சந்தோஷமாக வாழ்வதற்கு புத்தர் கூறிய அறிவுரை என்ன?

மலேஷியாவில் 1964-ல் புத்த தர்ம பிரசாரகர் தம்மானந்தர்
சந்தோஷமாக வாழ்வதற்கு புத்தர் கூறிய அறிவுரை என்ன?

மலேஷியாவில் 1964-ல் புத்த தர்ம பிரசாரகர் தம்மானந்தர் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். பலர் பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர்.

சந்தோஷத்தை அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்தரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியது இந்த நான்கு விஷயங்களையும் தம்மானந்தர் தம் உரையில் விளக்கமாகக் கூறினார்.

உத்தான சம்பதம்

ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையானவை திறமை, தொழில் நேர்த்தி, ஆர்வம், உடல் சக்தி ஆகிய நான்கும் ஒருங்கே அவனுக்கு இருக்க வேண்டும். இதுவே உத்தான சம்பதம்.

அர்த்த சம்பதம்

பாடுபட்டு ஈட்டிய பணத்தை அறவழியில் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதுவே அர்த்த சம்பதம்.

கல்யாண மித்தம்

அன்பு, புரிதல் ஆகிய பண்புகளை உடைய நல்ல நண்பர்கள் ஒருவனை தீய வழிகளில் செல்ல விட மாட்டார்கள். அத்தகைய நட்பு ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். இதுவே கல்யாண மித்தம்.

சம ஜீவிகதம்

சம்பாதிக்கும் பணத்துக்கு ஏற்ற வகையில் நியாயமான வழியில் முறையாக செலவழிக்க வேண்டும். பணம் உள்ளதே என்று மிக அதிகமாகச் செலவு செய்தலும், அதே சமயம் கஞ்சத்தனம் கொண்டு மிகக் குறைவாகவும் செலவழிக்கக் கூடாது. தன் வருவாய்க்கு தகுந்தாற் போல் வரவு செலவுகளை சமமாக பாவிக்க வேண்டும். இதுவே சம ஜீவிகதம்.

இந்த நான்குமே நீடித்த சந்தோஷத்தை அடைவதற்கான நல்வழிகள். இவை இந்த உலகில் வாழும் போது கடைபிடிக்க வேண்டியவை. அதற்குப் பின்னரும் சில வழிமுறைகள் உள்ளன. அவை 

சிரத்தை

ஒழுக்கம், ஆன்மிகம் மற்றும் அறிவு ஆகியவற்றில் மனிதர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். இதுவே சிரத்தை.

சீலம்

பொய், புரட்டு, திருட்டு, வஞ்சகம், ஏமாற்றுதல், பிறன் மனை நோக்குதல் போன்ற தீய குணங்கள் ஒருவனுக்கு இருக்கக் கூடாது. மது அருந்துவது, போதை பழக்கத்துக்கு ஆட்படுத்துவது தவறாகும். நல்லொழுக்கத்துடன் வாழ்தல் வேண்டும். இதுவே சீலம். 

ககா

மனிதன் எப்போதும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். தர்ம சிந்தையுடன் வாழ்தல் வேண்டும். பொருள்ரீதியான வாழ்க்கையின் மீது பற்று வைக்காமல் தாரளமான மனத்துடன் வாழ வேண்டும். இதுவே ககா.

பன்னா

துயரத்தை அழிக்கும் ஞானம் ஒருவனுக்கு வாய்க்கப் பெற வேண்டும். அதுவே அவனை முழு மனிதனாக்கும். தூமையான நிர்வாணத்திற்கு வழி வகுக்கும். இதுவே பன்னா.

எனவே சிரத்தா, சீலம், ககா, பன்னா ஆகிய நான்கையும் ஒருவன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தால் இவ்வுலக வாழ்விற்குப் பின்னரும் சந்தோஷம் அடையலாம் என்று புத்தர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com