உங்கள் ஐஏஎஸ் கனவு நிறைவேற ஆன்லைனில் பயிற்சி!

இன்றைய இளைஞர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத வேண்டும்
உங்கள் ஐஏஎஸ் கனவு நிறைவேற ஆன்லைனில் பயிற்சி!

இன்றைய இளைஞர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் பணிக்குப் போக வேண்டும் என்று பலர் ஆசைப் படுகின்றனர். 

பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்த தேர்வுகளுக்காகப் பயிற்றுவிக்கும் கல்விநிறுவனங்களில் சேர்ந்து பயில்வது எளிதாக இருக்கிறது. ஆனால் சிறுநகரங்களில், கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் என்ன செய்வது? நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் பயில்பவர்களுக்கே கூட அவர்கள் பயிற்சி பெற விரும்பும் படிப்புக்கான நவீன புத்தகங்கள், வீடியோக்கள் எல்லாம் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. பயிற்சி மையங்களில் சொல்லித் தரும் ஆசிரியர்கள் எல்லாரும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் சொல்ல முடியாது. 

பயிற்சி மையங்களுக்குச் சென்று கற்க மாணவர்கள் பயணம் செய்ய வேண்டும். அதற்காக ஒதுக்கும் நேரம், போக்குவரத்து நெரிசல்கள், உரிய நேரத்தில் வாகனங்கள் வராதது, அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என இளைஞர்களின் எதிர்கால கனவுகளுக்கு எதிராக நிறைய தடைகள் உள்ளன.

இம்மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வாகத் தொடங்கப்பட்டதுதான் 'நியோஸ்டென்சில்' http://neostencil.com என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம். ஐஏஎஸ் மட்டுமல்ல ஐ.இ.எஸ், கேட் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு தேர்வுகள், வங்கித் தேர்வுகள், யுஜிசி நடத்தும் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி தரும் நிறுவனம்தான் இது. 

2014- இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு புதுதில்லி, கூர்கான், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் கூட ஓர் அலுவலகம் உள்ளது.

இதை நிறுவியவர்கள் லவ் பீஜால், குஸ் பீஜால் என்ற சகோதரர்கள். இதில் லவ் பீஜால் ஒரு டாக்டர். மருத்துவப் படிப்புக்குப் பிறகு ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகம் பயின்றிருக்கிறார். குஷ் பீஜால் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். ஐஐடிபி மற்றும் ஐஐடிஎம்- கொல்கத்தாவில் பயின்றவர். 

'அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையிலேயே நியோஸ்டென்சிலை நாங்கள் தொடங்கினோம். வகுப்பறையில் அமர்ந்து நேரடியாக பாடம் கேட்பதை விட மிகச் சிறப்பான கல்வியை அளிப்பதே எங்கள் நோக்கம். சிறுநகரங்களில் , கிராமங்களில் வாழும் வசதியில்லாத ஆனால் மிகவும் திறமையுள்ள ஏழை மாணவர்கள் அரசுப் பணிகளுக்கான தேர்வை வெற்றிகரமாக எழுதுவதற்கு எங்கள் நிறுவனம் உதவுகிறது.

அந்த மாணவர்கள் நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில வேண்டும் என்றால் நகரத்தில் தங்கியிருக்க வேண்டும். அதற்கான செலவு செய்ய வசதியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?  எனவே வீட்டில் கம்ப்யூட்டர், லேப் டாப், இணையதள வசதி பெறக் கூடிய ஒரு செல்போன் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும், அவர்கள் நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் தரப்படும் கல்வியை விட மேலான கல்வியை அவர்கள் பெற முடியும். 

ஐ.ஏ.எஸ், ஐ.இ.எஸ்., தேர்வுகளுக்கான அனைத்துப் பாடங்கள், புவியியல், இந்தியப் பொருளாதரம், வரலாறு, சட்டம், அரசியலமைப்புச் சட்டம், அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், சமூகவியல், பொறியியல்துறை சார்ந்த படிப்புகள் என பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். 

எங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறவர்கள், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளின் திறமை மிக்கவர்கள்' என்கிறார் லவ் பீஜால்.

இந்த ஆன்லைன் கல்வி கற்க பாடத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் உள்ளது. 

'எங்களுடைய மாணவர்களுக்கு நவீன ஸ்டடி மெட்டீரியல்களின் மூலம் கற்றுத் தருகிறோம். வகுப்புத் தேர்வுகளையும் நடத்துகிறோம். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆன் லைன் மூலம் ஆசிரியரிடம் பேசி தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் வேலை வாய்ப்புக்குத் தேவையான கல்வி பற்றிய ஆலோசனைகளையும் தருகிறோம். ஒரு குறிப்பிட்ட பாடம் தொடர்பான கலந்துரையாடலும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. நேரடியாக வகுப்பறையில் கற்றால் என்ன அனுபவங்களை ஒரு மாணவர் பெறுவாரோ அந்த அனுபவங்களுடன், அதைவிட சிறப்பான கல்வியை எங்கள் ஆன்லைன் கல்வி மூலம் இந்தியாவின் எந்த மூலையில் வாழும் மாணவர்களும் பெற முடியும்' என்கிறார் லவ் பீஜால்.

தொடங்கிய 4 ஆண்டுகளுக்குள்ளாகவே, ரூ.6 கோடி அளவில் வருவாய் ஈட்டும் அளவுக்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com