மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி- 2017 இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளும் அழகிகளின் பதில்களும்...

மொத்தம் 85 நாடுகள் பங்கு பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ரோஸ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொண்டார். இறுதிச் சுற்று வரை அவரால் முன்னேற முடியவில்லை.
மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி- 2017 இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளும் அழகிகளின் பதில்களும்...

மொத்தம் 85 நாடுகள் பங்கு பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ரோஸ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொண்டார். இறுதிச் சுற்று வரை அவரால் முன்னேற முடியவில்லை.

இறுதிச் சுற்றுக்கு தேர்வான மூன்று நாட்டு அழகிகள் முறையே பிரேசில், ஃப்ரான்ஸ், மற்றும் தாய்லாந்து.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற மூன்று அழகிகளிடமும்;

உங்களுக்கு ஏன் பிரபஞ்ச அழகிப் பட்டம் வழங்கப் பட வேண்டும்? எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இறுதிச் சுற்றில் பங்கேற்ற மூன்று தேசத்து அழகிகளும் அவரவர் இயல்புக்கு ஏற்றவாறு பதிலளித்தனர்.

பிரேஸில் அழகி ரைஸ்ஸா சண்டனா: 

பிரேஸிலின் சார்பாக நான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். பிரேஸில் மாதிரியான கலாச்சாரப் பெருமை மிக்க ஒரு நாட்டைக் காண்பது அரிது. பிரேஸில் மக்கள் எப்போதும், எதற்காகவும் விட்டுக்கொடுக்காத மன உறுதி கொண்டவர்கள். எந்தக் கஷ்டத்திலும் மனம் தளராத திடமிக்கவர்கள், அவர்கள் முகத்தில் புன்னகை ஓயவே ஓயாது. வாழ்வில் கடினமான சந்தர்ப்பங்களிலும், கடுமையாக உழைக்கும் மனோபாவம் கொண்ட பிரேஸில் மக்களின் பிரதிநிதியாக இந்தப் போட்டியில் தான் கலந்து கொண்டிருக்கிறேன், நான் அவர்களில் ஒருத்தி என்பதே எனக்குரிய பெருமை, உழைப்பதற்கு அஞ்சாத பிரேஸில் பிரதிநிதியான தான் இந்தப் போட்டியில் வென்று அழகிக்கான கிரீடத்தை பிரேஸிலுக்கு கொண்டு செல்வதை என் வாழ்வின் பெருமைக்குரிய நிகழ்வாகக் கருதுகிறேன் என ரைஸ்ஸா தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக ஃபிரான்ஸ் அழகி ஐரிஷ் மெட்டினரா...

இவர் தான் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி- 2017 ஆகத் தேர்வானவர். இவர் ஒரு பல் மருத்துவ மாணவி என்பதால் இவரது பதிலும் அதையொட்டியதாகவே இருந்தது. இளம் வயதில் தான் பற்களின் ஆரோக்கியக் குறைவு காரணமாக நிறையத் தொல்லைகள் அனுபவித்ததாகவும், தனது பல் மருத்துவர்கள் மிகப் பொறுமையாக தனக்கு அளித்த விளக்கங்களின் பின்னரே தான் பற்களின் பராமரிப்பு குறித்த முழு தகவல்களையும் கற்கும் ஆவல் கொண்டதாகவும் ஐரிஷ் தெரிவித்தார். மேலும் ஃபிரான்ஸ் சார்பாக தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதால் போட்டியில் வென்று அழகிக்கான கிரீடத்தை தனது நாட்டுக்கு சமர்பிப்பதே தனக்குப் பெருமையாக இருக்கக் கூடும் எனவும் இவர் தெரிவித்தார். மேலும் தான் பிரபஞ்ச அழகியானால் சர்வ தேச அளவில் பற்களின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதை தனது முக்கியப் பணியாக ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக  தாய்லாந்து அழகி சலிட்டா சுயான்ஸனே...

நான் இறுதி ஆண்டு மைக்ரோ பயாலஜி பயிலும் மாணவி. ஆயினும் கடந்த 10 வருடங்களாக என் அம்மாவுடன் இணைந்து துப்புரவுப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனது சிறு வயதில் மிகுந்த வறுமையில் அகப்பட்டுக்கொண்டதால் பிற குழந்தைகளைப் போல அன்றி எனக்கு எனது அம்மாவுடன் இணைந்து செய்வதற்கு எப்போதும் வேலைகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. பிற குழந்தைகளைப் போல என்னால் சகஜமாக விளையாட்டில் நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. மாலை நேரங்களில் அம்மாவுடன் பிரார்த்தனைகளில் ஈடுபடுவேன். எனது ஏழ்மையும் கூட நல்லதிற்குத் தான் என்றே நான் நம்புகிறேன், ஏனெனில் அதனால் தான் எனக்கு பணத்தின் மதிப்பு தெரிந்திருக்கிறது. நான் பிரபஞ்ச அழகியானால் சுற்றுப் புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏழைகளுக்குப் பொருளாதார நன்மைகள் பெற்றுத் தரப் போராடுவேன். 

கேள்வி, பதில்களை காணொளியாகக் காண...

இறுதிச் சுற்றில் கேட்கப் பட்ட கேள்விகளில் நடுவர்களுக்கு திருப்தியளிக்கும் விதமான பதிலை அளித்து இறுதியில் தேர்வானவர் ஃபிரான்ஸ் அழகி ஐரிஷ். இந்தப் பல் மருத்துவ மாணவியால் இந்த பிரபஞ்சம் பல் பராமரிப்புகள் குறித்த ஞானம் எய்தி உய்வடையும் என்று நம்புவோமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com