இந்தியாவின் 6 வயது இளம் செஃப் குட்டிப் பையன் கிச்சா!

கிச்சாவின் சமையலுக்கு வலைத்தளத்தில் அத்தனை வரவேற்பு. இன்று 14,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இந்த சானல் பெற்றிருக்கிறது. தேங்காய் பாயசம், ஐஸ்க்ரீம் கேக்குகள், ரெயின்போ இட்லி,
இந்தியாவின் 6 வயது இளம் செஃப் குட்டிப் பையன் கிச்சா!

கிச்சா என்று செல்லமாக அழைக்கப்படும் நிஹல் ராஜ், இந்தியாவின் இளம் செஃப் ஆவான். கிச்சாவுக்கு வயது ஆறு. சொந்த ஊர் கொச்சி. ஆனால் சுவையான பல உணவுப் பண்டங்களைச் சில நிமிடங்களில் தயாரித்து அசத்தும் கிச்சாவின் கைப்பக்குவத்தை கிச்சாவின் கிச்சாட்யூப் ஹெச்டி என்னும் யூ டியூப் சேனலை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுரசித்துள்ளனர்.

எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கிச்சாவின் ஆர்வம், அவனது கேள்விகளுக்குப் பொறுமையாக கிச்சா புரிந்து கொள்ளும்படி சொல்லித் தரும் பெற்றோரின் பங்கு... இந்த இரண்டும்தான் கிச்சாவை இன்று இந்தியாவின் இளம் செஃப்பாக மாற்றியுள்ளது.

கிச்சாவுக்கு சமையலின் மேல் காதல் மூன்றரை வயது முதலே தொற்றிக் கொண்டது. அப்போதே, கிச்சா கூகுள் தளத்தில் பல மணி நேரம் தேடலில் செலவிடுவார். மூன்றரை வயதில் கூகுளில் தேட சொற்களை எப்படி கிச்சா கம்ப்யூட்டரில் டைப் செய்வார் என்று கேட்கலாம். அதற்கும் ஒரு வித்தையை கிச்சாவின் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தனர். ஆம்... கிச்சா கூகுளில் தேடுவதற்குத் தேவையான சொற்களைப் பயன்படுத்த கூகுள் வாய்ஸ் என்னும் செயலி பெரிதும் உதவியது.

வலைத்தளத்தில் ஒன்பது வயதான இவான், தனது தந்தையுடன் இணைந்து இவாண்ட்யூப் எனும் யூ டியூப் சேனலில் பொம்மைகள் பற்றிய விமர்சனம் வெளியாகியிருப்பதை கிச்சா பார்க்க..... அது கிச்சாவுக்குப் பிடித்துப் போக, இதே மாதிரியான சானலை எனக்கு உருவாக்கித் தாங்க என்று அப்பாவிடம் கிச்சா கேட்டாராம். அந்த ஆசை உடனே நிறைவேற்றப்பட்டது. கிச்சாவின் தந்தை ராஜகோபால் கிருஷ்ணன் விளம்பரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்.

கிச்சாவின் தாய் ரூபி ராஜகோபாலுக்கு பேக்கிங் தொழிலில் அதீத ஆர்வம். கிச்சாவிற்கு சமையலில் இருக்கும் ஈடுபாட்டினை ரூபி புரிந்து கொண்டார். அலங்கரிக்கப்பட்ட பலதரப்பட்ட கேக் வகைகளை ரூபி தயாரிக்கும்போது கிச்சா அதை மிகக் கவனமாகப் பார்த்து பல சந்தேகங்களை சுவாரஸ்யமான கேள்விகளாகக் கேட்பார். ரூபியும் பொறுமையாக கிச்சா கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் தருவார்.

ரூபி தந்த உற்சாகத்தில் ஒரு நாள் பாப்சிகிள்ஸ் (குச்சி ஐஸ்) என்னும் உணவுப் பண்டத்தை கிச்சா தயாரிக்கும் போது அதை அவர் தந்தை ராஜகோபால் வீடியோ படம் எடுத்து வலைத்தளத்தில் பதிவேற்றினார்.

தொடர்ந்து கிச்சா பல உணவுப் பண்டங்களை தயாரிக்கத் தொடங்க, அவை அனைத்தும் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கிச்சா சமைப்பதை இந்த யூ டியூப் வீடியோவில் காணலாம்...

ஒரு வீடியோவாக ஆரம்பித்தது பத்து வீடியோவாக விரிந்து முடிவில் கிச்சாடியூப் ஹெச்டி என்ற பெயரில் தனி யூடியூப் சேனல் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம், கிச்சாவின் சமையலுக்கு வலைத்தளத்தில் அத்தனை வரவேற்பு. இன்று 14,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இந்த சானல் பெற்றிருக்கிறது. தேங்காய் பாயசம், ஐஸ்க்ரீம் கேக்குகள், ரெயின்போ இட்லி, ஓட்ஸ் மீல் குக்கீஸ் போன்ற சுவைமிக்க உணவுப் பண்டங்களை கிச்சா தயாரிக்கும் அழகில், பக்குவத்தில் மயங்காதவர்கள் இல்லை.

"எனது உணவுப்பண்டங்கள் தயாரிப்பு வீடியோ பிரபலமாக திடீரென்று ஒரு நாள் அமெரிக்கவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மிக்கி மவுஸ் மேங்கோ ஐஸ்க்ரீம் தயாரிப்பு முறையைக் கேட்டு மின்னஞ்சல் செய்தது. அதற்காக இரண்டாயிரம் டாலர்களை அனுப்பி வைத்தது. வந்த பணத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அப்பா மூலம் அளித்தேன். எனது தயாரிக்கும் முறை விலைக்கு வாங்கப்பட்டதும் எனது பிரபலம் இன்னும் அதிகமானது. அதன் காரணமாக,  அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற அழைப்பு வந்தது. இது எனது உணவு தயாரிக்கும் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம். புட்டு என்கிற கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் முறையினை எல்லனுக்கு (நிகழ்ச்சி நடத்துபவர்) கற்றுக் கொடுத்தேன். அமெரிக்க டிவி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் "டபுள் ஹார்ஸ் ஸ்னாக்ஸ் ப்ராண்ட்' பிரதிநிதியாக நான் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகிறது'' என்கிறார் கிச்சா.

- ஏழிசை எழில் வல்லபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com