ஜாதகம் என்ன செய்யும்? காத்திருப்பது முதல்வர் நாற்காலியா? சிறைச்சாலையா?

ஜாதகம் என்ன செய்யப்போகிறது சசிகலாவை? காத்திருப்பது முதல்வர் நாற்காலியா? சிறைச்சாலையா? விரைவில் தெரிந்து விடும் என நம்புவோம்.
ஜாதகம் என்ன செய்யும்? காத்திருப்பது முதல்வர் நாற்காலியா? சிறைச்சாலையா?


ஜாதகப்படி சசிகலாவுக்கு முதல்வராக வாய்ப்பு உண்டா?!

இணையத்தில் எதையோ தேடப் போக இப்படி ஒரு  சோதிடக்கட்டுரை கண்ணில் பட்டது. 2 கூட்டுத்தொகை வரும் படி 29 ஆம் தேதிகளில் 11, ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்தப் பிறவியில் எத்தனக்கெத்தனை பிரபலங்கள் ஆகி உலகப் புகழ் ஈட்டுகிறார்களோ அத்தனைக்கத்தனை சமூகத்தின் முன் வழக்குகளில் சிக்கிச் சீரழித்து சின்னாபின்னமாவார்கள் என்பதே அவர்களின் ஜென்ம தினப்பலனாம். 2, 11, 29 தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது ஏழேழு பிறவிகளுக்குமான ஒட்டுமொத்த பாவங்களையும் இந்த ஒரே பிறவியில் அனுபவித்து முடித்து விடுவார்களாம். அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று நீள்கிறது அக்கட்டுரை. அதாவது அடுத்தொரு பிறவியெடுத்து செய்து முடிக்கலாம் என எந்தப் பாவங்களையும் அவர்கள் மிச்சம் வைக்க மாட்டார்கள். எல்லாப் பாவங்களையும் இந்தப் பிறவியில் உச்சகட்டமாக நிகழ்த்தி பிறவி முடிப்பார்கள் என்று நீங்கள் அர்த்தப் படுத்திக் கொண்டால் அதற்கு  கட்டுரை பொறுப்பல்ல.

கட்டுரையின் சாராம்சம் தமிழகத்தின் இன்றைய குழப்பக் கூத்தோடு சற்றே தொடர்புடையதாயிருக்க கூடும் எனத் தோன்றியதில்  அதில் பட்டியலிடப்பட்டிருந்த உள்ளூர் பிரபலம் முதல் அகில உலகப் பிரபலம் வரை அன்னார்களது பிரதாபங்களை வாசித்து முடித்தேன்.  பிரபலங்களின் பிரதாபங்கள் ஒவ்வொன்றும் வாசித்து முடிக்கையில் பாண்டியராஜன் திரைப்படக் காமெடி சாயலில் ‘மாமா பிஸ்கோத்து ... பிம்பிளிக்கி பிய்யா பி’ என்று தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடத் தோன்றியது.  

முதல் பிரபலம் சஞ்சய் தத் ஜூலை 29 ஆம் தேதியில் பிறந்தவர். சில வருடங்களுக்கு முன் வரை சஞ்சய் தத் சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறை சென்று மீண்டார். தத் ஆயுதம் பதுக்கி வைத்திருந்து சிறை சென்றது சுதந்திரப் போரட்டத்துக்காகவோ அல்லது  நமது தமிழக இளைஞர்கள் செய்த ஜல்லிக்கட்டு புரட்சி போன்ற ஏதோவொரு நற்கிளர்சிக்கு உதவுவதற்காகவோ அல்ல. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக சந்தேகித்து அவர் மீது வழக்குப் பாய்ந்தது.

அடுத்ததாக பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன். பிறந்த தேதி ஆகஸ்டு 29. ஜாக்ஸன் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகப் போடப்பட்ட வழக்கில் சிறை சென்று, வழக்கிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் தனது பலகோடி ரூபாய் சொத்துக்கள் முதல் உயிர் வரை அனைத்தையும் இழந்தது உலகறிந்த செய்தி.

ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கி இன்று வரை சட்டத்தின் முன் மறைமுக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். அன்னாரும் அகில உலகப் பிரபலமே. இவர்கள் அனைவரும் 29 ல் பிறந்தவர்கள்.

இனி பெயரின் கூட்டுத் தொகை 29 வருவதால் துன்பக் கேணியில் உழல்வதாகக் கருதப்படுபவர்கள் யாரெல்லாம் என்று பார்க்கலாம்.

மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குறையாக அயல்நாடுகளுக்குத் தப்பியோடி தஞ்சமடைந்து மறைமுக வாழ்வு நடத்தி வரும் வங்கிக் கடனாளியும், கிங் ஃபிஷர் பீர் கம்பெனி முதலாளியுமான விஜய் மல்லையாவின் நியூமராலஜி கூட்டுத் தொகை 29.

வெளிநாட்டில் ஃபேஷன் டிஸைனராக குப்பை கொட்டப் போய் பாலியல் வழக்கில் சிக்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஸைனர் ஆனந்த் ஜோன் நியூமராலஜி கூட்டுத் தொகையும் 29.

இவர்கள் பிறந்த அல்லது பெயர் நாமகரணம் செய்யப்பட்ட எண்களின் கூட்டுத் தொகையால் திருவாளர்கள் பெற்றுப் பேணிக் காத்த விசேஷ குணங்களாக சோதிடம் பட்டியலிட்டுள்ளவறைப் பாருங்கள்;

29 ஆம் தேதி பிறந்தவர்கள் பொதுவில்;

  • மிகவும் தந்திரமானவர்களாக இருப்பார்கள்; இவர்களைக் கணிப்பது மிகவும் கஷ்டமான காரியம்.
  • 2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.அவர்களது மனதிலிருக்கும் எண்ணங்களை அறிய முயல்வது கடினம். 
  • அவர்கள் தங்களது ஈகோவைக் கட்டுப்படுத்தி எப்போதெல்லாம் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்த பாயிண்ட்டிற்கு மிகச் சிறந்த உதாரணமாக லாலு பிரசாத் யாதவைக் சுட்டுக்காட்டுகிறது அந்த சோதிடக் கட்டுரை. ஏனெனில் அவர் பிறந்தது ஜூன் 11.
  • மேலும் அவர்கள் விளையாட்டுப் பிரியர்களாகவும் இருப்பார்கள்!!!
  • அதிகார மிக்க பதவிகளுக்கான ஏணிகள் அவர்களுக்கு வாகாக சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். மிஸ்டர் அல்லது மிஸஸ் பிரபலம் அதன் முதல் படியில் காலை வைத்தாலே போதும் சர்ரென்று எஸ்கலேட்டர் போல ஏணி அவரை மேலேற்றிச் சென்று விடுமாம்.

சரி இந்தக் கட்டுரைக்கும் சசிகலா முதல்வராவதற்கும்  என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அடடா சம்பந்தம் இருக்கிறது. அதாகப்பட்டது சின்னம்மா பிறந்த நாளும் 29 தான்!? ஜனவரி 29, 1957 ல் பிறந்தவர் சசிகலா. 29 ல் பிறந்து ஜாதகத்தில் சனியும், ராகுவும் உச்சத்தில் சேர்ந்தால், அத்தகைய ஜாதகக்காரர்களுக்கு சட்ட ரீதியான துன்பங்கள் வந்து சேர்ந்த வண்ணம் இருக்குமாம். இதை வடமொழியில் பந்தன் யோகம் என்கிறார்கள். இதைத் தான் தமிழில் சகட யோகம் அல்லது விபரீத ராஜ யோகம் என்பார்களோ என்னவோ?! அதாவது திடீரென ராஜாவாகவோ, ராணியாகவோ உட்கார வைக்கக் கூடிய திறனுடைய இதே யோகம் அதே வேகத்தில் ஜாதகக்காரர்களை நிமிடத்தில் சிறைக்குள் தள்ளியும் உட்கார வைத்து விடக் கூடியதாம். அதற்கேற்றார் போல சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வேறு இன்று, நாளை என்று போக்குக் காட்டி ஒரு வழியாக வரும் திங்கள் அன்று வெளிவருவதாகச் செய்திகள் உலவுகின்றன. ஆகமொத்தத்தில் ஜாதகத்தை நம்பாதவர்களையும் சின்னம்மா ஜாதகப் பலன் நம்ப வைத்து விடும் போலத் தான் தெரிகிறது.

என்னே ஒரு விசேஷமான ஜாதகாம்சம்!

இந்தக் கடைசி பாயிண்ட் தான் சின்னம்மா வாழ்வகராதியில் மிகக் கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறது.

ஜாதகம் என்ன செய்யப்போகிறது சசிகலாவை? காத்திருப்பது முதல்வர் நாற்காலியா? சிறைச்சாலையா? இரண்டொரு நாட்களில் தெரிந்து விடும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com