கருவிலிருப்பது பெண் சிசுவென்பதால் கலைக்கச் சொல்லி சித்ரவதை செய்யும் டாக்டர் கணவன்!

போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அப்பெண்ணின் கணவர் அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவருக்கு ஸ்டேஷனிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருவிலிருப்பது பெண் சிசுவென்பதால் கலைக்கச் சொல்லி சித்ரவதை செய்யும் டாக்டர் கணவன்!

புதுடெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சகப் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார் 42 வயதுப் பெண் ஒருவர். டெல்லியைச் சேர்ந்த ரஜ்னிஷ் குலாட்டி எனும் டாக்டர் வரனுக்கும் இவருக்கும் திருமணமாகிச் சில வருடங்கள் ஆகின்றன. இவர், டெல்லி, குருகிராம், 49 ஆம் செக்டாரில் தன் கணவர் மற்றும் கணவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அவரது கணவர் மேற்கு படேல் நகரில் உள்ள ‘முடித் விஸ்வகர்மா மருத்துவமனையில்’ பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தன்னைக் கருக்கலைப்பு செய்து கொள்ளச் சொல்லி கணவர் வீட்டார் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், அதற்குத் தான் மறுப்புத் தெரிவிக்கையில் கணவரும், கணவரது பெற்றோரும் தன்னை அடித்துச் சித்ரவதை செய்து வீட்டை விட்டே வெளியேற்றி விட்டதாக அப்பெண்மணி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

அவரது புகாரைப் பற்றிப் பேசுகையில் காவல்துறையினர் தெரிவித்த தகவல். ‘அவர் புகார் அளிப்பது, இது முதல்முறை அல்ல, கடந்த ஃபிப்ரவரி மாதம் இதே விதமான புகாருடன் அவர் முன்பே காவல்துறையில் புகார் அளித்து வழக்குப் பதியப்பட்ட போது, அப்போதைய ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபீஸரான பிரமோத்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேவேந்தர் இருவரும் இணைந்து இவ்வழக்கில் தனது கணவருக்கு ஆதரவாக நடந்து கொண்டு தான் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு தன்னை நிர்பந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’ என்று கூறினர்.

ஒரு பெண், மேலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியிலிருக்கும் ஒரு படித்த பெண்மணி, அவர் கடந்த ஃபிப்ரவரி மாதமே, கருவிலிருக்கும் தனது குழந்தைக்கு கணவர், அவரது சகோதரி மற்றும் அவரது பெற்றோரால் ஆபத்து என்று தெள்ளத் தெளிவாக காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தும் கூட அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவான நடவடிக்கையைத் தான் காவல்துறையால் எடுக்க முடிந்திருக்கிறது. புகார் அளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை. மாறாக, அளித்த புகாரை திரும்பப் பெறா விட்டால் தவறான வேறு வழக்குகளில் சிக்கச் செய்து உன் வாழ்வை நிர்மூலமாக்கி விடுவோம் என்று வேறு அவர் காவல்துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரளித்த புகாரை வாபஸ் பெறச்சொல்லு வற்புறுத்தி சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸ் ஸ்டேஷனில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவர் கருவுற்ற பெண் என்றும் பாராமல் அவருக்கு 6 மணி நேரமாக தண்ணீரோ, உண்பதற்கு உணவோ வழங்கும் மனிதாபிமானம் கூட காவல்துறை அதிகாரிகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

அந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அப்பெண்ணின் கணவர் அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவருக்கு ஸ்டேஷனிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதன் பின், பெண்மணி தனக்கான நீதிக்காக திஸ் ஹஸாரி நீதிமன்றத்தை அணுகியதில், சில மாத அவகாசத்தின் பின் நீதிமன்றத்துக்குள் வழக்கு விசாரணையின் போது, இந்தப் பிரச்னையை தாங்கள் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்வதாகவும், தன் மனைவியை தான் மேற்கொண்டு துன்புறுத்துவது இல்லை, எனவே தன் மீதும் தனது பெற்றோர் மீதும் அவரளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படியாகவும் மேற்கொண்டு எவ்விதமான சட்டரீதியான பிரச்னைகளையும் தங்கள் மேல் அவர எழுப்பக் கூடாது எனவும் எழுத்துப்பூர்வமாகத் தன் மனைவி எழுதித் தரவேண்டும் என்றும் அந்த டாக்டர் கணவர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன்படியே நடந்து சமாதானமாகி அவர் தனது மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்தும் சென்றிருந்தார்.

ஆனால், அந்தச் சமாதானம் ஒரு வாரம் கூட நீடித்திருக்கவில்லை. மீண்டும் அப்பெண்மணி தனது கணவர் வீட்டாரால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வீட்டை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார்.

இந்தப் பெண்ணின் தொடர் போராட்டமான வாழ்வுக்கு என்ன தான் தீர்வு?

முன்பு நடந்ததற்கே உரிய நீதி கிட்டாத நிலையில், இப்போது மீண்டும் புதிதாக தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அப்பெண்மணி ஃப்ரெஷ் ஆக ஒரு புகாரைத் தட்டி விட்டிருக்கிறார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இம்முறையாவது அவருக்கு உரிய நீதி கிடைக்குமா? என்று பொருத்திருந்து காண்போம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com