உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?

நிறங்களுக்கு பல குணங்களுண்டு. அதை உடுத்துபவர்களுக்கும் அந்த உணர்வுகள்
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?

சிறு வயதில் வண்ணங்கள் என்றாலே ஆச்சரியமான ஒரு விஷயம். குழந்தைகள் நிறங்களுக்கு அறிமுகமாகும் காலகட்டத்தில் ஒவ்வொரு நிறத்தையும் கண்கள் விரிய பார்த்து ரசிப்பார்கள். படம் வரைந்து கலர் செய்வதை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம். அவ்வகையில் குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதிவரை வண்ணங்கள் நம்முடன் உறவாடிக் கொண்டிருக்கும். இத்தகைய வண்ணங்களுடன் நம் எண்ணங்களுக்கும் தொடர்பு உள்ளது எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

உண்மைதான், நிறங்களுக்கு பல குணங்களுண்டு.  பளிச்சென்று ஒரு புத்தாடையை அணியும் போது நம்முடைய உணர்வுநிலையில் சில மாற்றங்கள் தோன்றும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆள் பாதி ஆடை மீது எனும் பழமொழியைப் போல நாம் அணிகிற ஆடைதான் நம்மை அடையாளப்படுத்தும். அதுவும் அந்தந்த இடத்துக்கு ஏற்ப ஆடை அணிகிறபோது நம்முடைய மதிப்பு உயரும். அழகுணர்ச்சியுடன் நிறங்களைத் தேர்ந்தெடுத்து ஆடைகளை அணிய வேண்டும், அடுத்தவர் கண்களைப் பறிக்கும் விதமாகவும் ஆடை அணிந்து செல்வதும் சரிவராது. இடத்துக்கும், பொழுதுக்கும், சூழலுக்கும் தகுந்தாற் போல் ஆடை அணிவதுதான் சிறப்பு.

சிலர் தங்களுக்கு பிடித்த நிறம் சிவப்பு என்றால் தொடர்ந்து அதே நிறத்தில் ஆடைகள் வாங்கிக் குவிப்பார்கள். வீட்டிலும் திரைச்சீலையிலிருந்து மிதியடிவரை சிவப்புதான் ஆட்சி செய்யும். அப்படியும் ஒரேடியாக ஒரே வண்ணத்தையும் பயன்படுத்துவது கண்களை உறுத்திக் கொண்டிருக்கும். எனவே எல்லா நிறங்களுக்கும் இடம் கொடுப்பது நல்லது. சிலர் கலகலப்பாகப் பழகும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அடர் நிறங்களையே தேர்வு செய்வார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்றால் வெள்ளை நிறம் அல்லது சந்தன நிற உடைகளை விரும்புவார்கள். என்ன என்ன நிறங்களுக்கு எவ்வித தன்மை உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

  • பச்சை நிறம் மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது. (உதாரணம் மருத்துவமனைகளில் பெரும்பாலும் பச்சை நிறம் பயன்படுத்தப்படுகிறது)
  • வெள்ளை நிறம் தூய்மையான ஒரு நிறம். மனதிற்கு அமைதியை தரும். மனதுக்குள் உறைந்திருக்கும் தெய்விக குணங்களை உள்ளிருந்து வெளிப்படுத்தும்.
  • மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. எழுச்சி நிறம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமான இந்த நிறம் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.
  • நீல நிறம், மகிழ்ச்சியின் தூதன். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.
  • காக்கி நிறம் சேவை உணர்வை தூண்டும். பெரும்பாலான சீருடைகள் காக்கி நிறத்திலிருப்பது இதனால்தான்.
  • காவி நிறம், மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
  • சிவப்பு, உக்ரமான நிறம். கருப்பு நிறம் வருத்தம், சோகம், எதிர்ப்பை வெளிப்படுத்தும்.
  • இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம், மென்மையான உணர்வைத் தூண்டும். காதல், கருணை என்ற பொருளிலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.
  • கரும்பச்சை நிறம், மனோபலம், தைரியத்தைக் கொடுக்கும்.
  • இளம்பச்சை, புத்துணர்ச்சி தரும். புதுமையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com