந்த இரு நடிகைகளும் தமது திரைப்பங்களிப்பிலும் இணைத்துக் கொண்டனர். 

கடந்த 5 ஆண்டுகளில் வெளிவந்துள்ள இந்தியத் திரைப்படங்களில் வளிமை வாய்ந்த பெண் கதாபாத்திரம் எது எனக்கேட்டால் யாரானாலும் யோசிக்காமல் உடனடியாகச் சொல்லி விடக்கூடிய ஒரு பெயர் பாகுபலியின் சிவகாமி. ஒரு வேளை ஜெயப்ரதா சிவகாமியாக நடித்திருந்தால் எப்படி இருக்கும்? என யோசித்துப் பார்க்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு. அப்படி யோசித்ததின் விளைவே இந்தக் கட்டுரை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com