தவற விடக்கூடாத நேர்காணல் இது! குப்பையில் கொட்டுகிறது பணம்!

சலூன் கழிவுகளில் மிக அதிகமாக விலை கிடைக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது பெண்களின் தலை முடி தான். ஒரு கிலோவுக்கு 2500 ரூபாய்.
தவற விடக்கூடாத நேர்காணல் இது! குப்பையில் கொட்டுகிறது பணம்!

இது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நிகழ்ச்சி என்றாலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் முன்வைக்கப் பட்ட பசுமாடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வுக்கு உதவலாம் என்பதால் மீண்டும் இங்கே பகிரத் தோன்றியது. பால் சுரப்பு வற்றிப்போன பசு மாடுகள் வளர்ப்பு குறித்து மட்டுமல்ல, வேஸ்ட் மேனெஜ்மெண்ட் குறித்தும், பயோ உரம் குறித்தும். மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் உரையாடிப் புரிய வைக்கிறார் இந்த ஸ்ரீனிவாசன்.

ஸ்ரீனிவாசன் மட்டுமல்ல இந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் வரும் மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசியர் வாசுதேவன் அவர்கள் எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து இந்த பூமியை காப்பது குறித்தும் அருமையான தீர்வை முன் வைத்திருக்கிறார். நம்மில் எத்தனை பேர் பிளாஸ்டிக் சாலைகளில் பயணிக்கிறோமோ தெரியவில்லை. ஆனால் இது அருமையான திட்டம். அதைச் சரியாக அரசாங்கம் நிறைவேற்றித் தந்தால் அடிக்கடி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாழடைந்த சாலைகளை சரி செய்கிறோம் என்ற பெயரில் பொது மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்காமல் இருக்கலாம்.

வேலூர் ஸ்ரீனிவாசன், புராஜெக்ட் டைரக்டர் IGS என்பவர், அமீர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’  ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு உரையாடும் நிகழ்ச்சியின் வீடியோ பதிவு இது;

சரி இப்போது மேலே வீடியோவில் உள்ள காட்சிகளை காண முடியாதவர்கள் கீழே அதை நேர்காணலாக வாசித்துக் கொள்ளுங்கள். குப்பைகளை முறையாகக் கையாள்வதில், அதிலிருந்தும் சம்பாதிக்க முடியும் என்பதிலும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இவை;

அமீர்கானின் கேள்வி: நீங்க உங்க புராஜெக்ட்ல உயிரினங்களைப் பயன்படுத்தறீங்க, அது எப்படி?

ஸ்ரீனிவாசன் பதில் : நம்ம எல்லாருக்கும் பசுவைப் பத்தி தெரியும் இல்லையா? பசு நமக்கு பால் கொடுக்குது, ஒரு சில வருசங்களுக்கு அப்புறம் அந்த மாட்டுக்கு பால் சுரப்பது நின்னுடும். அதுக்கப்புறம் மக்கள் அதை வேஸ்ட்னு நினைக்கிறாங்க, ஏன்னா அது பால் கொடுக்கிறதில்லை, அதனால் அது வேஸ்ட், கார்பேஜும் (குப்பைகள்) ஒரு வேஸ்ட். மைனஸ் * மைனஸ்= பிளஸ் தான். அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துடுவோம்.

நாலுமணி நேரத்துக்கு ஒரு தடவை காய்கறி மண்டிங்க, ஃப்ரூட் மார்கெட் இது போன்ற இடத்தில் இருந்து நாங்க கழிவுகளை கலெக்ட் பண்றோம். ஒவ்வொண்ணுக்கும் இயற்கையே காலத்தை நிர்ணயம் பண்ணியிருக்கு. அந்த நேரத்துக்குள்ள அதை பயன்படுத்தினா அது வேஸ்ட் கிடையாது. அது தான் ரா மெட்டீரியல்ஸ், அது தான் ரிசோர்ஸ்.

பால் சுரக்காத பசுக்களை தான் நாங்க வேலைக்கு வச்சிருக்கோம். ஒவ்வொரு 35 கிலோ காய்கனி கழிவுக்கும் நாங்க 1 பசுவை வேலைக்கு வச்சிருக்கோம். அதோட வேலையே சாப்பிட வேண்டியது, சாணம் போட வேண்டியது. அதுக்கப்புறம் செட்ல போய் தூங்க வேண்டியது. இதான் ரிடயர்மெண்ட் லைஃப்.

