நாற்காலிப் போட்டியில் இப்போது சசி இல்லை, இனி ஆளுநர் முடிவெடுப்பாரா?

முதல்வராக பன்னீர் இருந்தாலும் தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்காத நிலையே நீடிக்கிறது. பெரும்பான்மை எம் எல் ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்டுப்பாட்டில் கூவத்தூர் கேளிக்கை விடுதியில் நேரம்
நாற்காலிப் போட்டியில் இப்போது சசி இல்லை, இனி ஆளுநர் முடிவெடுப்பாரா?

மறைந்த முதல்வர் ஜெ வின் அத்யந்த தோழியும், ஜெ மறைந்த பின் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டவருமான வி .கே. சசிகலாவின் பெயரை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, அதிமுக உறுப்பினர்கள் வழிமொழிய ஃபிப்ரவரி 5 ஆம் நால் ஞாயிறு அன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராகவும், வி .கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவை முதல்வராக்கும் பொருட்டு ஒ.பி.எஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் இந்த ஒருமித்த தேர்வை ஒட்டி கடந்த ஃபிப்ரவரி 9 ஆம் நாள் சட்டப்பேரவையில் தனது ஆதரவாளர்களின் பெரும்பான்மையை முன்னிட்டு தமிழக முதல்வராக தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் அனுப்பினார்.

ஆனால் ஆளுநர் சசிகலாவின் அழைப்பை ஏற்கும் முன்பாக ஃபிப்ரவரி 7 ஆம் தேதி, அது வரை சசிகலா ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென அன்று இரவு மறைந்த ஜெ நினைவிடத்துக்குச் சென்று திடீர் தியானத்தில் ஆழ்ந்து தான் ‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி சசிகலா ஆதரவாளர்களால் கட்டாயப் படுத்தப்பட்டதாக’ ஊடக நேர்காணல்களில் கூற ஆரம்பித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சசிகலா ஓ.பி.எஸ்ஸின் திடீர் துரோகத்தில் எதிர்கட்சியான திமுக வின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் சசிகலா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளிவர உள்ள நிலையில் மகாராஷ்டிர ஆளுநராகவும், தமிழகப் பொறுப்பு ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவின் சென்னை வருகை உடனடியாக ரத்தானது. இரண்டு நாட்கள் தாமதமாக வந்த ஆளுநர் ஒரேநாளில் அடுத்தடுத்து ஓ.பி.எஸ், சசிகலா இருவரையும் சந்தித்தாலும் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் அதிகாரம் யாருக்கு? என்பதைப் பற்றி எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து மத்திய அரசு சார்பில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மாநில அரசு விவகாரங்களில் முடிவெடுக்க ஆளுநருக்கே முழு உரிமை’ என ஜகா வாங்கினார். இன்று ஃபிப்ரவரி 14 2017 அன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தீர்ப்பு வெளிவந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் இனி ஆளுநர் முடிவெடுப்பதில் சுணக்கம் இருக்காது என மக்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

தற்போது ஓ.பி.எஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையிலும் தமிழக முதல்வராக அவரே நீடித்து வருகிறார். முதல்வராக பன்னீர் இருந்தாலும் தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்காத நிலையே நீடிக்கிறது. பெரும்பான்மை எம் எல் ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்டுப்பாட்டில் கூவத்தூர் கேளிக்கை விடுதியில் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கையில் தமிழ்நாட்டில் ஆட்சி இயந்திரம் முற்றிலும் இயங்காத நிலையே! மாநிலத்தில் மக்கள் நலப்பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மக்கள் நலன் மற்றும் மாநில நலனை முன்னிட்டு இனியாவது ஆளுநர் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் அகலுமாறு விரைந்து நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com