பதவி உயர்வுடன் கூடிய வெற்றி வேண்டுமா? இதோ 7 கட்டளைகள்!

உங்களுக்குத் தரப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதுதான் சவால் கேள்வி கேட்டுக்
பதவி உயர்வுடன் கூடிய வெற்றி வேண்டுமா? இதோ 7 கட்டளைகள்!

சிலருக்கு வேலை செய்யாமல் இருக்க முடியாது. சிலருக்கு வேலை செய்வது பிடிக்காது. முதலில் சொன்னவர்கள்தான் வெற்றியாளர்கள். இரண்டாமவர் வேறு வழியின்றி வேலைக்குப் போகிறவர்கள். பணத் தேவைக்காக ஏதாவது ஒரு வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அலுவலகம் செல்பவர்கள். நம்மில் பெரும்பாலானவர்கள்.

ஒரு விஷயத்தை கவனித்தீர்கள் எனில் பெரும் பணக்காரராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சாவகாசமாக இருக்க மாட்டார்கள். பணம், மேலும் பணம், மேலும் மேலும் பணம் என்பதுதான் அவர்களுக்கான வேலை விதி. இது ஒரு முடிவிலி எனலாம். எனவே நீங்கள் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அதில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டால்தான் அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த உலகம் ஒவ்வொரு நாளும் போட்டியும் சவால்களையும் எதிர்கொள்ளும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. 

1. சொல்வதை செய்யுங்கள், செய்வதை சொல்லுங்கள்

இது ஒரு பன்ச் டயலாக் போல இருந்தாலும், உண்மை இதுதான். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள். இந்தந்த வேலைகளை இந்த டெட் லைனுக்குள் முடிக்க வேண்டும் எனில் அதை முதலில் பட்டியல் இட்டு பின் ஒவ்வொன்றாக முடித்துவிடுங்கள். ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலை குறுக்கிடும். உடனே எரிச்சல் அடையாமல் எனக்கு எத்தனை கைகள் தான் இருக்கு என்று ஆவேசப்படாமல் எது முக்கியமான வேலையோ அதை முதலில் கையில் எடுங்கள்.

எந்த வேலையாக இருந்தாலும அதை நீங்கள் அணுகும் போது பொறுமையும் நிதானமும் புத்தியில் இருக்க வேண்டும், சுறுசுறுப்பும், வேகமும் செயலில் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும்போது தக்க வகையில் கேள்வி கேளுங்கள். நீங்கள் செய்து முடிப்பேன் என்று உறுதியாகச் சொன்ன அத்தனை வேலைகளையும் திறம்பட செய்து காட்டுங்கள். பாராட்டுக்கள் மட்டுமல்ல பதவி உயர்வும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் உங்களுக்கு வந்து சேரும்.

2. வாயை மூடிப் பேசவும்

பொதுவாக எந்த ஒரு அலுவலகத்திலும் உங்கள் மேல் அதிகாரிகளுக்குப் பிடித்த வார்த்தை 'ok sir'என்பதாகவும், பிடிக்காத வார்த்தை 'why sir'என்பதாக இருக்கும். காரணம் ஒரு வேலை கொடுக்கப்பட்டால் அதை நீங்கள் செய்வதற்காகத்தான் உங்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. கேள்வி கேட்க அல்ல. Why me என்ற கேள்வி தத்துவார்த்தமாகத் தென்பட்டாலும் அது அலுவலகத்துக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதற்கென்னு எதையும் கேட்காமல் மந்தி போல இருக்க வேண்டுமா என்று கேட்பீர்கள் எனில் அதற்கும் பதில் உண்டு. வாயை மூடி பேசுங்கள் அதாவது அடக்கி வாசியுங்கள் என்று அர்த்தம்.

உங்களுக்குத் தரப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதுதான் சவால் கேள்வி கேட்டுக் கொண்டு தலையைச் சொறிந்து கொண்டிருந்தால் அந்த வேலையை செய்பவர்களுக்கு ஆயிரம் பேர் உங்கள் பின்னால் க்யூவில் நிற்பார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் உங்கள் வேலை எதுவோ அதை கவனமாக செய்துவந்தால் வெற்றி நிச்சயம் என்பது வேறு விஷயம், அங்கு தொடர்ந்து வேலை நிச்சயம்.

3. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

நேர்த்தியாக உடை அணிந்து கொள்ளுங்கள். புன்னகையுடன் பளிச்சென்று இருங்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்து முடித்துவிடுங்கள். உங்களுக்குப் பிடிக்காத வேலை அல்லது ப்ராஜெக்ட் தரப்பட்டால் என்ன செய்வது? நம்பிக்கையுடன் இது போன்ற பிரச்னைகளை கையாளுங்கள். உங்களுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாத ஒரு வேலையை கையில் எடுத்துக் கொண்டு, ஜவ்வு போல அதை இழுத்து செய்ய முடியாமல் தவிப்பதற்கு பதில் நீங்கள் உங்கள் நிலையை மேலதிகாரியிடம் விளக்கிப் பேசிவிடுவதே நல்லது. காரணம் நீங்கள் ஒரு வேலைக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் உங்கள் அடுத்தக்கட்ட முன்னேற்றம் கணக்கிடப்படும்.

