சாதனைப் பெண்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படியுங்கள்!

சாதனைப் பெண்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படியுங்கள்!

சாதனைகள் பல புரிந்த  பெண்மணிகள் பலரைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தேடிப் பிடித்து

சாதனைகள் பல புரிந்த  பெண்மணிகள் பலரைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தேடிப் பிடித்து, விடாமுயற்சியுடன் அவற்றை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அவற்றை நூலாக வடித்தெடுத்துத் தந்திருக்கிறார் பேராசிரியை பானுமதி தருமராசன். புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்டவர் பேராசிரியை பானுமதி தருமராசன். மகளிர் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியும், எழுதியும் வருகிறார்.

பேராசிரியை பானுமதி, புதுக்கோட்டை ஸ்ரீசாரதா நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், ஆலங்குடி கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யையும் பயின்று,  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி. (வேதியியல்) பட்டமும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ., (வரலாறு) எம்.ஃபில் (வரலாறு) பட்டங்களும் பெற்றவர். 1969-இல் நாமக்கல் அரசுக் கல்லூரியில் வேதியியல் விளக்குநராகவும் இருந்துள்ளார்.  (DEMONSTRATOR IN CHEMISTRY), வட சென்னை மகளிர் அரசுக் கல்லூரி, பொன்னேரி மாநிலக் கல்லூரி, ராணிமேரி  கல்லூரி ஆகியவற்றில் வரலாற்றுப் பேராசிரியையாகப் பணியாற்றி,  2006-இல் பணி நிறைவு பெற்றார். 

பணி நிறைவுக்குப் பின்னரும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத்துறை மதிப்புறு பேராசிரியையாகப் பணியாற்றினார். அதுமட்டுமல்ல,  இன்றுவரை "தொடர் கல்வித் துறை'யின் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடங்களையும், பாட நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

38 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்து இயங்கி வரும் இவர், வரலாறாய் வாழ்ந்து சாதனை படைத்த பெண்மணிகள் பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை  "வரலாறு படைத்த வைர மங்கையர்' என்கிற பெயரில் மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். சாதனை புரிந்த 52 பெண்மணிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இம்மூன்று தொகுதிகளிலும் உள்ளன. 

அது மட்டுமல்ல, 45 ஆண்டுகளாக முதுகலை மற்றும் மேற்படிப்பு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு வரலாற்றுப் பேராசிரியையாக  இருந்து  போதித்து வருகிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்திற்காக "பன்னாட்டு உறவும் அரசியல் சூழ்ச்சித் திறனும்'; சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்துக்காக, "தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறும் அண்டை நாடுகளும்'; அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்திற்காக "மொகலாய வரலாறு'  ஆகிய நூல்களைத்  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  வரலாறு தொடர்பான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை, இந்திய வரலாற்றுப் பேரவை ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருக்கிறார். பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"சாதனை மங்கையர்' பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், ஆழ்வார் ஆய்வு மையம் 2014-ஆம் ஆண்டிற்கான "சான்றோர்' விருதையும்,  சேக்கிழார் ஆராய்ச்சி மன்றம் 2017- சிறந்த பேராசிரியருக்கான "சேக்கிழார்' விருதையும்; சென்னை, சிவநேயப் பேரவை வழங்கிய "தமிழ்ச்சுடர் மாமணி' விருதையும்; பிரத்தியங்கரா அறக்கட்டளை வழங்கிய "காரைக்கால் அம்மையார்' விருதையும்; பெங்களூரில் நடந்த  கம்பன் விழாவில், "தமிழ் வளர்க்கும் சான்றோர்' விருதையும்; பேராசிரியர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்ட  "வைரமங்கை திலகம்' விருதையும் பெற்றவர். 

அகில இந்திய சுற்றுலாத் துறை 2013-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று, "புதுக்கோட்டையின் சுற்றுலா ஆதாரங்கள்' எனும் பெயரிலும்; 2014-ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைபெற்ற சுற்றுலாத்துறை மாநாட்டில், "புதுக்கோட்டையைச் சார்ந்த சான்றோர்கள்' எனும் பெயரிலும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு,  "தமிழக வரலாற்றில் காலப்பகுப்பு', "இந்திய மகளிரின் உரிமைக்கான தேடல்',  "மனிதக் கல்வி உரிமைகள்'  ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி, பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவருடைய கணவர் மு.தருமராசன் வங்கி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக "புதுகைத் தென்றல்' என்ற சிற்றிதழை கடந்த 15 ஆண்டுகளாகத் தொய்வில்லாமல், இந்த "இலக்கிய இணையர்' நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com