பாட்டியின் வேதனை குரங்குக்குப் புரிந்த அளவுக்கு கூட மனிதர்களுக்குப் புரியவில்லை, என்ன மாதிரியான உலகம் இது?!

ந்தப் புகைப்படத்தைக் காண்கையில் மிக உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது, மனிதர்களைக் காட்டிலும் குரங்குகளுக்கு மிக அருமையாக மனிதர்களின் வேதனைகளைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறது என்பதை
பாட்டியின் வேதனை குரங்குக்குப் புரிந்த அளவுக்கு கூட மனிதர்களுக்குப் புரியவில்லை, என்ன மாதிரியான உலகம் இது?!

கடந்த வாரம் இணையத்தில் வைரல் டிரெண்ட் அடித்த புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தை நன்கு உற்றுக் கவனியுங்கள். அந்தப் பாட்டியின் முகத்தில் வழியும் வேதனை உணர்வு பார்ப்போரை உருகச் செய்யும் விதத்தில் மனம் நெகிழச் செய்கிறது. பாட்டியின் வேதனையைக் கூட, ‘அட இப்படி எத்தனை பேரை நாள்தோறும் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் நகரத்தின் பரபரப்பான இன்னபிற இடங்களிலும் கடக்க நேர்கிறது. அவர்களை நின்று கவனிக்கக்கூட நேரமில்லை. வேலை தலைக்கு மேலே மூழ்கடிக்கக் காத்திருக்கையில் இப்போது இந்தப் பாட்டியின் வேதனை தானா எனக்குப் பெரிது?!’ என்ற ரீதியில் நம்மில் பெரும்பாலானோர் கடந்து விடுகிறோம். ஆனால், பாட்டியின் தோளின் மீது அரவணைப்பாக கை வைத்துக் கொண்டு அவரது வேதனையைச் செவி மடுக்கும் அந்தக் குரங்கைப் பார்க்கையில் அது  கடந்து செல்பவர் யாருக்குமே சற்று அதிசயமாகத் தான் இருக்கிறது.

இதில் பரிதாபம் என்னவென்றால் அந்தப் பாட்டியின் வேதனைக் குரலை இந்தக் குரங்கு செவி மடுத்ததைப் போல சற்று ஆறுதலாக எண்ணக் கூட நம்மில் யாருக்கும் மனமிருப்பதில்லை என்று எண்ணும் போது இந்த விசித்திர உலகின் பரபரப்பை எண்ணி ஒரே சமயத்தில் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருவேறு பரிணாமங்களில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கு மட்டுமல்ல இந்தப் புகைப்படத்தை காண நேரும் யாருக்குமே தான்!

கோடை விடுமுறையில் சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அருவிக்குச் செல்லும் வழியில் நிறையக் குரங்குகள் உண்டு. அரசு சுற்றுலா மாளிகையின் சுற்றுச் சுவர்கள், மாடி அருகிலிருக்கும் மரங்கள் என அங்கு எங்கெங்கு நோக்கினும் ஒரே குரங்குப் பட்டாளம் தான். சிறிது தூரம் கடந்ததும் வழியின் குறுக்கே ஓடி வந்த குட்டிக் குரங்கு ஒன்று எங்கள் கையிலிருந்த பையைப் பிடுங்க வழி இருக்கிறதா? என்று சுற்றிச் சுற்றி ஆராய்ந்து விட்டு வழியில்லை எனத் தோன்றியதும் பேசாமல் ஓடியது.

அதையடுத்து சில அடி தூரத்தில் குரங்குக் குடும்பம் ஒன்று அடிபட்டு உடல் முழுதும் காயங்களுடன் இருந்த பெரிய குரங்கு ஒன்றுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. குடும்பத்தின் குட்டிக் குரங்கு, அடிபட்ட வயதான குரங்கின் உடல் முழுதும் காயங்கள் எங்கெங்கு உள்ளன என்று தடவிப் பார்த்து கண்டறிந்து ஆறுதலாக நீவி விட்டுக் கொண்டே இருந்தது. அட குரங்குகளுக்கு ஆறுதல் சொல்லத் தெரியுமா? என்று யோசித்துக் கொண்டே நாங்கள் கடந்து சென்றோம்.

இப்போது இந்தப் புகைப்படத்தைக் காண்கையில் மிக உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது, மனிதர்களைக் காட்டிலும் குரங்குகளுக்கு மிக அருமையாக மனிதர்களின் வேதனைகளைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com