உங்களுக்கு புத்தகம் படிக்க ஆசையா? இதோ 5 எளிய வழிமுறைகள்!

நம்மில் பலருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. நிறைய படிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
உங்களுக்கு புத்தகம் படிக்க ஆசையா? இதோ 5 எளிய வழிமுறைகள்!

நம்மில் பலருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. நிறைய படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வாசித்த புத்தகங்களின் முக்கியமான பகுதிகள், புத்தகத்தின் சாராம்சம் ஆகியவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்களேன், மறந்திருப்பார்கள். இதற்குக் காரணம், முறையாகப் புத்ககம் படிப்பதற்கான யுக்திகளும், நுணுக்கங்களும் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே.

இவ்வாறின்றி, புத்தகம் படிப்பதற்கான ஐந்து எளிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் பயனுள்ள புத்தகங்களை படிக்கவும், படித்தவற்றை மறந்து போகாதபடி நினைவில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

நோக்கம் என்ன?

நூல்களை நாம் வாசித்தலுக்கு தேர்ந்தெடுக்கும் முன்பு, எந்த மாதிரியான புத்தகங்களைத் தெரிவு செய்ய வேண்டும்; அவை நமக்கு எந்தவிதத்தில் பயனுள்ளவையாக இருக்கும் ஆகிய கேள்விகள் நம் மனதில் எழ வேண்டும்.

உதாரணமாக நீங்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் வாழ்வின் முக்கியமான கட்டத்திலோ அல்லது தொழில் தொடங்கும் எண்ணத்திலோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் புனைகதைகளைப் படித்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்வில் நாம் எந்த தருணத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்துதான் வாசித்தலுக்கான புத்தகங்களைத் தெரிவு செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால், நாம் வாசிக்கும் புத்தகங்கள் நம்முன் உள்ள சவால்களை தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற உதவக் கூடியவையாக இருக்க வேண்டும்.

ஆசிரியராக எண்ணுங்கள்!

வாசித்தலின் மூலம் நாம் பெற்ற அறிவை கொண்டு நாம் எதையாவது செயல்படுத்தும் போதுதான் அது பயனுள்ளதாக அமைகிறது, நீங்கள் படித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அந்த விஷயங்கள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடுகிறது, அறிவும் பன்மடங்கு பெருகுகிறது. எனவே உங்களை நீங்களே ஓர் ஆசிரியராக எண்ணிக் கொண்டு நீங்கள் வாசித்தவற்றை மற்றவர்களுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் படித்தது உங்களுக்கு மேலும் தெளிவாக விளங்கும்; மறக்கவே மறக்காது!

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்து கொள்வதற்கு, அவற்றை சிறு சிறு குறிப்பு எடுத்துக் கொள்வது, முக்கியமான பக்கங்களை மடித்து வைத்து மறுமுறை படிப்பது, முக்கியமான பதங்கள், சொற்றொடர்களை அடிக்கோடிட்டு கொள்வது போன்றவை சிறந்த யுக்திகளாகும்.

நீங்கள் செல்போனிலே புத்தகங்களை படிக்கும் நவநாகரிக இளைஞர் என்றால், பிரத்யேக செயலி மூலம், டிஜிட்டல் முறையில் நீங்கள் படிக்கும் புத்தகங்களின் சாராம்சம்களையும், அவைதொடர்பான பட விளக்கங்களையும் அவ்வப்போது சேகரித்து வைத்துக் கொள்ள தனி ஃபோல்டரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

காட்சிப்படுத்துங்கள்

நாம் படிப்பவற்றை நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றை மனதில் காட்சிப்படுத்துவது மற்றொரு சிறந்த வழிமுறையாகும். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு அறிவியல் பாடத்தைப் படிப்பதாக கருதுவோம். அதில் விவரிக்கப்பட்டுள்ள விதிகளை வெறுமனே மனப்பாடம் செய்வதால் நாளடைவில் அவை மறந்து போகும். மாறாக, அந்த அறிவியல் விதிகளை நடைமுறை உதாரணங்களுடன் தொடர்புப்படுத்தி காட்சிகளாக மனக்கண்ணில் உங்களால் காண முடிந்தால், அவை உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

இதேபோல், நாம் படித்துணர்ந்த ஒரு விஷயத்தை நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி செயல்படுத்துவோமென கற்பனை செய்வதும் சுவாரஸ்யமான அனுபவமாகும்.

உடனே செயல்படுத்துங்கள்

ஒருவர் தன் தனித்திறன்களை வளர்த்து கொண்டு, பணத்தை ஈட்டுவதுடன், மனித உறவுகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் நல்ல வளர்ச்சி என்று மதிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சியானது எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

புத்தகங்களின் மூலம் பெற்ற அறிவை நாம் நடைமுறைப்படுத்த தொடங்கும்போது தான் வாழ்வில் நம் வளர்ச்சிக்கான வித்து விதைக்கப்படுகிறது.

மாறாக, வெறும் புத்தக அறிவை மட்டும் நிரம்ப பெற்றுக் கொண்டு நீங்கள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தால் அதனால் உங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் எவ்வித பயனும் இல்லை. அதாவது, 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடித்த பின்பும் குறைந்தபட்சம் அதில் சொல்லப்பட்ட ஏதாவதொரு விஷயத்தை செயல்படுத்துங்கள். வாழ்வில் வெற்றியாளராக வலம் வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com