காக்காவுக்கு கறுப்பு நிறம் எப்படி வந்தது? பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

நாள்தோறும் காலையில் உதித்தெழும் சூரிய பகவான், வழியில் ஓர் இளவரசியைப் பார்த்து ஆசைப்பட்டார்.
காக்காவுக்கு கறுப்பு நிறம் எப்படி வந்தது? பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

நாள்தோறும் காலையில் உதித்தெழும் சூரிய பகவான், வழியில் ஓர் இளவரசியைப் பார்த்து ஆசைப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் மனித உருவெடுத்து இளவரசியைச் சந்தித்து அன்பு செலுத்தி வந்தார். இளவரசியும் பதிலுக்கு அவரது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பது வழக்கமாகிவிட்டது.

ஒருநாள் சூரிய பகவான் தனது அன்பை இளவரசிக்குத் தெரிவிப்பதற்காக ரத்த சிவப்பு நிற வைரமொன்றை அவளுக்கு அன்பளிப்பாக அனுப்ப நினைத்தார். அதை ஒரு பட்டுத் துணியிலான பைக்குள் இட்டு, வேகமாகப் பறந்து கொண்டிருந்த காக்கையை அழைத்தார். அப்போதெல்லாம் காக்கைகள் பால் போன்று வெண்மை நிறத்தில் இருந்தன. மனிதர்கள் அருகில் காக்கைகள் வந்தாலே அதிர்ஷ்டம் என்று கருதினார்கள். அதனால் இளவரசிக்கு காக்கை மூலம் தன்னுடைய பரிசை கொடுத்தனுப்பினால் அவளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமென சூரிய பகவான் நினைத்தார்.

வைரம் அடங்கிய பட்டுத் துணியிலான பையை அலகில் கவ்விக் கொண்டு மேகக் கூட்டங்களுக்கிடையே காகம் சென்றபோது, வழியில் எங்கிருந்தோ வந்த உணவு வாசனையை உணர்ந்தது. கீழே பார்த்தபோது திருமண விருந்தொன்று நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே சூரிய பகவான் தனக்களித்த வேலையை மறந்தது. முதலில் உணவை ருசி பார்த்து விடவேண்டுமென நினைத்தது.

மரக்கிளை ஒன்றில் அமர்ந்த காகம், தன்னிடமிருந்த பையை அங்கு முடிச்சு போட்டுவிட்டு உணவைத் தேடிச் சென்றது. காகம் உணவருந்தி கொண்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வியாபாரி ஒருவன்மரத்தில் பை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் கையிலிருந்த கோலால் அதை நெம்பி எடுத்தான். பையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் வைரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். 

அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வைரத்தை எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டு அதற்குப் பதிலாக உலர்ந்த மாட்டு சாணத்தை அதற்குள் போட்டு பழையபடி மரக்கிளையில் பையை தொங்க விட்டுச் சென்றான்.

இவையனைத்தையும் அவன் நொடிப் பொழுதில் செய்து விட்டுச் சென்றது காகத்திற்குத் தெரியாது. வயிறாற சாப்பிட்டுவிட்டு வந்த காகம் மரக்கிளையிலிருந்த பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டது. அரண்மனை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த இளவரசியிடம் சென்று அந்தப் பையை காகம் ஒப்படைத்தது. இது சூரிய பகவான் அனுப்பிய பரிசாகத் தான் இருக்குமென அவளுக்குத் தெரியும்.

ஆவலோடு பையைத் திறந்து பார்த்தாள். அதில் இருந்தவை அவளுக்கு அருவெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தன்னை சூரிய பகவான் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படியொரு பரிசை அனுப்பியிருப்பதாகக் கருதிய அவள், அதைத் தூர எறிந்துவிட்டு அழுதபடியே அரண்மனைக்குள் சென்றாள். திரும்பவும் அவள் வெளியே வரவே இல்லை.

நடந்தவற்றை அறிந்த சூரிய பகவான் மிகவும் ஆத்திரமடைந்தார். அவரது கோபத்தினால் வெளிப்பட்ட அக்னி பார்வை காகத்தைச் சுட்டெரித்தது. அதனுடைய உடலும் இறக்கைகளும் கருப்பாக மாறின. அப்போது முதல் காக்கைகள் கருமை நிறத்துடன் காட்சியளிக்க ஆரம்பித்தன. 

கதை இத்துடன் முடியவில்லை. வைரத்தைத் திருடிச் சென்ற வியாபாரியின் பைக்குள் இருந்த வைரம் கீழே நழுவி ஒரு ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து மறைந்தது.

அப்போது முதல் அந்த வைரத்தைத் தேடி பலர் பூமியை ஆழமாகத் தோண்டி வந்தாலும், வேறு வகையான வைரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறதே தவிர சூரிய பகவான் இளவரசிக்கு கொடுத்தனுப்பிய சிவப்பு வைரம் மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய பர்மா (இன்றைய மியான்மர்) உலகில் வைரச் சுரங்கங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரபலமாயிற்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com