தலை முடி பாழாகக் கூடாது, ஜாலியாக கலர்ஃபுல் ஹோலியும் கொண்டாட வேண்டும்! எப்படி?

இதோ ஹோலிப் பண்டிகை வந்தாச்சு. மார்ச் 12 ஆம் தேதி மாலை தொடங்கும் ஹோலி கொண்டட்டங்கள் மறுநாள் மார்ச் 13 ஆம் தேதி மாலையில் முடிவடைகின்றன.
தலை முடி பாழாகக் கூடாது, ஜாலியாக கலர்ஃபுல் ஹோலியும் கொண்டாட வேண்டும்! எப்படி?

இதோ ஹோலிப் பண்டிகை வந்தாச்சு. மார்ச் 12 ஆம் தேதி மாலை தொடங்கும் ஹோலி கொண்டட்டங்கள் மறுநாள் மார்ச் 13 ஆம் தேதி மாலையில் முடிவடைகின்றன. பொதுவில் ஹோலி வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும் உலகம் ஒரு குளோபல் வில்லெஜ் என ஆனதன் பிற்பாடு இந்திய மாநகரங்கள் பலவற்றிலும் எல்லா மாநிலத்தைச் சார்ந்தவர்களாலும் கொண்டாடப் படுகிறது என்பதும் உண்மை.

ஹோலி குறித்த புராணக் கதை ஒன்று உண்டு. அக்கதை இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான கதை. அப்படியென்ன கதை என்கிறீர்களா? அது தான் பக்தப் பிரகலாதன் கதை. ஹோலி என்பது பிரகலாதனின் அத்தை ஹோலிகாவின் பெயரிலிருந்து பிறந்தது. அசுர மன்னன் ஹிரண்யகசிபுவின் தங்கையான ஹோலிகா தன் அண்ணனின் கெடு உபதேசத்தால், பாலகன் என்றும் பாராமல் பிரகலாதனை தன் மடியில் அமர வைத்து நெருப்பு மூட்டிக் கொல்ல முயற்சி செய்வாள். முடிவில் அவளே பலியாவாள். மரணத்தின் போது மனம் மாறி திருந்தியதால் அவளது நினைவைப் போற்றும் வகையில் வருடம் தோறும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது என்கிறது கதை.

சரி இனி ஹோலியில் தலை முடியை எப்படிக் காப்பாற்றலாம் என்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

ஹோலி கொண்டாட டிப்ஸ்:

ஹோலியின் சிறப்பே அதில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் தான். வண்ணப் பொடிகள் வர்ஷிக்க உடைகளோடு சேர்த்து மொத்த உடலும் வண்ணத்தில் குளித்து ஹோலி கொண்டாடி முடிக்க அதற்குப் பிறகு அந்த வண்ணக் கறைகளை அகற்றுவது தான் பெரும் பாடு. முன்பெல்லாம் எளிதில் கரையும் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தினார்களோ என்னவோ? ஆனால் இப்போது பளிச் வண்ணங்களுக்காகவென்றே பிரத்யேகமாக கடினமான கெமிக்கல்கள் பயன்படுத்தி வண்ணப் பொடிகள் தயாரிக்கப் படுவதால் அவை உடலின் வேறெந்த பாகத்தையும் விட தலைமுடிக்கு மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஹோலி கொண்டாடுவோரின் முக்கியப் பிரச்சினையே தலை முடிக்கு சேதாரமில்லாமல் ஹோலி கொண்டாடி முடிப்பது எப்படி? என்பதாகவே இருக்கிறது. அதற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா?

  • ஹோலி கொண்டாட்டத்தின் போது தலை முடியை பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள். ஏனெனில் ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் வண்ணப் பொடிகள் எளிதில் வேர் வரை சென்று ஒட்டிக் கொள்ளும். பிறகு அவற்றை அகற்றுவது சிரமம். எத்தனை சிரத்தையுடன் தலைமுடியை அலசினாலும் வேர்பாகத்தில் ஒட்டிக் கொண்ட வண்ணத்துகள்களை அகற்ற முடியாமல், வெகு சீக்கிரத்தில் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப் பட நேரிடும். 
  • எனவே ஹோலி கொண்டாடச் செல்வோர் நீளமான கூந்தல் இருந்தால் அவற்றைப் பறக்க விடாமல் பின்னிக் கொண்டு செல்லலாம், அல்லது குறைந்த பட்சம் போனி டெயில் போட்டுக் கொண்டு செல்லலாம். இதனால் வண்ணப் பொடிகள் தலைமுடியின் வேர் வரை ஊடுருவுவது தவிர்க்கப்படும்.
  • ஹோலிக்குச் செல்லும் முன் தலைமுடியின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய மறக்கக் கூடாது. தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதால் வண்ணப் பொடிகளை அலசிக் களைவது எளிதாக இருக்கும்.
  • முடிந்தால் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு கலந்த தேங்காய் எண்ணெய் மசாஜ் சென்ஸிடிவ் வகை தலைமுடிக்கு மிகவும் உகந்தது.
  • முடிந்தால் ஹேர் ரூட் மாஸ்க் பயன்படுத்தலாம். இந்த ரூட் மாஸ்குகள் தலை முடியின் வேர் மற்றும் தலை முடி உடைதல் பிரச்சினை இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஹோலிக்குப் பின் தலைமுடியை அலசும் போது இழந்த பொலிவை மீட்டுத் தரவும் இந்த ரூட் மாஸ்குகள் உதவும்.
  • ரூட் மாஸ்குகள் பற்றி அறியாதவர்கள் தலையை கெட்டியான வண்ணத் துணியால் மூடிக் கட்டிக் கொண்டு ஹோலி கொண்டாடலாம். அதே போல கை, கால்களை முழுதாக மூடும் வகையிலான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து சென்று ஹோலி கொண்டாடலாம்.

அது எப்படியோ... சருமத்துக்கும், கூந்தலுக்கும், கேடில்லாத வகையில் ஹோலி கொண்டாடி முடித்தால் சரி. அவ்வளவு தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com