சாப்பாட்டில் உப்பைக் குறைத்தால், அடிக்கடி பாத்ரூம் போகத் தேவையில்லை!

வயதானவர்களுக்கு “இரவுகளில் தூக்கம் வருவதே பெரும் பாடு. இதில் நடு நடுவே பாத்ரூம் செல்ல வேறு எழுந்திருக்க வேண்டியதிருக்கிறது. அப்புறம் தூங்கினாற் போலத்தான்
சாப்பாட்டில் உப்பைக் குறைத்தால், அடிக்கடி பாத்ரூம் போகத் தேவையில்லை!

வயதாகி விட்டால் வரும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. அது பாட்டுக்கு அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே தான் செல்லும். ஆனால் அவற்றைக் காது கொடுத்து கேட்பதற்கு தான் பெரும்பாலும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதனால் தான் பல பெரியவர்கள் தங்களுக்குத் தானே பேசிக் கொள்ளத் தொடங்குகிறார்களோ என்னவோ! அதை விட முக்கியமான இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. வயதானவர்களுக்கு “இரவுகளில் தூக்கம் வருவதே பெரும் பாடு. இதில் நடு நடுவே பாத்ரூம் செல்ல வேறு எழுந்திருக்க வேண்டியதிருக்கிறது. அப்புறம் தூங்கினாற் போலத்தான். வேறு வழியில்லாமல் இரவு முழுக்க பழைய கற்பனைகளில் மூழ்கிப் போய் தூக்கம் வராமல் கொட்டக் கொட்ட விழித்திருக்க வேண்டியதாகி விடுகிறது” என்று அங்கலாய்த்துக் கொள்ளும் முதியவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். அவர்களது பிரச்சினை தீர என்ன வழி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? 

இதென்னடா வம்பாப் போச்சு! வயசானா அப்படித்தான் இருக்கும். சிறுநீர் கழிக்கனும்னு பாத்ரூம் போய்த்தானே தீரனும். என்று அலுத்துக் கொள்ளத் தேவையில்லை. வயதானவர்கள் மட்டுமல்ல குழந்தைகளோ, இளைஞர்களோ, நடுத்தர வயதுடையவர்களோ யாரானும் சிறுநீரை அடக்கக் கூடாது, வரும் போது போய்த்தான் ஆக வேண்டும். என்பதெல்லாம்  சரிதான். ஆனால் நாளொன்றுக்கு மூன்று முறைகளுக்கும் மேலாக தூக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்க எழுந்து சென்றால் பிறகு சரியாகத் தூங்க முடியாது என்பதும் நிஜமே!

இதற்கென்ன தீர்வு? சில பாட்டிகளும், தாத்தாக்களும் நீண்ட தூர இரவுப் பயணங்களின் போது கூட இதனால் அதிகமாகத் தண்ணீர் அருந்த மறுத்து விடுகிறார்கள். அப்படி அருந்தும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதும் தவறே. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக வேறொரு உபாயம் இருக்கிறது என சமீபத்தில் லண்டன் ஐரோப்பியன் சொஸைட்டி ஆஃப் யூராலஜி துறையின் கீழ் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

அதென்ன உபாயம் என்கிறீர்களா?

நமது தினப்படி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தாலே போதும், தினமும் இரவில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அடிக்கடி நாலைந்து முறை பாத்ரூம் போக எழத் தேவையில்லையாம். லண்டனில் மட்டுமல்ல ஜப்பானிலும் இதே அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விசயம் மெய்பிக்கப் பட்டுள்ளது என உறுதிப் படுத்தியுள்ளனராம்.

அந்த ஆய்வுக்கட்டுரையின் படி சுமார் 321 நபர்களிடம் நடத்தப் பட்ட ஆய்வில் அவர்களுக்கு நாளொன்றுக்கு உணவில் சேர்த்து வழங்கப் பட்ட உப்பு அளவின் அடிப்படையில், சிறுநீர் கழிக்க எழும்  இடைவெளிகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் இருந்ததாம். அதாவது உப்பைக் குறைத்துக் கொண்டவர்கள் பகலில் ஓரிரு முறையும், இரவில் ஒரே ஒரு முறையும் தான் எழ வேண்டியிருந்ததாம். அதே சமயம் சாப்பாட்டில் உப்பு தூக்கலாகச் சேர்த்துக் கொண்டவர்களுக்கு பகலில் நான்கைந்து முறைகளும் இரவில் மூன்றுக்கு மேற்பட்ட முறைகளும் சிறுநீர் வெளியேற்றத்துக்காக எழ வேண்டியதாக இருந்ததாம். அதனால் நிபுணர் குழுவினர் என்ன சொல்கிறார்கள்? என்றால் அது சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள் என்பது தான்.

உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வெள்ளை வஸ்துக்களான அரிசி, சர்க்கரை, உப்பு பட்டியலில் இந்த உப்பைக் குறைத்துக் கொள்வதால் இப்படி ஒரு பலன் இருக்கிறதென்றால் தயங்காமல் பின்பற்றி விட வேண்டியது தானே!

மேலும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றனவா. இன்னமும் வேறு எதையாவது உணவுப் பொருட்களில் கூட்டவோ, குறைக்கவோ வேண்டுமா? இல்லையா? என்பதை இனி வரும் தொடர் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடுவதாக உள்ளனராம்.

மேலும் இந்த ஆய்வு குறித்துப் பேசுகையில், இரவுகளில் தூக்கத்தை கெடுக்கும் சிறுநீர் இடவேளைப் பிரச்சினைக்கு உப்பு காரணமாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் இது தான் முன்னோடி ஆய்வு என்றூ ஜப்பானிய பல்கலைக்கழக நிபுணர் குழுத் தலைவர் தஹிமோரா கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com