பார்வையற்றவர்கள் பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்ய இது உதவும்!

பார்வையற்றவர்கள் கடையில் உள்ள ஒவ்வொரு பொருளாக டிராலியில் எடுத்து வைக்கும் போது, அது என்ன பொருள், அதன் எடை எவ்வளவு? அது என்ன விலை? என்பதைக் கருவியில் உள்ள  ஸ்பீக்கர் அறிவிக்கும்.
பார்வையற்றவர்கள் பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்ய இது உதவும்!

பார்வையற்றவர்களுக்கு உதவும் விதத்தில், அவர்கள் சுலபமாக ஷாப்பிங் செய்யக் கூடிய ஒரு கருவியை விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் மூன்றாம் ஆண்டு  மாணவர் ஏ.விநோத்குமார் கண்டு பிடித்து தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.
 

அவரிடம் பேசியதிலிருந்து...

"பார்வையயற்றவர்கள் பொருள்கள் வாங்குவதில் பல சிரமங்கள் உள்ளன. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தேன்.  எனது துறைத்தலைவர் கே.வளர்மதி மற்றும் உதவிப் பேராசிரியர் பி.கோவிந்தமூர்த்தியின் வழிகாட்டுதலோடு, மூன்றுமாத ஆய்வில் பார்வையற்றவர்கள் பல்பொருள் அங்காடிகளில் ஷாப்பிங் செய்யும் கருவியை வடிவமைத்தேன்.

ஏ.சி.மின்சாரத்தை டி.சி.யாக மாற்றும் கருவி,டிஸ்பிளே, ஐ.ஓ.டி.போர்டு, ஸ்பீக்கர் போன்ற பல பாகங்கள் அடங்கிய KID - ஐ பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்தப்படும் டிராலியில் பொருத்த வேண்டும்.

அதேபோன்று பல்பொருள் அங்காடியில் பொருள்கள் அடுக்கி வைத்திருக்கும் ரேக்கில் ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டையைப் பொருத்த வேண்டும்.
பார்வைற்றவர்கள் பல்பொருள் அங்காடிக்கு ஷாப்பிங் வந்தால், KID அமைத்துள்ள டிராலியை அவர்களிடம் கொடுக்க வேண்டும். 

மேலும் அவர்கள் கையில் 13 டிஜிட்டல் நம்பர் இணைத்துள்ள ஜிப்பைக் கொடுக்க வேண்டும். இந்த ஜிப்பில் உள்ள நம்பர் வேறு வேறாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பலருக்கும் ஒரே நேரத்தில் இந்த ஜிப்பை வழங்க இயலும். இந்த ஜிப் அடங்கிய கார்டுடன், அங்காடியில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள அடைடையை சென்சார் மூலம் இணைக்க வேண்டும்.

பார்வையற்றவர்கள் கடையில் உள்ள ஒவ்வொரு பொருளாக டிராலியில் எடுத்து வைக்கும் போது, அது என்ன பொருள், அதன் எடை எவ்வளவு? அது என்ன விலை? என்பதைக் கருவியில் உள்ள  ஸ்பீக்கர் அறிவிக்கும்.

டிஸ்பிளேயிலும் பொருள்களின் விவரம் வரும். அதை பார்வையுள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்களை எடுத்து வைத்தவுடன், அந்த விவரம் பல்பொருள் அங்காடியில் உள்ள கணினிக்குச் சென்றுவிடும். அவர்கள் வாங்கியுள்ள பொருள்களின் விலை பற்றிய அறிவிப்பும் கணினிக்குச்  சென்றுவிடும்.

பின்னர் பார்வைத்திறனற்றவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு வர வேண்டும்.

இந்தக் கருவி மூலம் பார்வையற்றவர்கள் சுலபமாக ஷாப்பிங் செய்யலாம். 

"ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பானது, தேசிய அறிவியல்தினத்தையொட்டி புதிய கண்டுபிடிப்புக்களுக்கான மாதிரி செயல்திட்ட வடிவமைப்பு போட்டியை நடத்தியது. 

இதில் இந்திய அளவில் சுமார் 3500 பேர் ஆன்லைன் மூலம் தங்கள் மாதிரி திட்டவடிவமைப்புக்களை தாக்கல் செய்தனர். இதில் 1000 பேர் கண்டறியப்பட்டு இறுதி சுற்றுக்கு இதில் 65 பேர் கலந்து கொண்டனர். 

இதில் 10 பேரின் கண்டு பிடிப்புகள் தேசிய அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளாக அறிவிக்கப்பட்டது. அதில் என்னுடைய இந்தக் கண்டுபிடிப்பும் ஒன்று'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com