பஞ்சாயத்துக்கு பரிசுப் பத்திரமாக எழுதிக் கொடுத்த நிலத்தை சட்டப்படி திரும்பப் பெற வழியுண்டா?

பரிசுப் பத்திரத்தை ரத்து செய்யும் உரிமை மூலமாக கிராமப் பஞ்சாயத்துக்கு பரிசாக ஒதுக்கப்பட்ட அந்த பொது இடங்களுக்கான நிலத்தையும் நிலத்தின் உடமைதாரர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
பஞ்சாயத்துக்கு பரிசுப் பத்திரமாக எழுதிக் கொடுத்த நிலத்தை சட்டப்படி திரும்பப் பெற வழியுண்டா?

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீதியரசர் சந்துரு அவர்களிடம் கேட்கப்பட்ட சட்ட ரீதியிலான பதில் கோரிய கடிதம் ஒன்று;

2008 ஆம் ஆண்டில் நாகபட்டினத்தில் ஒரு நபர் 14.5 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்குகிறார். சுமார் இரண்டு வருடங்கள் அந்த நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யாமல் அப்படியே வெறுமையாக விட்டு வைக்கிறார். 2010 ல் அந்த நிலத்தை வீட்டு மனைகளாக்கி விற்கும் பொருட்டு தாஷில்தாரிடம் NOC சான்று பெற்று வீட்டு மனைகளுக்கான லே அவுட் ஒப்புதலுக்காக பஞ்சாயத்து அலுவலக அனுமதியை நாடுகிறார். பொதுவாக குறிப்பிடத்தக்க நிலம் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது கிராமப் பஞ்சாயத்துக்காக சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் பரிசுப்பத்திரமாக வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. அதன்படி லே அவுட்டுக்கான ஒப்புதல் கிடைத்ததும் நிலத்தில் உடமைதாரர் தனது நிலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்காக சாலைகள், மற்றும் பொதுப்பயன்பாட்டுக்கான சில பகுதிகளை பரிசுப் பத்திரமாக எழுதித் தருகிறார். அதன்படி தாஷில்தார் அலுவலகத்தில் அவரது நிலம் முதல் தரமான வீட்டுமனை குடியிருப்புப் பகுதியாக பதிவு செய்யவும் படுகிறது.

ஆனால் சமீபத்திய உச்சநீதிமன்ற உத்திரவின் படி DTCP (Directorate of town& country planning) அனுமதி இல்லாத வீட்டுமனைக் குடியிருப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பால் நில உடமைதாரருக்கு தனது வீட்டுமனை குடியிருப்புகளை விற்பனை செய்ய முடியாத நிலை. ஏனெனில் அவரது நிலத்தில் வீட்டுமனை குடியுருப்புகளை உருவாக்க லே அவுட் ஒப்புதல் மட்டுமே பெறப்பட்ட நிலையில் இப்போது அவர் தனது வீட்டுமனைகளை விற்பதில் தடங்கல் ஏற்பட்டதால் மீண்டும் அவர் தனது நிலத்தை விவசாய நிலமாகவே நீடிக்கச் செய்ய விரும்புகிறார். இப்போது அவர் முன்னிருக்கும் பிரச்சினை என்னவென்றால் விவசாய நிலமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் முழு நிலமும் அவருக்கே சொந்தம். ஆனால் வீட்டுமனைக் குடியிருப்புகளாக மாற்றப் போடப்பட்ட லே அவுட் திட்டத்தின் படி தனது நிலத்தின் சில பகுதிகளை பஞ்சாயத்துக்கு உரிமையானதாக பரிசுப் பத்திர ஒப்புதல் அளித்த நிலையில் அந்த குறிப்பிட்ட நிலப்பகுதிகளை மீண்டும் தான் அடைய முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு நீதியரசர் கே. சந்துருவின் பதில்:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி லே அவுட் அனுமதி இல்லாத நிலத்தை பதிவு செய்யும் முறைக்கான தடையாணையின் படி குறிப்பிட்ட அந்த நிலத்தை, நிலத்தின்  தற்போதைய உடமைதாரர் விவசாய நிலமாகப் பயன்படுத்தலாம். பரிசுப் பத்திரத்தை ரத்து செய்யும் உரிமை மூலமாக கிராமப் பஞ்சாயத்துக்கு பரிசாக ஒதுக்கப்பட்ட அந்த பொது இடங்களுக்கான நிலத்தையும் நிலத்தின் உடமைதாரர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விசயத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகினால் சட்டப்பூர்வமாக  நிலத்தின் உரிமையை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் உரிமை இருக்கிறது.

விவசாயநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற முயன்று தோல்வி கண்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் கணிசமானவர்கள் இருப்பின் அவர்களுக்கு இந்தப் பதில் உதவலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com