மணமகனைத் தேடிச் சென்ற பயணமா? / பலாத்காரத்தை தேடிச் சென்ற பயணமா? விஜயவாடா பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

ரயில்வே போலீஸார் கூற்றுப்படி, ஓடும் ரயில் பெட்டியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வராத காரணத்தால், ரயில், சிங்கராயன்பேட்டை ரயில் நிலையத்தை தாண்டியதும், அந்த மூவரும் தன்னைப் பாலியல் பலாத்காரம்
மணமகனைத் தேடிச் சென்ற பயணமா? / பலாத்காரத்தை தேடிச் சென்ற பயணமா? விஜயவாடா பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

சென்னையில், மென்பொருள் வல்லுனராகப் பணியாற்றி வரும் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், திருமணத்திற்காக தனக்குப் பார்த்த வரனைச் சந்திக்க வியாழன் அன்று காலையில் விஜயவாடாவுக்கு கிளம்பினார். அந்தப் பெண் பயணித்தது, ஹைதராபாத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலின் S1 கோச். 

அவர் தனக்குரிய ரயில் பெட்டியில் ஏறும் போதே உள்ளே  முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டில் மூன்று நபர்கள் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். மூவரும் ஆண்கள். அவர்களின் பெயர்கள் முறையே 22 வயது முகமது, 25 வயது ஹரி கேஷவ் யாதவ், 42 வயது சதகத் கான். மூவரும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்ததுடன் இல்லாமல் முறையாக டிக்கெட் எடுத்துப் பயணித்த விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண்ணை நோக்கி பாலியல் ரீதியாக மோசமான கமெண்டுகளை அள்ளி வீசத் தொடங்கியதோடு அந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும் பலாத்காரப் படுத்த முனைந்திருக்கின்றனர். இத்தனையும் நடந்தது பட்டப்பகலில், வியாழன் அன்று நண்பகல் நேரத்தில். 

ரயில்வே போலீஸார் கூற்றுப்படி, ஓடும் ரயில் பெட்டியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வராத காரணத்தால், ரயில், சிங்கராயன்பேட்டை ரயில் நிலையத்தை தாண்டியதும், அந்த மூவரும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற பயத்தில், அவர்களிடமிருந்து தப்பும் நோக்கில், அந்த இளம்பெண் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார். கீழே குதித்த வேகத்தில், கடுமையான காயங்களுடன் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப் பட்ட அந்தப் பெண் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உடலில் காயங்கள் அதிகமிருந்த போதும், அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷயமறிந்த ரயில்வே போலீஸார் உடனடியாக விஜயவாடா ரயில்வே போலீஸாரை அலர்ட் செய்ய S 1  கோச்சில் முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டில் பயணித்துக் கொண்டிருந்த அந்த மூன்று நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பலாத்காரத்திலிருந்து தப்பிய பெண்ணின் நிலை பற்றி காவல்துறை அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவரைச் சந்திக்க அவரது பெற்றோர் பதட்டத்துடன் விரைந்தனர். பட்டப்பகலில் ஓடும் ரயிலில் நிகழ்ந்த இச்சம்பவம் அடிக்கடி ரயிலில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும் இளம்பெண்களின் மனதில் பீதியைக் கிளப்புவதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com