"சுவாமி விவேகானந்தர் பிறந்த மண்ணில் கோழைகள் இருக்கக் கூடாது'

சுவாமி விவேகானந்தர் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிங்கம் போன்ற பெண் தேவை என்றார். அந்த பெண் உண்மை, அன்பு, தூய்மை, உறுதி, வீரம் உள்ளிட்ட நற்குணங்களை பெற்றிருக்க வேண்டும் என எண்ணினார்.
"சுவாமி விவேகானந்தர் பிறந்த மண்ணில் கோழைகள் இருக்கக் கூடாது'

சுவாமி விவேகானந்தர் பிறந்த இந்த இந்திய மண்ணில் கோழைகள் இருக்கக்கூடாது என வலியுறுத்தியவர் நிவேதிதை என சுவாமி நீலமாதவானந்தர் தெரிவித்தார்.

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்த நவராத்திரி பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 7 நாளான ஞாயிற்றுக்கிழமை, "சுவாமி விவேகானந்தர் கண்டெடுத்த பெண் சிங்கம் நிவேதிதை' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இதில், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் துறவி சுவாமி நீலமாதவானந்தர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலர் சித்ரா விஷ்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர்.

விழாவில் சுவாமி நீலமாதவானந்தர் பேசியதாவது:

சுவாமி விவேகானந்தர் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிங்கம் போன்ற பெண் தேவை என்றார். அந்த பெண் உண்மை, அன்பு, தூய்மை, உறுதி, வீரம் உள்ளிட்ட நற்குணங்களை பெற்றிருக்க வேண்டும் என எண்ணினார். அவரது எண்ணத்துக்கேற்ப, சகோதரி நிவேதிதை இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி நிலை வரும் வரை காத்திருந்தார். அப்போது, சகோதரி நிவேதிதை சுவாமி விவேகானந்தரிடம் இந்தியாவை கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறினார்.

அக்கணமே, சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதையை இந்தியாவுக்கு அழைத்தார். அத்துடன், அவரை "தேசியம், பெண்களின் முன்னேற்றம், நாட்டின் பெருமை உள்ளிட்ட விஷயங்களை இந்திய மக்கள் உணர வேண்டும். அதுபோல், பாரதத்தின் பெருமையை மக்கள் உணராமல் அறியாமையால், ஜாதி,மதம் உள்ளிட்ட பிரிவினையால் உள்ளனர். அவர்களின் ஆற்றலை, அவர்களே உணர்ந்து செயல்பட, நீங்கள் பணியாற்ற வேண்டும்' என சுவாமிஜி பணிந்தார். அதை மகிழ்வுடன் ஏற்றார் நிவேதிதை.

சுவாமிஜியின் எண்ணப்படியே, பாரத நாட்டுக்கு வந்து தேசத்தின் பெருமைகளை இந்திய மக்களுக்கு உணர்த்தி வந்தார். அப்போது, அவர் தேசத்தின் பெருமைகளை மக்களுக்கு ஆங்கில மொழியில் பேசுவார். அதில், பலரும் நீங்கள் பேசும் மொழிநடை அருமை என சிலாகித்து பேசினர். அதற்கு நிவேதிதை, "அடிமை மொழிகளில் மயங்காதீர்; நான் பேசும் தேசிய கருத்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்; அதுபோல், தாய்மொழியைப் பேசி பழகுங்கள். அதில் நாட்டின் வரலாற்றினை எழுத முயலுங்கள். கலாசாரம், விழுமியங்கள், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லுங்கள்' என உரக்க கூறினார். அவ்வழியிலேயே, பாரதியார், ரவீந்தரநாத் தாகூரையும் வலியுறுத்தினார்.

அதன் பிறகே பாரதியார் மகாகவியாகி, பெண்கள்,தேச விடுதலைக்கு கவிகளை படைத்தார். அத்துடன், தேசபக்தி, கல்வி ஆகியவற்றுக்கும் நிவேதிதையின் கருத்துகள் வித்திட்டன. அதுபோல், நிவேதிதை இந்தியர்களை பார்த்து, சுவாமி விவேகானந்தர் பிறந்த மண்ணில் கோழைகள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அதன்படி, நிவேதிதை கடைசி வரை சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை எடுத்துரைத்து பெண் சிங்கமாகவே விளங்கினார் என்றார் அவர்.

விழாவில், சித்ரா விஷ்வேஸ்வரன் பேசியதாவது:
சுவாமி விவேகானந்தர் பிறந்த, வாழ்ந்த இடத்தில் வாழ்வதை பெருமையாகக் கருத வேண்டும். மீண்டும் பிறந்தால், இந்தியாவிலேயே பிறக்கவேண்டும். இதுபோன்று ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக, விவேகானந்த நவராத்திரி விழாவில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவர்கள் இசை, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com