8 மணி நேரத்துல அது சாப்பிட்ட கழிவுகள்ள 1/4 பங்கு சாணமா வெளில வந்துரும். அதாவது நீங்க குப்பைன்னு சொல்ற அந்த கழிவுப் பொருட்கள் சாணமா வெளில வருது. அந்த சாணத்துல நமக்குத் தேவையான மீத்தேன் இருக்கு. நாங்க அந்த சாணத்தை பயோ டைஜெஸ்டர்ல போட்டுடறோம். அதாவது பயோ கேஸ் பிளாண்ட். அதுல இருந்து 99% மீத்தேன் ஃப்ரீ சாணமா அது வெளில வரும். அதை புழுக்களோட குழியில போட்டுடுவோம். அதுக்கப்புறம் அதுல இருந்து கிடைக்கிற கழிவு அதுவும் 100% அதுங்களோட வயித்துல இருந்து வந்தது. அதுக்கு பெயர் வெர்மிகேஸ்ட். உலகத்துலயே சிறந்த உரம் இது. இந்த மண்புழு கழிவை பிளாக் கோல்டுன்னு சொல்வாங்க. இதை நேரடியா பூமியில உபயோகப்படுத்தலாம். மத்ததுல பாக்டீரியல் டீகம்போஸ் மூலமா டீகம்போஸ் பண்றதுக்கு 45 நாட்கள் ஆகும். இப்போ ஒரு உதாரணம் சொல்றேன். திங்கட்கிழமை காலைல 6 மணிக்கு அம்மா வீட்ல காய்கறி நறுக்கறாங்க. 9 மணிக்கு எங்க வண்டி வந்து அந்த வேஸ்டை கலெக்ட் பண்ணிடும். 10 1/2 மணிக்கு அதை பசுக்களுக்கு போட்டு விடுவோம். 6 மணிக்கு சாணமா அது ரெடி ஆயிடும். அதை பயோ டைஜெஸ்டர்ல போட்டா மீத்தேன் இல்லாத சாணமா வெளில வந்துடும்.உடனே அதை மண்புழு குழியில போட்டுடுவோம். மறுநாள் மாலையோ அல்லது அதுக்கடுத்த நாள் காலையோ அதாவது 72 மணி நேரத்துக்குள்ள நம்ம கைல பிளாக் கோல்டு இருக்கும். உலகத்துலயே இது தான் ரொம்ப வேகமான புராசஸ் எந்த மெஷினாலயும் இதை செய்ய முடியாது. செயற்கை சக்தியோட உதவி இல்லாம.

உங்க கிட்ட செல்ஃபோன் இருக்கு. சார்ஜ் இல்லைன்ன அது யூஸ்லெஸ். டெக்னாலஜி ஃபெய்லியர். ஆனா பசுக்களோ எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு அதை எனர்ஜியா மாத்தி நமக்குத் தருது. மாட்டை தினமும் ரீசார்ஜ் பண்ணாமலேயே.

கேள்வி: மற்ற பிராணிகளை எப்படி பயன்படுத்தறீங்க? அதாவது கோழி என்ன பண்ணுது?

பதில்: சில நேரத்தில் பசுக்கள் சாப்பிட முடியாத கழிவுகளும் வரும். அதை கம்போஸ் பெட்டில் போட்டு விடுவோம். அந்த கம்போஸ் பெட்டில் இருந்து சின்னச் சின்ன புழுக்கள் வரும். கோழிகளுடைய முக்கிய உணவே புழுக்கள் தான். இதை சாப்பிட்டு விட்டு கோழிகள் அழகான முட்டைகளை நமக்குத் தருது. புழுக்களை பார்த்து முகம் சுளிக்கிறவங்க மறுநாள் காலையில டேபிள்ள உட்கார்ந்துட்டு அந்த ஆம்லெட்டை சாப்பிடுவாங்க. எந்த டெக்னாலஜியாலயும் இது சாத்தியம் கிடையாது. உலகத்துல இருக்கற எந்த டெக்னாலஜியாலயும் புழுக்களைத் தூக்கி மெஷினில் போட்டால் அதை முட்டைகளாக மாற்ற முடியாது. இதுல கோழிகளுடைய பங்கு கொஞ்சம் குறைவு தான். கோழிகளைப் பொறுத்தவரை அதுங்களோட நெகட்டிவ் என்னன்ன அதுங்க ராத்திரியில வேலை செய்யாது. 

