கலப்பினப் பசுவின் பாலால் புற்றுநோய் என்பது வதந்தி - விவசாயியின் பகிரங்க கடிதம்!

வாட்ஸ் -அப் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளில் கருத்தை பகிர்ந்து கொள்பவர்கள் ஒரு சதவீதம் பேர் கூட கால்நடைகளை வளர்த்து அனுபவப்பட்டு இருந்திருக்கமாட்டார்கள் என்பது என் கருத்து.
கலப்பினப் பசுவின் பாலால் புற்றுநோய் என்பது வதந்தி - விவசாயியின் பகிரங்க கடிதம்!

ஐயா,

நான் ஒரு விவசாயி. இன்று நாட்டு மாட்டுப்பால்; ஜெர்சி மாட்டுப்பால் என்று பெரும் சர்ச்சை நடந்து கொண்டு உள்ளது. வாட்ஸ் -அப் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளில் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.  வாட்ஸ் -அப் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளில் கருத்தை பகிர்ந்து கொள்பவர்கள் ஒரு சதவீதம் பேர் கூட கால்நடைகளை வளர்த்து அனுபவப்பட்டு இருந்திருக்கமாட்டார்கள் என்பது என் கருத்து. எனக்கு வயது 52 ஆகிறது. நான் பிறக்கும் போதே என் வீட்டில் எருமை, நாட்டுப்பசு இருந்தன. இவற்றின் குணங்களை நன்கு அறிவேன். எருமை நாட்டுப்பசு இனங்கள் பொதுவாக மூர்க்கத்தனம் வாய்ந்தவை. நம் முன்னோர்கள் அவற்றை பழக்கி பால் உற்பத்திக்காக வீட்டில் வளர்த்தனர்.
 
காலப்போக்கில் உழவனின் உற்ற நண்பனாகவும் தாயாகவும் வலம் வந்தது. சிறிது காலம் வளர்த்து விற்றுவிட்டால் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்காமல் பாசமாக கத்தும். மிகுந்த ஞாபக சக்தியுடனும் இருக்கும். கன்று இல்லாமல் பால் கறக்க முடியாது. ஒரு வேளை பிறக்கும் போது கன்று இறந்துவிட்டால் அந்த கன்றின் தோலை பதப்படுத்தி பொய் கன்று போல் உருவம் செய்தால் மட்டுமே பால் கறக்க முடியும்.

அதேபோல் பாம்பு போன்ற கொடிய விஷ ஐந்துக்கள் அவற்றின் இருப்பிடம் வந்தால் வித்தியாசமாக கத்தும். அதை வைத்து நாம் கவனமாக இருக்கலாம். அன்னியர்கள் பண்ணைக்கு வந்தால் கூட வேறு விதமாக கத்தும். இது கால்நடை பராமரிப்பவர்கள் அறிந்து கொள்ள உதவும். இக்குணங்கள் அனைத்தும் நான் அனுபவப்பூர்வமாக பார்த்து பழகியது. சில நிகழ்வுகளை நேரடியாக பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு.
 
காலப்போக்கில் குளம், குட்டைகள் கானல் நீராகிவிட்ட காரணத்தினால் எருமையினம் குறைந்தேவிட்டது. நாட்டு பசு இனங்களும் குறைந்து வருகின்றன, நம் மூதாதையர்கள் வேலை திறன் மிக்க எருதுகளை உற்பத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டனர். நம் மக்கள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பால் வர்க்க பசுவினங்களை உற்பத்தி செய்ய முன் வராததால் தான் வெளிநாட்டிலிருந்து ஜெர்சி காளை பெறப்பட்டு அவற்றுடன் நாட்டுப்பசு இனச்சேர்க்கை செய்யப்பட்டு கலப்பினப்பசு இனம் ஒன்று புதிதாகப் பரிணமித்தது.

அந்தக் கலப்பினம் தான் இப்பொழுது மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் நாட்டின மாடுகள் கடின வேலைக்கும், உழவுக்கு பாரம் ஏற்றிச்செல்லவும், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபடுத்தப் பட்டும் பெயர் பெற்று விளங்குகிறது. இதுவும் இல்லையென்றால் இந்த இனம் அழிந்துவிடும் நிலையில் உள்ளது என்பது நிஜமே. 

நாட்டின மாட்டில் இருந்து பெறப்பட்ட கலப்பின பசுக்களுக்கும் அழிவு ஏற்படுத்த வாட்ஸ்-அப் போன்ற வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. கலப்பினப் பசுவின் பாலை சாப்பிட்டால் புற்றுநோய் சர்க்கரை நோய் வரும் என்று வதந்தி பரப்பிக் கொண்டுள்ளனர். 

