எல்லாம் நன்மைக்கே! வாழ்வியல் அற்புதத்தை விளக்கும் சீன நாடோடி கதை!

மரங்களும், செடி கொடிகளும், புதர்களுமான வனத்தை மீறிக்கொண்டு மலைகளும்
எல்லாம் நன்மைக்கே! வாழ்வியல் அற்புதத்தை விளக்கும் சீன நாடோடி கதை!

மரங்களும், செடி கொடிகளும், புதர்களுமான வனத்தை மீறிக் கொண்டு மலைகளும், குன்றுகளும் நிமிர்ந்து நிற்கின்றன. மலையின் இடுப்பு மடிக்குள் அந்தச் சின்ன கிராமம் இருந்தது. அந்த ஊரில், ஊர் மக்களை விட்டு ஒதுங்கிய நிலப்பரப்பில் ஒரு குடிசையில் வாழ்ந்தார் அந்தக் கிழவர்.

தனது வாலிப மகனுடன் குதிரைகளையும், தோட்டத்தையும் பராமரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார், கிழவர். ஒரு நாள், அவரிடமிருந்த குதிரை ஒன்று காணாமல் போனது. அதனால் குதிரை லாயத்தில் ஒரு சோகம் சூழ்ந்தது.

"அப்பா, நம்ம குதிரையைக் காணோம்'' என்று பதற்றத்துடன் சொன்ன மகனை அமைதியாகப் பார்த்த கிழவர், "தேடிப் பார்! அந்த குதிரை நம்மிடமே வந்து சேரும்'' என்று நம்பிக்கையூட்டினார்.

காணாமல் போன குதிரை, நல்ல குதிரை; பாசமான குதிரை. இவர் வாசம் வந்தாலே வாலையாட்டும். இவரைப் பார்க்கும் அதன் கண்களில் நன்றி உணர்வு ஒளிவீசும். அதில் அக்குதிரையின் ஈர மனது புலப்படும். ஆனால், குதிரை எங்கு தேடியும் புலப்படவில்லை.

ஊர் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து துக்கம் விசாரித்தனர். துக்கப் புண்ணைக் கிளறிவிட்டு இழப்பு பற்றிய மிகையான சோகத்தை மக்கள் வெளிப்படுத்தினர். நாகரிகம் கருதி பொறுமை காத்துப் பார்த்தார், கிழவர். தலையைத் தலையை ஆட்டினார். ஆனால், மக்களின் ஒப்பாரியும், புலம்பலும் எல்லை மீறி போகவே, கோபப்பட்டு வெடித்தார் கிழவர்:

"முட்டாள்தனமா உளறாதீர்கள். ஏன் இப்படி தொண தொணக்கறீங்க? இப்போ என்னாச்சு? குதிரையைக் காணோம். அவ்வளவு தானே? இதற்குப் போய் ஏன் இப்படி சோகத்தைப் பிழிகிறீர்கள்?'' என்று சீறி, கூட்டத்தைக் கலைத்தார்.

நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. குதிரைகளின் கனைப்புச் சத்தத்தால் விழித்தெழுந்தார் கிழவர். உடனே எழுந்து வந்து பார்த்தால்... காணாமல் போன குதிரை வந்து நின்றிருந்தது. இவரது வருகைக்காக கழுத்தைத் திருப்பிக் காத்திருந்தது. அதனுடன், மேலும் 12 குதிரைகள்.

"வந்துவிட்டாயா? நல்லது. கூட்டாளிகளுடன் வந்திருக்கிறாயா?'' என்று அப்போதும் இயல்பாகச் சொன்னார் கிழவர்.

லாயம் கொள்ளாத அளவுக்கு குதிரைகள். லாயம் குதிரை பண்ணையாகவே மாறிவிட்டது.

"கிழவருக்கு இலவசமாகக் கிடைத்த 12 குதிரைகள்'' என்ற செய்தி காட்டுத்தீயாக ஊருக்குள் பரவ... ஊர் மக்கள் அனைவரும் வந்து பார்த்தனர். "என்ன இருந்தாலும் கிழவர் மகா யோகக்காரனய்யா! புதையல் கிடைத்தது மாதிரி 12 குதிரைகள். அடடா!'' என்றனர்.

அவர்களைப் பார்த்து கிழவர் சொன்னார்: "சாணி விழுந்தால் மண்ணு ஒட்டும் நிலத்திலேயே ஒண்ணு விளைந்தால் நூறாய் விளையும். ஒரு பெண் பல பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். இதிலே என்ன யோகம்? ஒரு குதிரை போய் 12-ஆக வருவதில் என்ன ஆஹா... ஓஹோ... போங்கைய்யா''.

ஊர் மக்களின் முகம் சுருங்கிவிட்டது.

