கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதோ ஒரு வழி!

கம்பளித் துணிகளை வெது வெதுப்பான நீரில்தான்  அலச வேண்டும்.  முறுக்கிப் பிழியக் கூடாது.
கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதோ ஒரு வழி!

மழைக்கு இதமாக ஒரு சூடான தேநீர் பகலிலும், இரவில் உறங்க சுகமான ஒரு கம்பளியும் இருந்தால் குளிரிலிருந்து எளிதாக தப்பிவிடலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கம்பளி போர்வையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்.

மழைக் காலத்த்தில் வெளியே உலர்த்த முடியாது. மேலும் காற்றில் இருக்கும் ஈரத்தன்மை கம்பளி துணியில் ஒருவித வாடையை ஏற்படுத்திவிடும். வீட்டினுள் உலர்த்தினால் அந்த ஈரத்தன்மை கம்பளி போர்வையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவிற்கு வரவேற்பு அளித்துவிடும். வாஷிங் மிஷினில் ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்தலாம். அல்லது சற்று மழை விட்டதும் வெளியில் காற்றாட உலர்த்த வேண்டும். 

கம்பளி துணியில் தூசி அதிகமிருந்தால் அது ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை ஏற்படுத்திவிடலாம். எனவே சுத்தமாக இருத்தல் அவசியம். முதலில் போர்வையை உதறி தூசிகளை வெளியேற்ற வேண்டும். வேக்வம் கிளீனர் பயன்படுத்தியும் தூசிகளை வெளியேற்றலாம்.

கம்பளி துணிகளை துவைக்க அல்லது சுத்தம் செய்வதற்கு முன்னர், உற்பத்தியாளர்கள் கூறி உள்ள வழிமுறைகளை படித்து பார்த்து விட்டு, அதல் கூறியிருக்கும்படி பின்பற்றுவது நல்லது. 

கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் அதில் ஏதாவது கறைகள் இருந்தால் அதை அகற்றிவிட்டு துவைப்பது நல்லது. 

கம்பளி துணிகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதன் தன்மை மாறி, நிறமும் மங்கி விடும். கம்பளி ஆடைகள், கம்பளி துப்பாட்டாக்கள் மற்றும் போர்வைகளை தனியாகத் தான் துவைக்க வேண்டும்.கம்பளித் துணிகளை வெது வெதுப்பான நீரில்தான்  அலச வேண்டும். முறுக்கிப் பிழியக் கூடாது. லேசாகப் பிழிந்து அப்படியே நீர்வடியும்படி கயிற்றில் போட்டுவிட வேண்டும். வெயிலில் உலர்த்தக் கூடாது. கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதுதான் வழி.

கம்பளித் துணியில் பூச்சி அரிக்காமல் இருக்க...

கம்பளித் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது நவச்சாரம்  கலந்து கொண்டால் துணியின் அழுக்கு நீங்கிப் புதிதாகத் தெரியும். அதே சமயம் பூச்சியும் அரிக்காது.

கம்பளித் துணிகளை வைக்கும் பெட்டியில் படிகாரத்தைத் தூள் செய்து மெல்லிய துணியில் முடிச்சாக  முடிந்து போட்டு  வைத்தால் பூச்சி அரிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com