உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையா? இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்!

அழகான கையெழுத்து நம் மனதை கொள்ளை கொள்கிறது. காண்போர் அதனைப் புகழ்வார்கள்.
உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையா? இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்!

அழகான கையெழுத்து நம் மனதை கொள்ளை கொள்கிறது. காண்போர் அதனைப் புகழ்வார்கள். பெரும்பாலான குழந்தைகள் எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பல தவறுகளைச் செய்கின்றனர். இவற்றை மிக எளிதாகத் திருத்திக்கொள்ள முடியும். ûயெயழுத்து நன்றாக இல்லையெனில், மதிப்பெண் குறைவது மட்டுமல்லாமல், அவரைப் பற்றிய தவறான கருத்தினையும் உருவாக்கிவிடும்.

ஏன் நல்ல கையெழுத்து வேண்டும்? இன்றைய ஆசிரியர்கள் ஏராளமான பணிகளை வேகமாகச் செய்ய வேண்டிய நிலையில் அவதிப்படுகிறார்கள். டன் கணக்கில் விடைத்தாள்களைத் திருத்த வேண்டியிருப்பதால், பள்ளி திறப்பது முதல் ஆண்டு விடுமுறைக்காக பள்ளி மூடிய பின்பும் தொடர்ந்து இப்பணியை செய்ய வேண்டியுள்ளது. ஆகையால், சுத்தமாக அழகாக எழுதுபவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கும் மனப்பான்மை உண்டாக்கிவிடுகிறது.

அடித்தல் திருத்தல்களோடு, தேவையில்லாத புள்ளிகள், படிக்க முடியாத நிலையில் எழுதப்படும் எழுத்துகள் ஆகியவை மாணவனின் மதிப்பெண்களைக் குறைத்துவிடுகிறது. நல்ல முறையில் எழுத பயிற்சி பெற்று, எளிமையாகச் செய்தாலே, உங்களின் கருத்துக்களை காகிதத்தில் எதிரொலிக்கச் செய்யலாம்.

கையெழுத்தின் வகைகள்: எழுத்துக்களை எழுதுவது மூன்று வகைப்பட்டதாகும். நேராக, வலப்பக்கம் சாய்வாக எழுதுதல், இடப்பக்கம் சாய்வாக எழுதுதல். எந்த முறை நமக்கு சிறப்பாக அமையும் என்பதைக் கண்டறிய முதலில் ஒரு சிறிய பத்தியை எழுதி பார்க்க வேண்டும். அதில் பெரும்பாலான எழுத்துக்கள் நேராக இருந்தால் உங்கள் கையெழுத்து நேரானது. பெரும்பாலான எழுத்துக்கள் வலப்பக்கமோ இடப்பக்கமோ சாய்ந்திருந்தால் உங்கள் எழுத்து சாய்வானது.இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவற்றை கடைசி வரை பயன்படுத்த வேண்டும்.

எழுதுகோலை பிடிக்கும் முறை: பேனா, பென்சிலை கட்டைவிரலால் இடது பக்கம் பிடித்து, ஆள்காட்டி விரலை மேல் பக்கம் வைத்து, கீழ்ப்பக்கமாக மூன்று விரல்களால் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். எழுதுகோல் நடுவிரலில் சார்ந்திருக்க, மேற்பகுதி விரல் கணுவில் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். விரலிடுக்கின் பள்ளத்தில் ஆதாரமாக இருக்கக்கூடாது.

காகிதம் இருக்க வேண்டிய நிலை: காகிதம் அல்லது குறிப்பேட்டை மேசையின் முனைக்கு வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால், எழுதும் கை உடலின் மிக அருகாமையில் வருவதால், வேகமாக எழுதுவதற்குத் தடையாக இருக்கும். காகிதத்தை மேசையின் முனைக்கு ஒரு கோணத்தில் சாய்வாக, தட்டுத்தடங்கல் இல்லாமல் எழுதுகிற நிலையில், கைக்கும் உடலுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.

எழுதாத கையின் நிலை: எழுதாத கையை தொடையிலேயோ, தலையிலேயோ வைத்துக்கொள்வதால், குறிப்பேட்டினை ஒரே நிலையில் அசையாமல் வைக்க முடியாது. ஆகையால், காகிதம் அல்லது குறிப்பேட்டினை ஒரே நிலையில் பிடித்துக்கொள்ள வேண்டும். வேகமாக மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு தேர்வு எழுதும்போது, காகிதத்தை வேகத்திற்கேற்ப மேலே தள்ளி, எழுதும் கைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். எழுதாத கை, மேசைக்குக் கீழே அல்லது தொங்கும் நிலையில் வைத்திருக்கக் கூடாது.

அழுத்தம்: எழுதுகோலின் அழுத்தத்தைக் குறைத்தால், எழுதும் வேகம் அதிகரிக்கும். எழுத்துக்களை சரியான வடிவத்தில், சரியான அளவில் எழுத வேண்டும். எழுத்துக்களை சிறியதாகவும், பெரியதாகவும் எழுதக்கூடாது.
 பின்பற்ற வேண்டியவை: அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத முயற்சி செய்ய வேண்டும். ஒரு சொல்ல நீக்க வேண்டுமானால்,அதன் மீது நேர்கோட்டை இழுக்க வேண்டும்.

எல்லா எழுத்துக்களையும் வரிக்கு மேல் எழுதுங்கள். எல்லாவித எழுத்துக்களையும் கலக்காதீர்கள்.

(எஸ்.சந்திரமெளலி எழுதிய நலம், நலமறிய எனும் நூலிலிருந்து)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com