கேள்வி:  அப்போ நைட் யாரு வேலை செய்வாங்க?

பதில்: அதுக்காக தான் நாங்க தவளைங்கள அப்பாயிண்ட் பண்ணியிருக்கோம். தவளைங்க நைட் ஷிஃப்ட்ல வேலை செய்யும். நைட் ஷிஃப்டும், டே ஷிஃப்டும் இயற்கையே உருவாக்கியிருக்கு. இவங்க எல்லாரும் சம்பளம் இல்லாம, யூனியன் இல்லாம, போனஸ் எதுவும் கேட்காம, ஸ்ட்ரைக் எதுவும் பண்ணாம வேலை செய்றாங்க.

சரி இந்த வாத்துகள் எல்லாம் என்ன பண்ணுது?
வாத்துகளுக்கு பிடிச்ச உணவு மீன். ஆனா முனிஸிபல் கார்ப்பரேஷனுக்கு மீன் கழிவால பிரச்சினை. அவங்களுக்கு மீனால பிரச்சினை, இதுங்களுக்கு மீன் தேவை. 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த மீன் கழிவுகளை கலெக்ட் பண்ணி வாத்துக்களுக்கு போட்டோம்னா உடனே சாப்பிட்டு விடும்.கம்போஸ் ஆவதற்கு 120 நாட்கள் ஆகக்கூடிய கழிவுகளை 15, 20 நிமிஷத்துல சாப்பிட்டு விட்டு அழகான முட்டைகளாக கொடுக்குது. சாதரணமா வாத்துகள் மாசத்துக்கு 8 லிருந்து 10 முட்டைகள் தான் இடும். ஆனால் நாங்கள் மீன்கள் மற்றும் மாமிசக் கழிவுகளை உண்ணத் தருவதால் எங்களுக்கு மாசத்துக்கு 24 முட்டைகள் கிடைக்குது.
எங்க கிட்ட 11 பெண் வாத்துகளுக்கு 1 ஆன் வாத்து வீதம் இருக்கு.

ஏன் அப்படி 11 பெண் வாத்துகளுக்கு 1 ஆண் வாத்து? எப்படி?

நிறைய முட்டைகளுக்குத் தான். 11 பெண் வாத்துகளுக்கு 1 ஆன் வாத்து போதும்.

அப்போ இந்தப் பிராணிகள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு?

அவங்க தான் ரொம்பப் பிரமாதமா வேலையும் செய்றாங்க. நல்ல பலனையும் தராங்க.

இப்ப நீங்க எந்தப் புராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கீங்க?

இப்ப நான் கோயம்பத்தூர் புராஜெக்ட்ல இருக்கேன். கோயம்பத்தூர் DRDA. டிஸ்ட்ரிக்ட் ரூரல் டெவலப்மெண்ட் ஏஜன்ஸி. நாங்க 10 கிராமப் பஞ்சாயத்துகளை ஒரு பிலாக்கா சேர்த்து செயல்படுகிறோம். இது ஒரு முனிஸிபாலிட்டிக்குச் சமம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு கிராமத்துல இது சாத்தியம். ஒரு சின்ன அளவுல இதைச் செய்ய முடியும், இதையே பெரிய அளவுல நகரத்துல பண்ணனும்னா உங்களோட இந்த திட்டம் சாத்தியப் படுமா?

சொல்லப்போனா ஒரு முனிஸிபல் கார்ப்பரேஷனுக்கு நகரத்துக்குள்ள இடம் ரொம்பக் குறைச்சலா தான் இருக்கு. நாம கழிவுகளை புராசஸ் பண்ண 100 கிமீ தாண்டி போக வேண்டியதில்லை. இதை நகரத்துக்குள்ளயே ஒவ்வொரு பகுதியிலயும் புராசஸ் பண்ண முடியும். இதான் டீசெண்ட்ரலைஸேசன் மெத்தட்.

டீசெண்ட்ரலைஸேசன் மெத்தட்?

எல்லாரும் டன் கணக்குல பேசறாங்க. எதுக்கு டன் கணக்குல பேசணும். இப்ப நான் ஒரு பெரிய பலாப் பழத்தை கொடுத்தா உங்களால சாப்பிட முடியாது. அதை துண்டு துண்டா வெட்டினால் தான் எல்லாராலயும் சாப்பிட முடியும். அதனால் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர்லயும் ஒரு எஸ் எல் ஆர் எம் செண்ட்டர் இருக்கணும்.

