கோலம் போட்டு கின்னஸ் சாதனை புரிந்தவர்!

போலந்து நாட்டில் நமது கோலத்தை "மண்டேலா' என்ற பெயரில் போடுகிறார்கள். அங்கு அது மிகவும் பிரபலம். அதுபோன்று நமது கோலத்திற்கும் ஒரு அங்கீகாரம் வரவேண்டும் என்பது எனது ஆசை.
கோலம் போட்டு கின்னஸ் சாதனை புரிந்தவர்!

எவரஸ்ட் மலையில் ஏறித்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு கனவிருந்தால் அதற்கான முயற்சியிருந்தால் எவரும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் விஜயா மோகன். வெளிநாடுவாழ் தமிழரான இவர், தற்போது வசித்து வருவது சிங்கப்பூரில். கின்னஸ்  வேல்ர்ட் ரெக்கார்ட், 16 சிங்கப்பூர் ரெக்கார்ட், ஹைதராபாத்தின் பாரத் கௌரவ் அவார்ட், சிங்கப்பூரின் கம்யூனிட்டி அவார்ட் என கணக்கிலடங்கா விருதுகளை தன்வசமாக்கியிருக்கும் இவர் சாதித்த துறை? தமிழரின் பாரம்பரிய கலையான கோலம் போடுவது.  கோலம் போடுவது எல்லாம் சாதனையா என்றால்? தனியாளாக 2800 சதுர அடியில் 7 மணி நேரத்தில் கோலம் போட்டிருப்பது நிச்சயம் சாதனை தானே! இதைப் பற்றி அவரிடமே கேட்போம்:

"எனக்கு பூர்விகம் ஸ்ரீரங்கம். பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான். திருமணத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் மும்பையில் இருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூர் சென்றோம். எனக்கு சிறு வயதில் இருந்தே கோலத்தின் மீது ஒரு ஈர்ப்பும் ஆர்வமும் உண்டு.  சிங்கப்பூர் சென்றதும்,  அங்கேயும் நமது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் வாசலில் கோலமிடுவேன். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிசயிப்பார்கள். இப்படி தினம்தோறும் வேடிக்கைப் பார்த்தவர்களில் சிலர் ஏன் இப்படி கோலமிடுகிறீர்கள்? என கேட்க,
கோலம் எங்களது கலாசாரம், பாரம்பரியம். ஒரு வீட்டு வாசலில் கோலம் இல்லை என்றால் அந்த வீட்டில் பெண் யாரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்கள் உணர்வோடு கலந்துவிட்டது கோலம். கோலமிடுவதும் ஒரு யோகா பயிற்சி போன்றதுதான்.  தினம் தோறும் விடியற்காலை எழுந்திருந்து வாசலில்  குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது உடற்பயிற்சி செய்வது போன்றது.

மேலும் காலை நேரத்தில் காற்றில் அதிகப்படியான ஆக்ஸிஜன் இருக்கும். அதை சுவாசிக்கும்போது சுத்தமான ஆக்ஸிஜன் நம் மூளைக்குள் சென்று நரம்பு மண்டலங்களை துண்டிவிடுகிறது. இதனால் அன்றையநாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைக்கிறது. அதுபோன்று கோலத்தில் இடும் வண்ணப் பொடி நமது உடலில் உள்ள சக்கரங்களை ஆக்டிவேட் செய்கிறது. வண்ணங்களை கண் பார்ப்பதினால் உடலுக்கு நல்ல பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கிறது. வண்ணநிறங்களைப் பார்ப்பதும் ஒருவித தியானப்   பயிற்சியாகும். இது நாள்முழுவதும்  நம்மை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.

மேலும் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் அழுத்திதான் கோலமிடுகிறோம். இது சின் முத்திரையில் உள்ள ஒரு பயிற்சியாகும். கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் அழுத்தும்போது உடம்பில் உள்ள ரத்த ஓட்டம் அளிக்கிறது. இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும் அதிகரிக்கிறது. இன்னொரு விஷயம் இது ரிஷிகளும், முனிவர்களும் உருத்திராட்ச மாலையை உருட்டுவது போன்ற பயனைத் தரும். இது உடலுக்கு எமோஷனல் பேலன்ஸ் கொடுக்கும். இது சைக்காலாஜிக்கல் ரீசன். ஆன்மிக நோக்கத்தில் பார்த்தால்  கோலம் என்பது கடவுளுக்கு நாம் மனதார செய்கிற அர்ப்பணமாகும். எப்படியென்றால் கடவுளுக்கு படைக்கும் பிரசாதங்களை திருப்பி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் கோலத்தை போட்டுவிட்டால் திருப்பி எடுக்க முடியாது. நாம் அழகாக கோலமிட்டு அலங்கரித்து ஆராதனை செய்யும்போது அதில் கடவுள் மனம் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை என்று விளக்கினேன்.  அது அவர்களுக்கு பிடித்துப்போக தங்களுக்கும் கோலம் வரைய கற்றுத் தரும்படி அங்கிருந்தவர்கள் கேட்டார்கள்.