அப்படியென்றால் நாட்டுமாடு வைத்து கோசாலை நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் சரி, அறிஞர் அண்ணாதுரைக்கும் சரி புற்றுநோய் வந்தது எப்படி? ஏன் இவர்கள் இறக்கும் போது கலப்பினப்பசுக்களே வரவில்லையே? அல்லது நாட்டுப்பசுக்கள் காரணமா? 

அவ்வளவு ஏன் நம் நாட்டில் உள்ள 99 சதவிகிதம் பேர் கலப்பின பசுவின் பால்தான் அருந்துகின்றனர். எல்லோருக்குமா புற்றநோய் சர்க்கரைநோய் வந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று மட்டும் கூறுகிறேன். மேலை நாடுகளில் ஜெர்சி பசுவின் பாலை அருந்தித்தான் ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. நாம் தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக்கொண்டு பதக்கபட்டியலில் இடம் பெறுவதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். கால்பந்து விளையாட்டில் தகுதிச்சுற்றுக்கு கூட போவதற்கு உடல்திறன் இல்லை. 

முன்பு நம் நாட்டில் மேய்ச்சல் நிலங்கள் நிறைய இருந்தது. மாடுகளும் தனக்கு தேவையான சத்துக்களை தானே எடுத்துக்கொள்ளும். அது கொடுக்கும் பாலும் தரமானதாக இருந்தது. ஆனால் இன்று அந்த மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் கட்டிடங்களாகவும், இரசாயனம் கலந்த நிலமாகவும் மாறிவிட்டது. மாடுகளும் தீவனம் கிடைக்காமல் மனிதன் பயன்படுத்திய பாலிதீன் பைகளைக் கூட தின்று விடுகின்றன. இதனால் அது கறக்கும் பால் எப்படி தரமானதாக இருக்கும்?.

அதற்காக நாங்கள் இரசாயனம் கலக்காத பசுந்தீவனம் விளைவித்து கலப்பு தீவனத்திற்கு முன்னோர்கள் பயன்படுத்திய புண்ணாக்கு தவிடு தானியங்களில் இருந்து பெறப்படும் பொட்டு, கம்பு, மக்காச்சோளம் என்று நேரடியாக விளைவித்து அளித்து வருகிறோம்.  அதன் மூலம் தரமான பாலை பெறமுடியும். நாட்டுப்பசு குறைந்த அளவு பால் கறப்பதால் நீர்சத்து குறைவு. கலப்பினப்பசுவின் பாலில் நீர்ச்சத்து அதிகம். அவ்வளவு தான் வித்தியாசம். கலப்பினப்பசுவில் நமது நாட்டின் பசுவின் மரபணு இருப்பதால் பாலின் சுவை குறையாமல் உள்ளது. இதே போல் தான் நானும் பராமரித்துள்ளேன். என் பண்ணையில் கலப்பினப்பசு ஒன்று 13 கன்று ஈன்று 21 வயதில் இன்னும் திடகாத்திரமாக உள்ளது. (பசுவின் சராசரி வயது 16) அப்படி என்றால் அது கொடுக்கும் பால் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

அதைவிடுத்து நாட்டு மாட்டுப்பால் A2 வகைப்பால் என்று தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் நமது விளை நிலங்கள் இரசாயனம், பிளாஸ்டிக் இல்லா நிலமாக மாற உதவுங்கள். கறந்த பால் 5 மணி நேரம் வரை கெடாது. அதற்கு மேல் கெட்டுவிடும். ஆனால் 6 மாதம் வரை கெடாது என்று பால் புட்டிகளில், பிளாஸ்டிக் உறைகளில் இட்டு விற்பனைக்கு அனுப்பும் போது கெட்டுப்போகாமல் இருக்க எவ்வளவு இரசாயனம் கலக்கப்படுகிறது? அதை உண்பது நலம் தானா? எனவே ஒருநாளுக்கு மேல் கெட்டுப் போகாமலிருக்கக் கூடிய அத்தனை பால் வகைகளையும் அட்டவணையிட்டு வைத்துக் கொண்டு அவற்றை உட்கொள்ளும் முன்பு, அதனால் விளையும் உடல் நலக்கேடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

"அதோடு அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்க வேண்டும்” என்ற பழமொழிக்கு ஏற்ப பாடுபட்டு கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் அனுபவப்பட்டவன் என்கிற முறையில் நாட்டுப்பாலுக்கும், கலப்பின மாட்டுப்பாலுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

சு.பார்த்திபன், அலங்காநல்லூர்,
செல்:    9865870439.
Email : mani_rv@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com