அட்சய திருதியில் தங்கம் வாங்க ஆசைப்படுகிறீர்களா?

அட்சய திரிதியை நாள், பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள்.
அட்சய திருதியில் தங்கம் வாங்க ஆசைப்படுகிறீர்களா?

அட்சய திரிதியை நாள், பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள். விநாயகரின் துணை கொண்டு வியாசர் மகரிஷி மகாபாரதத்தை தொகுக்க ஆரம்பித்த நாள்.  சிவபெருமானின் ஜடாமுடியில் கட்டுண்ட கங்கை மாதா பகிரதனின் பெரும் முயற்சியால் நம் பாவங்களைப் போக்க பூமியில் குதித்த நாள். சதுர்யுகங்களில் கிருதாயுகம் முடிந்து 12,96,000 ஆண்டுகள் கொண்ட திரேதாயுகம் ஆரம்பித்த நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள். குபேரன் தவமிருந்து செல்வத்தைப் பெற்ற நாள் என்பதால், நாமும் மகாலட்சுமியை பூஜை செய்யவேண்டும்.

இந்த நாளில் முடிந்த அளவு ஏழைகளுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்குதல், விசிறி வாங்கிக் கொடுத்தல், குருவுக்கு வஸ்திரம், பழம் போன்றவற்றை காணிக்கையாக்கி ஆசி பெறுதல் போன்ற தர்மங்களால் எல்லா வளமும் இறைவன் அருளால் பெறலாம்.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை சித்திரை மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி (புதன்கிழமை) அட்சய திருதியை கொண்டாடப்படும். அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரும், என்பது ஐதீகம். இதையொட்டி ஆண்டுதோறும் அட்சய திரிதியை நாளில் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். அன்றைய தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என மக்கள் நகைக் கடைகளுக்கு பெருமளவில் செல்வர். ஏப்ரல் 18-ம் தேதியன்று காலை 5:58 முதல் 12:08 வரை தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நல்ல நேரம்.

சென்னையில் சனிக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.256 உயர்ந்து, ரூ.23,936-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம், ரூ.2,992 விற்கப்படுகிறது. மேலும், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் வாடிக்கையாளர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலை ஏற்றத்துக்கும்
இறக்கத்துக்கும் முக்கிய காரணங்கள். கடந்த ஆண்டில் பல நகைக் கடைகளில் கிராமுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கட்டணச் சலுகை அறிவித்திருந்தனர். மேலும் செய்கூலி, சேதாரத்திலும் சலுகை அறிவித்திருந்தனர். ஆனாலும் மக்களிடையே ஆர்வமின்மையால் விற்பனை குறைந்துவிட்டதாக நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்குமா அல்லது மக்கள் ஆர்வமுடன் நகை வாங்குவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com