தாம்பத்யத்தில் பெண்ணை செயலற்ற பங்கேற்பாளராகக் கட்டமைக்கவே மீடியாக்கள் முயல்கின்றனவா?

கணவன் தாம்பத்தியத்துக்காக மனைவியை நாடும் போது உடனடியாக மறுப்பது தான் மனைவியின் நல்லியல்பு என எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.
தாம்பத்யத்தில் பெண்ணை செயலற்ற பங்கேற்பாளராகக் கட்டமைக்கவே மீடியாக்கள் முயல்கின்றனவா?

தாம்பத்திய உறவில் பெண்ணை செயலற்ற பங்கேற்பாளராகக் காட்டவே மீடியாக்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன என அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக் கழக ஆய்வுப் பேராசிரியை ரீட்டா சீபுரூக் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்துகள் அனைத்துமே தாம்பத்திய விசயத்தில் மீடியாக்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் தவறான சித்தரிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியாக அமைந்தன. வெளிநாடுகளை விட மீடியாக்கள் குறித்து அவர் முன் வைத்த குற்றச்சாட்டு நமது இந்தியாவுக்குத்தான் மிக அருமையாகப் பொருந்துவதாகவே தோன்றுகிறது. அவர் கூறியதிலிருந்து;

தொடர்ந்து மெகா சீரியல்கள் காணும் பழக்கமுடைய கல்லூரிப் பருவத்து பெண்கள் தொடர்களில் சித்தரிக்கப்படும் பெண் கதாபாத்திரங்களின் பாலியல் வறட்சித் தன்மை கலந்த தாம்பத்திய மறுப்புகளை புனிதம் என்றும் ஒரு குடும்ப ஸ்திரி இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்குத் திருமணமாகி குடும்ப வாழ்வு அமையும் போது; கணவன் தாம்பத்தியத்துக்காக மனைவியை நாடும் போது உடனடியாக மறுப்பது தான் மனைவியின் நல்லியல்பு என எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். தாம்பத்தியத்துக்கு உடனே ஒத்துக் கொண்டால் மனைவியின் பதி விரதா தன்மை குறித்து கணவனுக்கு சந்தேகம் எழக்கூடும் எனவும் அவர்களைத் தவறான கற்பிதம் செய்து கொள்ளத் தூண்டுபவையாகவே பெரும்பாலான தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் அமைந்துள்ளன என ரீட்டா கூறுகிறார். 

அவர் கூறியதை வைத்துப் பார்க்கும் போது; தாம்பத்திய உறவில் ஆணுக்கு இணையாக பெண்ணுக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு, திரைப்படங்களிலும், மெகாத் தொடர்களிலும் காட்டப்படுவது போல எப்போதும் மனைவி என்பவள் கணவனின் எதிர்பார்ப்புகளுக்கு மட்டுமே ஈடு கொடுத்துக் கொண்டு தனக்கான பாலியல் தேவைகள் குறித்து கணவனிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத, அல்லது அப்படிப் பகிர்ந்து கொள்வதே மிகப்பெரிய குற்றச் செயல் எனும்படியான மனநிலையில் இருப்பது என்பது நிஜமான சித்தரிப்பு இல்லை. மீடியாக்கள் ஏன் வலிந்து பெண்களை அவ்விதம் கட்டமைக்கின்றன என்றால் அதிலும் ஆணாதிக்க மனப்பான்மை இருப்பதாகவே கருத வேண்டியதாகிறது.

அமெரிக்காவில் வெளிவரும் ‘சைக்காலஜி ஆஃப் வுமன்’ எனும் மனோதத்துவக் காலாண்டிதழ் ஒன்றில்; தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கும் வழக்கமுள்ள திருமணமாகாத பெண்கள் தாம்பத்தியம் குறித்த தவறான கற்பிதங்களை தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வாயிலாகப் பெறுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் மட்டுமல்ல மிகவும் முற்போக்கானவர்கள் எனக் கருதப் படும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் பெண்களின் குறிப்பாக மனைவிகளின் நிலை இது தான் எனத் தெளிவாகத் தெரிகிறது.

Image courtsy: youtube

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com