அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது!

அணு உலை நிலையங்களின் செயல்பாடுகளை முடக்க நினைப்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கான அணுக் கதிரியக்க மருந்து தயாரிப்புக்கும் எதிரானவர்களாகவே கருதப்படுவர்.
அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது!

அணு உலைக்கு எதிராகப் போராடுவோர், அணு கதிரியக்க மருந்து தயாரிப்பையும் முடக்கும் வகையில் நடத்தும் போராட்டங்களை எந்த வடிவிலும் அனுமதிக்க மாட்டோம் என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் கே.எஸ்.பிரதீப் குமார் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்திய அணு சக்தித் துறையும், தேசியப் பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து நடத்தும் ஒரு வாரப் பயிலரங்கு மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிலரங்கில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஊடகங்களில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள், அறிவியல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்கின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பாபா ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானிகள், பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

இதில் அந்த மையத்தின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குழுமத்தின் இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் கே.எஸ். பிரதீப் குமார் பேசியதாவது:

அணுக் கதிர்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். அதே சமயம், இந்தியாவில் அணுஉலைகளின் நோக்கம், செயல்பாடு, பயன்கள் பற்றிய புரிதலின்றி பொதுமக்கள் உள்ளனர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என கூறிக் கொள்ளும் சிலர் அடிப்படை ஆதாரங்களின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக திரட்டிய தகவலை வைத்து மக்களிடையே பீதியை கிளப்புகின்றனர். நாட்டில் பல இடங்களில் தேச முன்னேற்றத்துக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களை போராட்டக் குழுவினர் எதிர்க்கின்றனர். தமிழகத்தின் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், தில்லியில் மாயாபுரி கதிரியக்க சம்பவம், ஜெய்தாபூரில் நடந்த கதிரியக்க நிகழ்வு போன்றவை மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளால் விளைந்த விபரீதங்களாகும்.

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அணு உலை உற்பத்திக்கான ஆக்கப்பூர்வப் பணிகள், ஆய்வுகள் மட்டுமின்றி, புற்றுநோய், தைராய்டு, மூளை தொடர்புடைய நீரியல் அறுவை சிகிச்சைக்கு உதவக் கூடிய அணுக் கதிரியக்க மருந்தான ஐசோடோப் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், அணு உலை நிலையங்களின் செயல்பாடுகளை முடக்க நினைப்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கான அணுக் கதிரியக்க மருந்து தயாரிப்புக்கும் எதிரானவர்களாகவே கருதப்படுவர். அவர்களின் போராட்டங்களை விஞ்ஞானிகளான நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அணுக் கதிர் வீச்சு பற்றிய தவறான புரிதலை இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் கொண்டுள்ளனர். அணுக் கதிர் உற்பத்தி நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிகபட்சமாக 2 கி.மீ. தொலைவு வரைதான் அதன் தாக்கம் இருக்கும்.

அந்தத் தாக்கம்கூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பல கட்ட சீலிடும் தடுப்பு நடவடிக்கைகள் அணுசக்தி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் களைவதற்குத் தயாராக இருக்கிறோம்.
உலக அளவில் அணுக் கதிரியக்க சாதனங்கள். ரசாயனங்கள் போன்றவை பயங்கரவாத சக்திகளிடம் கிடைத்து வருவது கவலை அளிக்கிறது.
அவை சமூக விரோதிகளிடம் கிடைத்தால், மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தியவில் சில பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற சாதனங்கள் தெரிந்தோ, தெரியாமலோ உரிய அனுமதியின்றி ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாகச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
தில்லியில் மாயாபுரியில் அணுக் கதிரியக்க மருந்தான ஐசோடோப் சாதனத்தை உடைத்த போது பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். சட்டவிரோதமாக ஐசோடோப் ரசாயன தயாரிப்புகளை யாரேனும் வைத்திருந்தால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இயற்கைப் பேரிடரின் போது தற்காப்பு நடவடிக்கையாக அணு உலைகள் தயாரிப்பு, சில நேரங்களில் நிறுத்தப்படும். ஏதேனும் கதிர்வீச்சு வெளியாகும் என்ற அச்சத்தால் அப்படி விஞ்ஞானிகள் செய்வதில்லை. அணு உற்பத்தி நிலையங்கள் பெரும்பாலும் கடல் அருகே இருப்பதால், பேரிடர் காலங்களில் கடல் அலை உயர்ந்து வருவதற்கு வாய்ப்புள்ளது.

அத்தகைய சூழலில் பொதுமக்கள் பீதியடைந்து விடக் கூடாது என்பதற்காகவும், கடல் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்படும் பூகம்பத்தின் விளைவாக, சுனாமி அலை வந்தால் தற்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும்தான் மின்னுற்பத்தி நிறுத்தப்படுகிறது.

மேலும், இதற்காக இந்தியாவில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புத் துறை, காவல், பாதுகாப்பு படைக் குழுவினர் உள்ளிட்டோருக்குப் பயிற்சி அளிக்கும் பணியை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. உள்ளூர் அளவிலும் இத்தகைய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார் பிரதீப் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com