திருக்குறள் ஒப்பித்தால் தான் ஜாமீன் வழங்க முடியும்! கோவை நீதிபதியின் புதுமையான நிபந்தனை!

திருக்குறள் ஒப்பித்தால் தான் ஜாமீன் வழங்க முடியும்! கோவை நீதிபதியின் புதுமையான நிபந்தனை!

திருக்குறளை விட வாழ்வைப் போதிக்க சிறந்த மாற்று எதுவுமில்லை. ஆனால் அந்த மூன்று மாணவர்களும் இந்த நிபந்தனையை நேர்மையாகக் கடக்க வேண்டுமே. அதிலிருக்கிறது நிபந்தனையின் வெற்றி.

கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் கடந்த திங்களன்று காரமடைப் பகுதி பாலாஜி நகர்ப் பக்கம் வந்தனர். வந்தவர்கள் மேலும் குடிப்பதற்கு தங்களிடம் பணம் இல்லாததால் அங்கிருந்த குடியிருப்புவாசியான 41 வயது செளடமுத்துவிடம் குடிக்கப் பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் ஒரு மாணவன் செளடமுத்துவை தாக்கியிருக்கிறான். இதனால் கோபமான செளடமுத்து பொறியியல் மாணவர்கள் குடித்து விட்டுத் தகராறு செய்வதாக காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காரமடை காவல்நிலையத்தில் செக்சன் 323 (வலியத் தாக்குதல்) செக்சன் 394 (பணத்திற்காக வலிந்து தாக்குதல்) மற்றும் செக்சன் 506 (கொலை மிரட்டல்) ஆகிய மூன்று செக்சன்களின் கீழ் வழக்கு பதிவானது. இதனடிப்படையில் மூன்று மாணவர்களும் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்த மூன்று மாணவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் கேட்டு மாணவர்கள் சார்பாக வழக்கறிஞர் ரஹ்மான் சார்பாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் பெட்டிசன் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளியன்று பெட்டிசனை விசாரித்த நீதிபதி K.சுரேஷ் குமார் வித்யாசமான நிபந்தனையின் கீழ் அந்த மூன்று மாணவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாணவர்களும் 10 நாட்களுக்குள் தினம் 10 குறள்கள் வீதம் 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்பிக்க வேண்டும். நிபந்தனையின் கடைசிநாளன்று 100 குறள்களும் மாணவர்களால் மனப்பாடம் செய்ய்யப்பட்டு, ஒப்பிக்கப்பட்டதாக அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகே ஜாமீன் வழங்கப் படும். இது தான் கோவை நீதிபதியின் உத்தரவு.

வாழ்வின் அனுபவங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்கள் குடித்து விட்டு குடிக்க காசு கேட்டு சக மனிதனை தாக்கியதும், மிரட்டியதும் மிக மோசமான செயல். அவர்களுக்கு இம்மாதிரியான தண்டனை தேவை தான். திருக்குறளை விட வாழ்வைப் போதிக்க சிறந்த மாற்று எதுவுமில்லை. ஆனால் அந்த மூன்று மாணவர்களும் இந்த நிபந்தனையை நேர்மையாகக் கடக்க வேண்டுமே. அதிலிருக்கிறது நிபந்தனையின் வெற்றி. எப்படியாயினும் இப்படி ஒரு வித்யாசமான நிபந்தனையை தண்டனையாக வழங்கிய நீதிபதியைப் பாராட்டியே ஆகவேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com