தந்தைக்கு விசா நீட்டிப்பு பெற்றுத்தந்த 9 வயது இந்தியச் சிறுவனின் சிறப்புத் திறன்!

ஷ்ரேயஸ் தற்போது தன் தந்தையின் வேலை நிமித்தம் வசிப்பது லண்டனில். அங்கே அவரது தந்தை ஜிதேந்திர சிங்கின் வேலைக்கான விசா காலக்கெடு அடுத்த மாதத்தோடு முடிவடையவிருக்கிறது.
தந்தைக்கு விசா நீட்டிப்பு பெற்றுத்தந்த 9 வயது இந்தியச் சிறுவனின் சிறப்புத் திறன்!

ஷ்ரேயஸ் ராயல்... இந்தக் குட்டிப் பையனுக்கு வயது 9 தான். ஆனால், அதற்குள் தந்தை மெச்சிய தனயனாகியிருக்கிறார். ஷ்ரேயஸ் ராயல் ஒரு குழந்தை மேதை. தனது 9 வயதுக்குள் உலகின் தலை சிறந்த செஸ் சாம்பியன்கள் லிஸ்டில் நான்காமிடம் பிடித்திருக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். பையனுக்கு செஸ் விளையாட்டு என்றால் சோறு, தண்ணீரே வேண்டியதில்லை.. அத்தனை ஈடுபாடாம் அந்த விளையாட்டில். அதனால் தான் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தற்போது உலக அளவில் 4 ஆம் இடம் பெற முடிந்திருக்கிறது. 

சரி இதற்காகத் தான் ஷ்ரேயஸை அவரது தந்தை மெச்சியிருக்கிறாரா என்றால்? அது தான் இல்லை. பிறகு வேறெதற்கு?

ஷ்ரேயஸ் தற்போது தன் தந்தையின் வேலை நிமித்தம் வசிப்பது லண்டனில். அங்கே அவரது தந்தை ஜிதேந்திர சிங்கின் வேலைக்கான விசா காலக்கெடு அடுத்த மாதத்தோடு முடிவடையவிருக்கிறது. இந்நிலையில் விசா காலம் முடிவடைந்து விட்டால் ஸ்ரேயஸின் குடும்பம் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியாக வேண்டும் என்பது தான் விதி. ஆனால், குழந்தை மேதையான ஷ்ரேயஸை விட்டுத்தர பிரிட்டிஷ் எம்பிக்கள் விரும்பவில்லை. இந்தப் பையனின் திறமைக்காக இவரை மேலும் லண்டனிலேயே தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தனர் பிரிட்டிஷ் எம்பிக்கள். அவர்களது தொடர் அழுத்தத்தின் காரணமாக  யு.கே உள்துறை செயலர் சஜித் ஜாவித், தற்போது சிறப்பு அனுமதியின் பெயரில் ஷ்ரேயஸின் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அவனது தந்தையின் விசா காலத்தை நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது. இதை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் மின்னஞ்சல் வாயிலாக ஷ்ரேயஸின் தந்தைக்கு தெரிவித்த உடனே அவர் சந்தோஷத்துடன் ஷ்ரேயஸுக்கும்  தகவலைத் தெரிவித்துள்ளார். அவ்வளவு தான் பையனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சோஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விட்டான். எங்கள் குடும்பம் மொத்தமும் அன்று முழுவதும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தோம். என்று கூறுகிறார் ஷ்ரேயஸின் தந்தை ஜிதேந்திர சிங்.

ஷ்ரேயஸுக்கு கிடைத்திருக்கும் இந்த சிறப்பு அங்கீகாரம் குறித்து  இங்க்லீஷ் செஸ் ஃபெடரேஸன் தனது மேலான மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு பிரிட்டிஷ் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

தனது மூன்று வயது வரை இந்தியாவில்,  பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வந்த ஷ்ரேயஸ் அதன் பின் தன் தந்தையின் பணிநிமித்தம் லண்டன் சென்றார். அங்கு சென்றதிலிருந்து தொடர்ந்து செஸ் விளையாடி வரும் ஷ்ரேயஸ் அதில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். அதன் காரணமாக தங்களது மகனை பிரிட்டிஷ் அரசு தனது சொத்தாகப் பாவித்து சிறப்பு கவனத்தை அளித்தால் அவர் செஸ் விளையாட்டில் மேலும் சாதிப்பார் என்பதே பெற்றோரான தங்களது நம்பிக்கை என்கிறார்கள் ஷ்ரேயஸின் பெற்றோர்.

மகனால் விசா நீட்டிப்பு பெற்றுள்ள பெற்றோர் தற்போது தங்களது மகிழ்வை பிரிட்டிஷ் அரசோடும், தங்களது மகனுக்காகக் குரல் கொடுத்த பிரிட்டிஷ் குடிமக்களோடும் நன்றியோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com