எப்போதும் நீங்கள் மதிப்பிடப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். Attitude காட்டுவது, டென்ஷனுடன் வளைய வருவது, அடிக்கடி பதற்றம் அடைவது இவையெல்லாம் உங்களுக்கு எதிரிகள். நூறு சதவிகிதம் ஈடுபாட்டுடன் வேலை செய்யுங்கள். உங்களுக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உங்களது தனித்துவத்தை நிலை நாட்டிக் கொள்ள முடியும். அடுத்த படிநிலைக்குத் உங்களை எல்லா விதத்திலும் தயார் செய்து கொள்ளுங்கள்.

4. பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள்

உங்கள் பணி இலக்கு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வேலை செய்யுங்கள். மற்றவர்களை விட வேகமாக ஒருபடி முன்னே செல்லுங்கள். சாதுர்யத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்ப்புகளை திறமையாக கையாளுங்கள். சிந்திப்பதிலிருந்து செயல் ஆற்றுவது வரை அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட ஒரு படி மேலாக இருக்கிறோம் என்பதை உங்களில் வேலையின் மூலம் நிரூபித்துக் கொண்டிருங்கள். மூத்த அதிகாரிகளுடன் தொடர்பில் இருங்கள்.

புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். ஒரு டீமில் வேலை செய்பவராக இருந்தால், நான் என்று தனித்த அடையாளம் தேடாமல் நாம் என்று ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அதே சமயம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை உங்கள் நேரடி அதிகாரிக்கு அடிக்கடி தெரியப்படுத்திக் கொண்டிருங்கள். நீங்கள் சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் தலைமை வரை அது பிரதிபலிக்கும்.

வேகமாக செயல் ஆற்றுவதும், டெட் லைனுக்கு முன்னதாகவே ஒரு வேலையை செய்து முடிப்பதும், ஆர்வத்துடன் ஒரு வேலையை எடுத்துச் செய்வதிலும்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த வயதில் இந்த பதவியில் இருப்பேன் என்பதை நிர்ணயித்துக் கொண்டு, அதை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் உங்களுக்கான பதிவிகளும் வாய்ப்புக்களும் காத்துக் கொண்டிருக்கும்.

5. உறவுகளை பேணுங்கள்

அலுவலகத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு அங்கே நண்பர்கள் தேவையில்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் போட்டியாளர்களே. கலீக்ஸ் என்பவர்கள் எந்த நேரமும் சந்தர்ப்பம் கிடைத்தால் கவிழ்த்து விடப் பார்ப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். அபூர்வமாக நீங்கள் லீவ் எடுக்கும்போது உங்கள் வேலையைச் செய்து தரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினர். 

எதிர்ப்புக்களை இனம் கண்டு கொள்ளுங்கள். மேலும் மற்றவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து அதற்கேற்ப நீங்கள் இருக்க வேண்டும். நீங்களும் அவர்களில் ஒருவர்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். அதற்காக நீங்கள் தனியாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. சக ஊழியர்களின் நட்பையும் ஆமோதிப்பையும் வளர்த்துக் கொள்வதும் முக்கியம். அனைவரிடமும் நீங்கள் நட்புடன் இருங்கள் ஆனால் நெருக்கம் வேண்டாம். நண்பராக்கிக் கொண்டு, சில நாட்களில் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதைப் பார்த்து வருந்துவதை விட, நட்புடன் கைகுலுக்கி ஓரடி விலகி இருப்பதே சாலச் சிறந்தது. உங்கள் வேலையை நீங்களும் அவரது வேலையை அவர்களும் பார்த்துக் கொண்டிருப்பது சுமுகமான ஒரு மனநிலையிலும் வேலை சூழலையும் உருவாக்கித் தரும்.

6. இணக்கமாக இருங்கள்

ஒவ்வொரு அலுவலகத்துக்கு என்றும் ஒரு கோட் ஆஃப் கான்டக்ட் இருக்கும் (Code of conduct). அதற்கேற்றபடி உங்கள் அலுவலக மொழி என்னவோ அதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். விதிமுறைகளை நன்றாக உள்வாங்கி அதைக் கடைபிடியுங்கள். நேரம் தவறாமை, லீவ் விஷயங்கள் இவற்றில் அக்கறை செலுத்துங்கள். உங்களது சொந்தக் கருத்துக்களை உங்களுடன் வைத்துக் கொள்வதுதான் நல்லது. அதே சமயத்தில் உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். மற்றவர்களின் கோபத்தைக் கையாளத் தெரிந்து கொள்ளுங்கள். சார்பு எடுப்பதைவிட நடுநிலையில் இருப்பது நல்லது.  

7. செயல்முறையைச் சாதமாக்கிக் கொள்ளுங்கள்

எல்லா அலுவலகத்திலும் எழுதப்படாத சில சட்டங்கள் இருக்கும். அவை என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி வேலை செய்யுங்கள். hierarchy பற்றி தெரிந்து கொள்ளுங்கள். யாரை எப்படி அழைப்பது என்பது முக்கியம். சில அலுவலகங்களில் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் என அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கலாம். ஆனால் சில அலுவலகங்களில் சீனியர்களை சார் என்று சொல்லி அழைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எது நடைமுறையில் உள்ளதோ அதைப் பின்பற்றுங்கள். முக்கியமானவர்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம்.

நீங்கள் வேறு துறையில் இருந்தாலும் மற்ற துறை உயர் அதிகாரிகள் யார் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையில் முன்னேறுவதற்கான தருணங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையுடன் உறுதியாக இருங்கள். யாருக்காகவும் தவறுகளை மூடி மறைக்காதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com