மழையில் சாலைகள் அனைத்தும் சல்லடைக் கண்கள், விரும்பி விபத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

நமது ஊர் சிங்கப்பூர் அல்ல! இங்கு சாலைகள் அத்தனையும் சல்லடைக் கண்கள். எப்போது வேண்டுமானாலும் உள்ளே விழுந்து காணமல் போகும் வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,
மழையில் சாலைகள் அனைத்தும் சல்லடைக் கண்கள், விரும்பி விபத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

சென்னை என்று இல்லை தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா பெரு நகரங்களிலும் சாலைகள் சதா செப்பனிடப்பட்டுக் கொண்டும், புதிய சாலைகள் போடப்பட்டுக் கொண்டும் தான் இருக்கின்றன. ஆயினும் அந்தச் சாலைகள் அனைத்துமே ஒரே வருடத்தில் பல்லிளிக்கத் தொடங்கி விடுகின்றன. ஒரு பெரு மழையைத் தாங்காத இந்தச் சாலைகளை நம்பித்தான் லட்சோப லட்சம் மக்கள் தினமும் சாலைகளைப் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட லட்சணமான அதிரூப செளந்தர்யமிக்க சாலை வசதிகளைக் கட்டமைப்பதற்கும் சேர்த்துத் தான் வரி என்ற பெயரில் பொது மக்களிடம் பணம் வசூலிக்கிறது அரசு. ஆனால் ஒருமுறை கூடத் தரமான சாலைகளை அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பெற நம் மக்களுக்குக் கொடுப்பினை இல்லை. தரமற்ற சாலைகளால் சாதாரண காலங்களிலேயே விபத்துக்கள் நேர்வது அதிகம் எனும் போது, இந்த மழைக்காலங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தினமும் நகரின் ஏதோ ஒரு மூலையில் சிறிதாகவோ, பெரிதாகவோ ஏதேனும் சில விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. விபத்து சிறிதோ, பெரிதோ ஆனால் அதனால் உண்டாகும் இழப்பு மட்டும் ஒரே விதமான துக்கத்தையே அளிக்க வல்லது. விபத்து நடந்து முடிந்த பின் நாம் எல்லோருக்குமே வரக்கூடிய பொதுவான ஒரு எண்ணம் இது நமக்கு வராமல் இருந்திருக்கலாமே! என்பது. ஆனால் , விபத்து நடந்து முடியும் தருணம் வரையிலும் அதைத் தடுப்பதற்கான அத்தனை முனைப்புகலும் நம்மிடமே இருந்திருக்கக் கூடும் என்பதைப் பல சமயங்களில் நாம் வசதியாக மறந்து விடுகிறோம் என்பது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

இன்றைய தேதிக்குச் சென்னையைப் பொறுத்தவரை பிரதான சாலைகள் முதல் கிளைச்சாலைகள் வரை எல்லாச் சாலைகளுமே பழுதாகித் தான் கிடக்கின்றன. அவற்றைச் செப்பனிட்டும் புண்ணியமில்லை. மீண்டும் ஒரே வார கெடுவுக்குள் வேறு ஏதேனும் காரணத்தை முன்னிட்டு சாலையோரங்களையோ அல்லது நடுச்சாலைகளை மறித்து பாதையை மாற்றி விட்டோ தோண்டத் துவங்கி விடுகிறார்கள். முன்பெல்லாம் சென்னை என்றாலே மெரினா பீச், கோல்டன் பீச், அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம், உயிர் காலேஜ், செத்த காலேஜ், இவற்றோடு சேர்த்து வடபழனி முருகன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், இப்படிச் சில இடங்கள் மட்டுமே சட்டென நினைவுக்கு வரும். ஆனால், இப்போது பட்டென நினைவுக்கு வருபவை சென்னையில் நீக்கமற நிறைந்திருக்கும் சாலைப் பள்ளங்களும், அங்கிங்கெனாத படி எங்கும், எப்போதும் திணறடிக்கத் தயாரான நிலையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களும் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு இங்கிருப்பவர்கள் இதையெல்லாம் முன் கூட்டியே சொல்லி எச்சரித்து நகருக்குள் நுழையச் செய்யலாம். அந்த அளவுக்கு திடீரெனக் குறுக்கிடும் சாலைப் பள்ளங்களும், சிக்னலுக்கு சிக்னல் தேவுடு காக்க வைக்கும் போக்குவரத்து நெரிசல்களும் சென்னை மக்களின் அசாத்தியப் பொறுமையை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் சோதித்து வருகின்றன. 

சென்னை கிட்டத்தட்ட மும்பையாக மாறிக் கொண்டிருப்பதன் அறிகுறியாக இதைக் கருதலாமோ!

அதனால் சென்னைவாசிகள் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நமது ஊர் சிங்கப்பூர் அல்ல! இங்கு சாலைகள் அத்தனையும் சல்லடைக் கண்கள். எப்போது வேண்டுமானாலும் உள்ளே விழுந்து காணமல் போகும் வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆதலால் வாகன ஓட்டிகள் மழைக்கால போக்குவரத்தில் மிகுந்த நிதானத்தையும், பொறுமையையும் கடை பிடித்தால் உத்தமம். இல்லையேல் நாமே விரும்பி விபத்துக்களைத் தேடிக் கொண்டவர்கள் ஆவோம்!

இந்த மழைக்காலத்தில் விட்டு விட்டு மழை தொடர்ந்து கொண்டே இருப்பதால், பெரும்பாலான சாலைகள் அரித்துக் கொண்டு கரைந்த வண்ணம் இருக்கின்றன. பழகிய சாலை தானே, மதிய நேரங்களில் சாலைகள் வாகன நெரிசல்கள் ஏகாந்தமாக இருக்கின்றன என்றெண்ணி உங்கள் வாகனங்களின் ஆக்ஸிலேட்டர்களை முடுக்கி விட்டு ஜிவ்வெனப் பறக்கிறோம் என்ற பெயரில் எங்காவது சாலைக்குழிகளுக்குள் ஏடாகூடமாக விழுந்து வைக்காதீர்கள். விபத்துக்கள் அது சிறிதோ, பெரிதோ எந்த ரூபத்தில் வந்தாலும் பாதிப்பு ஒன்றே!

முதலாவது விபத்தால் நேரும் காயம் மற்றும் அதன் வலி;
இரண்டாவது வேலை கெடுதல். திட்டமிட்ட வேலைகள் அனைத்தையுமே விபத்துகள் நாசமாக்கி விடும்.
மூன்றாவது திடீர் பொருளாதார விரயம். மருத்துவருக்கு அழுவதோடு மட்டுமின்றி வாகனங்களில் ஏற்படும் சிதைவுகளுக்கும் சேர்த்து தண்டம் அழ வேண்டும். இன்ஸூரன்ஸ் செய்திருந்தால் கூட அதற்காக வேண்டி விரும்பி விபத்துக்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை தானே!

ஆதலால் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் கவனமாகப் பயணிக்க வேண்டும் என்ற விஷயத்தை ஒரு முறைக்கு இரு முறை மனதில் பதிய வைத்துக் கொண்டு அவரவர் வாகனங்களை இயக்கத் தொடங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com