எஸ் எல் ஆர் எம் செண்ட்டர்ன்னா என்னது?

சாலிட்& லிக்விட் ரிசோர்ஸ் மேனெஜ்மெண்ட் செண்ட்டர். ஒவ்வொரு 2 கிமீ நடுவுலயும் இந்த மாதிரி ஒரு சென்ண்டர் இருக்கனும்.

நான் டீசெண்ட்ரலைஸேசன் மெத்தடோட வெற்றியைப் பத்தி உங்க கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். டீசெண்ட்ர்லைஸ் முறையில கலெக்ட் பண்றதும் இன்னொரு இஸ்யூ. உதாரணமா நம்ம சலூன்கள்ள 6 வகையான கழிவுப் பொருட்கள் வெளியில் வருது.

அது என்னது?

அதாவது பெண்களின் தலைமுடி, ஆண்களின் தலைமுடி, பிளேடு, ஷேவ் பண்ணதுக்கப்புறம் பேப்பர்ல வைக்கிற கிரீம், இன் ஆர்கானிக் பொருட்களான காஸ்மெடிக் கழிவுகள், ஆர்கானிக் பொருட்களான உணவு மற்றும் பூ கழிவுகள். அதாவது இது மாதிரியான சலூன் கழிவுகளை மற்ற குப்பைகளோடு கலக்க கூடாது. அதனால் சலூன் கழிவுகளை கலெக்ட் பண்ண ஒரு வண்டி அனுப்புவோம். அதாவது ஒரே மாதிரியான கழிவுகளை கலெக்ட் செய்ய ஒரே குறிக்கோளுடன் பல வண்டிகள் சலூன் குப்பைகளை கலெக்ட் செய்தால் அவற்றை உடனே பிரித்து  அன்று மாலைக்குள் விற்று விடலாம்.

சலூன் கழிவுகளில் மிக அதிகமாக விலை கிடைக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது பெண்களின் தலை முடி தான். ஒரு கிலோவுக்கு 2500 ரூபாய்.

அதாவது ஒருநாளைக்கு சேகரிக்கப்படும் குப்பையானது அந்த நாள் முடிவதற்குள்ளாகவே உபயோகமுள்ள பொருளாக மாறி விடுகிறதா?

ஆமாம். அதை தனியாக சேகரிச்சோம்னா.

முக்கியமா கவனிக்க வேண்டிய விசயம்னா இதுல எதையும் ஒன்னோட ஒன்னா கலக்கக் கூடாது. தனித் தனியா சேகரிச்சு தனித் தனியா எடுத்துட்டுப் போகனும்.

இது விசயமா உங்க கிட்ட மாஸ்டர் பிளான் ஏதாவது இருக்கா?

ஆமாம். இருக்கு

இப்ப நீங்க சொன்னீங்களே உங்க மாடல் இதுக்கு எவ்வளவு செலவாகும்?

இது வந்து செல்ஃப் சஸ்டெயினபில் திட்டம். நான் என்னோட அனுபவத்தை வச்சு சொல்றேன். ஒரு முனிஸிபல் கார்ப்பரேஷன்ல மக்கள் போடற குப்பையிலருந்து குறைஞ்சது 3 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

அதாவது என்கிட்டயிருந்து குப்பைகளை எடுத்துகிட்டு எனக்கு 3 ரூபாய் கொடுப்பீங்களா?

இல்லை இல்லை எங்களுக்கு 3 ரூபாய் கிடைக்கும். அதாவது எந்த ஒரு கட்டணமும் இல்லாம அந்தக் குப்பைகளை 3 ரூபாய் மதிப்புடையதாக மாற்றி விட முடியும்.

மும்பை மாதிரி ஒரு பெரிய நகரத்தை சுத்தப்படுத்தும் வேலையை உங்க கிட்ட கொடுத்தா அந்த வேலையை செய்து முடிக்க உங்களுக்கு எத்தனை கால அவகாசம் தேவைப்படும்?

குறைந்தது 18 மாதங்கள்

அதாவது 11/2 வருடம் அப்படின்னா ஒன்றரை வருடத்தில் நீங்க மும்பையை ஒரு கிளீன் சிட்டியா மாத்திடுவீங்க!

ஆமாம்.. முடியும்.

Video courtsy: vijay t.v, youtube.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com