சூப்பர்ஸ்டார் தான் என்னை விபத்திலிருந்து காப்பாற்றினார்... எப்படி தெரியுமா?

அப்படி என்னையும் ஒருமுறை தலைவர் விபத்திலிருந்து காப்பாற்றினார். எப்படி தெரியுமா? ரஜினி படங்களின் மீது நான் பைத்தியம் பிடித்து அலைந்த காலம் அது.
சூப்பர்ஸ்டார் தான் என்னை விபத்திலிருந்து காப்பாற்றினார்... எப்படி தெரியுமா?

எல்லோருக்கும் தெரியும். ரஜினி தனது அனைத்து திரைப்படங்களிலும் தன்னந்தனியாக வில்லன்களைப் பந்தாடி நல்லவர்களைப் காப்பாற்றுவார் என்று, அப்படி என்னையும் ஒருமுறை தலைவர் விபத்திலிருந்து காப்பாற்றினார். எப்படி தெரியுமா? ரஜினி படங்களின் மீது நான் பைத்தியம் பிடித்து அலைந்த காலம் அது.

என் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்ல சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் விலை 35 பைசா. கல்லூரிக்குச் சென்று திரும்ப 70 பைசாக்கள் ஆகும். அப்பா தினமும் எனக்கு 70 பைசாக்கள் தருவார். வீட்டிலிருந்து முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி இறங்கினால் எனக்குப் போக வர தினமும் பத்துப்பைசாக்கள் மிச்சமாகும். அது போக... வாரம் ஒருமுறை அப்பா எனக்கு கல்லூரி சென்று வர 1 ரூபாய் தரும் பழக்கம் வைத்திருந்தார். 

ஆக மொத்தம் அந்த வாரத்தில் மிச்சம் பிடித்த 70 பைசாக்களுடன் அப்பா தனியாகத் தரும்1 ரூபாய் பிளஸ் கல்லூரிக்கு மட்டமடிக்கத் தோன்றும் நாளுக்கான 75 பைசாவும் சேர்த்து என்னிடம் ரூ2.50 சேர்ந்ததும் புத்தம் புதுசாக வெளியாகும் ரஜினி படம் பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்வேன். நான் சொல்லப் போகும் சம்பவம் நடந்த சமயம் சூப்பர் ஸ்டாரின் ‘நல்லவனுக்கு நல்லவன் படம் வெளியாகியிருந்தது. என்னால் வகுப்பறையில் நிம்மதியாக உட்கார முடியவில்லை.  எப்போதடா தியேட்டருக்குப் போய் தலைவர் படம் பார்க்கலாம் என்று மனம் பரபரப்பாக செயல்படத் தொடங்கியது.

அப்போது குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ2.50. நான் அப்போதெல்லாம் பெரும்பாலும் 2.50 ரூபாய் டிக்கெட்டில் தான் படம் பார்ப்பேன். அப்பாவுக்குத் தெரியாமல் வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு தலைவர் படம் பார்க்கச் செல்ல கையில் அந்தத் தொகை தான் சேர்க்க முடிந்தது.

இன்னொரு முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. படம் பார்க்கச் செல்லும் அந்த குறிப்பிட்ட தினத்தன்று நான் வழக்கமாகச் செல்லும் பஸ்ஸிலும் செல்ல முடியாது. ஏனெனில் தியேட்டர் நகரத்தின் மையத்தில் இருக்கிறது. எனது கல்லூரியோ அதற்கு முன்பே வந்து விடும் என் கல்லூரியில் இரண்டு ஷிஃப்டுகளாக வகுப்புகள் நடக்கும். நான் மதிய ஷிஃப்ட் மாணவன். 2 மணிக்குத் தான் வகுப்புகள் தொடங்கும். அதே நேரம் தியேட்டரில் மாட்னி ஷோக்களும் 2.30 மணிக்குத் தான் சரியாகத் தொடங்குவார்கள். . வழக்கம் போல நான் கல்லூரியில் இறங்கா விட்டால் கண்டக்டர் என்னிடம் ஏன் இறங்கவில்லை என்று விசாரிப்பார். பிறகு நான் வீட்டிற்குத் தெரியாமல் தியேட்டருக்குப் போவது அவர் மூலமாகவோ அல்லது சக மாணவர்கள் மூலமாகவோ தெரிந்து விடும். என்கிற பயத்தில் நான் அன்று மட்டும் வேறு பஸ்ஸில் ஏறி தலைவர் படம் பார்க்கப் போய் விட்டேன்.