இப்படி விளையாட்டாக ஆரம்பித்தது. தற்போது சிங்கப்பூரில் எனக்கென்று ஒரு அடையாளத்தை  உருவாக்கி கொடுத்திருக்கிறது. மேலும் நான் ஆர்ட் தெரபி படித்திருக்கிறேன். ஆர்ட் தெரபி என்பது, கலை மனோவியல் தத்துவம். அதாவது கலைமூலமாக நம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுவது. அதனால் வெறும் கோலமாக இல்லாமல் கோலத்தையே ஒரு கிராப்ட் செய்வது போன்று குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறேன். 

அது போன்று கோலப் பொடி, கலர் பொடி தவிர,  பூக்கள், பழங்கள், கறிகாய், வளையல், காதுகுடையும் பட்ஸ், மரத்தூள், டைல்ஸ், முகம் பார்க்கும் கண்ணாடி, ஸ்பூன் என 50 வகையான பொருள்களை வைத்தும் கோலமிட்டு வருகிறேன். இதுபோன்று பல பொருள்களை வைத்து கோலமிடும்போது அதன் பிசிக்கல்வேல்யூ என்ன? ஆன்மிக வேல்யூ, அதனால் கிடைக்கும் பயன்கள், பலன்கள் என  எல்லாவற்றையும் கட்டுரையாக எழுதி சிங்கப்பூரில் உள்ள நேஷனல் ஆர்ட் கவுன்சிலுக்கு கொடுப்பேன். அதற்காக அவர்கள் எனக்கு நிதியுதவி அளித்துவருகிறார்கள். 

அடுத்து என்னுடைய புரொஜக்ட் பஸில் ரங்கோலி வரும் ஏப்ரல்  மாதத்தில் நடக்கவுள்ளது. ரங்கோலியை பஸில் ஆக்கிவிட்டு டிமென்சியா  குழந்தைகள், மாற்றுத்  திறனாளி குழந்தைகளிடம் கொடுத்து அதைச் சேர்க்கச் செய்வது. அடுத்து மே மாதத்தில் அமெரிக்காவில் யூனிவர்சிட்டி, பள்ளி, கல்லூரிகள், கல்சர் சென்டர்  போன்றவற்றிற்கு சென்று  நமது கோலக் கலையை வரைய கற்றுக் கொடுக்கிறேன். அரிசி மாவை வைத்து கையால் கோலமிடுவதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறைதான் சென்று வருவதால் அங்குள்ள குழந்தைகள் ஆன் லைனில் கற்றுக் கொடுக்கும்படி கேட்கிறார்கள். 

போலந்து நாட்டில் நமது கோலத்தை "மண்டேலா' என்ற பெயரில் போடுகிறார்கள். அங்கு அது மிகவும் பிரபலம். அதுபோன்று நமது கோலத்திற்கும் ஒரு அங்கீகாரம் வரவேண்டும் என்பது எனது ஆசை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரிசிமாவில் கோலமிடுகிறார்கள், கேரளாவில் பூவில் கோலமிடுகிறார்கள்.  வட இந்திய பகுதிகளில் இன்னும்  ஆதிவாசிகள், பழங்குடியினர் சுண்ணாம்பு கற்களை  பெயிண்ட் போன்று கரைத்து, மரப்பட்டையை பிரஷ் போன்று வைத்து சுவர்களிலும் கோலமிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு  கோல டிசைனிற்கும் உள்ள தத்துவம் என்ன? ஏன்? அவர்கள் அந்த பொருள்களை பயன்படுத்துகிறார்கள். அதன் பலன் என்ன? அதனை வரைந்தால் பயன் என்ன?   என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்து  வருகிறேன். விரைவில் ஒரு புத்தகமாக எழுத உள்ளேன். கோலத்தில் பி.எச்.டி செய்யவும் முயற்சித்து வருகிறேன்.

இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான கோலங்கள் போட்டு வைத்துள்ளேன். கோலத்திற்கான கண்காட்சியை சிங்கப்பூரில் மட்டுமில்லாமல் நியூயார்க், யூ.எஸ்., மொரிஷியஸ், மியான்மர், ஆஸ்திரேலியா, அபுதாபி என பல நாடுகளிலும் ஆண்டு தோறும் நடத்தி வருகிறேன். நமது பாரம்பர்ய கலையான கோலத்தை பல நாடுகளிலும் பரப்பி வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது''
என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com