இந்த 12 குதிரைகளை அடக்கும் முயற்சியில் வாலிபனான கிழவனின் மகன் பல நாட்களாக மல்லுக் கட்டினான். அப்போது முரட்டுக் குதிரை ஒன்று அவனை ஒரு கிடங்கில் தூக்கி எறிந்துவிட்டது. வலது காலில் முறிவு ஏற்பட்டது. தன் ஒரே மகன், தனக்கான ஒரே ஆதரவு தனது வம்சத்தின் ஒரே வித்து, அவனுக்கு இப்படி ஒரு விபத்தா?

ஒருகணம் வருத்தப்பட்டார். நிலை குலைந்த மனசில் ஒரு நடுக்கம் உடைந்து உணர்வுகளின் கசிவு.

எல்லாம் ஒரு கணம்தான். கிழவர் சுதாரித்துக் கொண்டார்: "பார்க்கலாம் இந்தத் துன்பத்திலேயும் ஏதாவது நல்லது இருக்கலாம்' என்று. செய்தி அறிந்த ஊர்க்காரர்கள் ஓட்டமாய் ஓடி வந்தனர். கண்ணீர் விட்டார்கள்.

கிழவருக்கு கோபம் கோபமாக வந்தது. ரௌத்திரமாய் சீறி வெடித்தார்.

"போங்கய்யா! இதுல என்ன துரதிருஷ்டத்தை கண்டுவிட்டீர்கள்? நோயில் கிடக்கிறவனுக்கு தைரியம் சொல்லலாம். பயமுறுத்தி பலவீனப் படுத்துகிற நீங்கள் தான் பூமியில் துரதிருஷ்டம். போய்த் தொலையுங்கள்'' என்று ஆத்திரமாக பேசித் துரத்தினார் கிழவர்.

"ஊர் அனுதாபப்பட்டாலும் சீறுகிறாரே. இந்தக் கிழவருக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பினர் மக்கள்.

அந்த நாட்டு ராஜா நடத்திக் கொண்டிருந்த போரில் மிகப் பெரிய பின்னடைவு. பட்டாளத்துக்குச் சிப்பாய்களைத் தேடி ஊர் ஊராக வலை வீசி அலசினர். எல்லா இளவட்டங்களையும் கட்டாயமாக, இழுத்துச் சென்றனர். "சாகத்தான் போகிறோம்' என்று பயந்து புலம்பினர் இளைஞர்கள்.

இந்நிலையில், அந்த வனப்பகுதியின் சேனாதிபதி குதிரையில் வந்தார். ஊரிலுள்ள இளவட்டங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய் விட்டார். கிழவனின் மகன் கால் முறிவு ஏற்பட்டிருப்பதால் விட்டு விட்டனர்.

சாவின் கையில் மகன்களை பறி கொடுத்த தாய், தந்தையர் அனைவரும் அழுது புலம்பினர். தோற்று வரும் படைக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்ட இளைஞர்கள் ஊர் திரும்பவே இல்லை.

ஊரின் ஒரே இளைஞனான கிழவர் மகன்தான் தப்பியிருந்தான். அவன் கம்பீரமாக உலா வந்தான்.

இப்போது, எல்லா ஊர்க்காரர்களும் கிழவரை வந்து மொய்ந்தனர். "நீங்கள் யோகக்காரய்யா. ஊனமே உங்கள் மகனைக் காப்பாத்திருச்சே... நாங்கள் வம்சமில்லாமல் நாசமாயிட்டோமே...! நீங்கள் அதிருஷ்டக்காரர்கள்.''

இதையும் மறுத்து தலையை அசைந்தார், கிழவர். "இதில் ஒன்றும் அதிர்ஷ்டமில்லை...'' என்று மெதுவாகச் சொன்னார். "எல்லாத்துலேயும் நல்லதுதான் விளையும் எல்லாமே நல்லதுக்குத்தான் எண்ணும் மனோபாவத்தோட நாம இருந்தால்... நம்மைச் சுத்தி நடக்குற எல்லாமே நமக்கு மகிழ்ச்சியைத்தான் தரும். இதிலே யோகம்னு துள்ளுவதற்தோ- துரதிருஷ்டம் சொல்வதற்கோ ஒன்றுமில்லை. துரதிருஷ்டம் அதிர்ஷ்டம் என்று நினைப்பதெல்லாம் மூட நம்பிக்கை. நம்பிக்கை துணிச்சலைத் தரும். மூட நம்பிக்கை பயத்தைத் தரும்'' என்று அமைதியாகச் சொன்ன கிழவரின் தாடியையே எல்லாரும் புரியாமல் பார்த்தனர்.

இப்போதும் அவரது சொற்களின் ஆழம் அவர்களுக்குப் பிடிபடவில்லை.

 ஆயினும்...

"பெரியவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்'' என்ற முரட்டு நம்பிக்கையில் மனதைத் தேற்றிக் கொண்டனர் ஊர் மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com