படம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். அப்பா மட்டுமல்ல என் ஒட்டுமொத்தக் குடும்பமும் எங்கள் வீட்டு வாசலில் திரண்டிருந்தது. ஏன் எங்கள் ஊரே என் வீட்டு முன் தான் நின்றிருந்தது. எனக்குப் பதட்டமாகி விட்டது. நான் கல்லூரியை கட் அடித்து விட்டு ரஜினி படம் பார்க்கப் போனது ஊருக்கே தெரிந்து, அப்பாவிடம் வத்தி வைத்து விட்டார்களா.. என்ற அதிர்ச்சியோடு அவர்களை நெருங்கினேன். என்னருகில் விரைந்து வந்த அப்பா; சற்றுக் கோபமாக என்னைப் பார்த்து எங்கேடா போயிருந்தாய்? என்று கேட்டார்... நான் பயத்தில் ‘திரும்பவும் இப்படிச் செய்ய மாட்டேன்’ என்று உளறி வைத்தேன். அப்பா மீண்டும் என்னை நோக்கி அடுத்த கேள்வியை வீசினார். 

“எதை திரும்பச் செய்ய மாட்டாய்?”

நான் மீண்டும் அப்பா என்ன சொல்வாரோ என்று பயந்து கொண்டே...

“வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு தலைவர் படம் பார்க்கச் செல்ல மாட்டேன்” என்றேன்.

அவர் என்னை எப்படித் திட்டப் போகிறாரோ என்று நான் பயந்து போய் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க;

அவரோ சிரித்துக் கொண்டு  ‘நல்ல வேலை நீ இன்று கல்லூரியைக் கட் அடித்து விட்டுப் படம் பார்க்கப் போனதும் ஒரு வகையில் நல்லதாகி விட்டது’ என்றவாறு வீட்டுக்குள் சென்று விட்டார்.

நான் அப்பா என்னைத் திட்டாத ஆச்சர்யத்துடன் என்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது நான் வழக்கமாகக் கல்லூரி சென்று வரும் எனது பேருந்து அன்று விபத்துக்குள்ளாகி பலரும் கடுமையான காயமடைந்து விட்டார்கள் என. அதில் பயணித்தவர்கள் அனைவருமே எனது நண்பர்கள்... அதோடு எனக்கு நன்கு பழக்கமான அந்த ஓட்டுனருக்கும், கண்டக்டருக்கும் கூட மிகக் கடுமையான காயங்களாம்.

பிறகு தான் உணர்ந்தேன். அடடா எல்லோரும் நான் விபத்தில் சிக்கி விட்டேனோ என்று கவலையுடன் காத்திருக்கும் போது , அது தெரியாமல்  கல்லூரியைக் கட் அடித்து விட்டு ரஜினி படம் பார்க்கப் போன உண்மையை நானே முன் வந்து அப்பாவிடம் சொல்லி முட்டாள்தனமாக மாட்டிக் கொண்டேனே! என்றிருந்தது. எது எப்படியோ! அன்று தலைவர் தான் என்னை அந்த விபத்திலிருந்து காப்பாற்றினார் என்பது மட்டும் என் மனதில் பதிந்த நிஜம்!

ஆங்கிலத்தில்: சுகுமாறன் C V

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com