தீய்ந்து அடிப்பகுதியில் கரிபடிந்த வாணலியை சுத்தம் செய்ய வேண்டுமா?

மாவு சலிக்கும் சல்லடை ஓட்டையாகிவிட்டால் அந்த இடத்தில் உட்புறமாக சற்று
தீய்ந்து அடிப்பகுதியில் கரிபடிந்த வாணலியை சுத்தம் செய்ய வேண்டுமா?

மாவு சலிக்கும் சல்லடை ஓட்டையாகிவிட்டால் அந்த இடத்தில் உட்புறமாக சற்று பெரிய சைஸில் உள்ள ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிட்டால் ஓட்டை அடைபட்டுவிடும். மீண்டும் பயன்படுத்தலாம்.

புதிய பிளாஸ்டிக் பாத்திரங்களைக் கழுவும்போது  சிறிது உப்பு நீர்  சேர்த்துக் கழுவினால் பிளாஸ்டிக் வாடை போய்விடும்.

வெள்ளி பாத்திரத்தை தேய்க்கும் போது கடுகை அரைத்துத் தேய்த்தால் பாத்திரம் பளபளவென்று இருக்கும். வெள்ளியில் உள்ள கறையும் போய்விடும்.

அலுமினிய பாத்திரத்தின் உட்பகுதியில் கறுப்பு நிறமாக  இருந்தால் ஒரு தக்காளியை வெட்டிப் போட்டு வேக வையுங்கள் கறுப்பு நிறம் மாறிவிடும்.

பித்தளை பாத்திரங்களைத்  தேய்க்கும்போது கொஞ்சம் எலுமிச்சை பழத்தோலுடன் சோடா மாவையும்  சேர்த்துத் துலக்கினால் புதிதாகத் தோன்றும்.

 எலுமிச்சைப் பழத்தை பிழிந்துவிட்டு தோலை வெளியே  எறியாமல் எண்ணெய் பிசுக்கு பாத்திரங்களை கழுவினால் சுத்தமாக  இருக்கும்.

தீய்ந்து அடிப்பகுதியில் கரிபடிந்த வாணலியை சுத்தம் செய்ய வேண்டுமா? ஒரு வெங்காயத்தை நறுக்கி வாணலியில் இட்டு உப்பையும் தண்ணீரையும் அதனோடு சேர்த்து கொதிக்க வையுங்கள் இறக்கி ஆறிய பிறகு கழுவினால் பாத்திரம் பளபளக்கும்.

- ஆர்.ஜெயலட்சுமி.

தூபக்கால், தீபக்கால் போன்ற பூஜை சாமான்களில் சாம்பிராணி மற்றும் கற்பூரம் ஏற்றி கரி படிந்துள்ளதா? தூபக்காலை அடுப்பில் காட்டி சுடேற்றுங்கள். சூடானதும் மேசைக்கரண்டியால் அல்லது கத்தியால் சுரண்டினால் கரியெல்லாம் உதிர்ந்துவிடும்.

ஈரம்பட்டு நமத்துப்போன அப்பளத்தை உளுத்தம் பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகிவிடும்.

- சி.பன்னீர்செல்வம்.

பூண்டு விரைவாக உரிக்க வேண்டுமென்றால் எல்லா பூண்டுகளையும் மைக்ரோவேவ் அவனில் 15 விநாடி வையுங்கள் தோல் எளிதாக, மிகவும் சீக்கிரமாக உதிர்ந்துவிடும்.

உப்புமா, வெண்பொங்கல் இறுகிவிட்டால் அரைக் கரண்டி சூடான பாலை ஊற்றிக்கிளறினால் இளகிவிடும்.  சுவையும் மாறாது. கேசரிக்கும் இதே போன்று செய்யலாம்.

ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சைமிளகாய் அரை ஸ்பூன் கடுகு தாளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்தால் சுவையான மசாலா தொக்கு தயார்.

தயிர் கெட்டியாக  இருக்க பாலில் தண்ணீர் சேர்க்காமல் பொங்கப்பொங்க காய்ச்சி இறக்கி வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே அதிகம் புளிக்காத தயிர் ஒரு மேசைக்கரண்டி விட்டுக் கலக்குங்கள். பிறகு அதை மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் பார்த்தால், மேசைக்கரண்டியால் வெட்டியெடுக்கும் அளவுக்கு அதி கெட்டித்தயிராக உறைந்திருக்கும். 

- எச்.சீதாலட்சுமி

எலுமிச்சை சாறை  தலையில் தடவி பிறகு ஷாம்பூ போட்டுக் குளித்தால் தலைமுடி  புசுபுசுவென்று அழகாக இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி அது உலர்ந்த பின் குளித்தால் மேனி அழகு பெறும்.

ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை மறையும். 

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

மோரைப் பஞ்சில் தோய்த்து முகம்,  கழுத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.

பீட்ரூட்டை வெட்டி அதன்சாற்றை உதடுகளில் தேய்த்துவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளரிச் சாறுடன், ஆப்பிள் சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி வர ஒவ்வாமையால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கிவிடும்.

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பற்களிலுள்ள கறை அகலும்.

(பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்' நூலிலிருந்து நெ.இராமன். )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com