#MeToo  ஹேஷ்டேக்கில் அரைநூற்றாண்டுக்குப் பின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்க வைப்பதின் நோக்கம் தொழிற்போட்டியா?!

சமூக ஊடகங்களில் இந்த #MeToo  ஹேஷ் டேகுக்கு நல்ல புரிதலும் வரவேற்பும் இருந்ததால் பாலிவுட் நடிகைகள், விளையாட்டு வீரங்கனைகள், சமூகத்தில் அந்தஸ்துடன் வலம் வரும் தொழில்முனைவோர் உட்பட பிரபலமான பெண்கள் அனைவர
#MeToo  ஹேஷ்டேக்கில் அரைநூற்றாண்டுக்குப் பின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்க வைப்பதின் நோக்கம் தொழிற்போட்டியா?!

இந்தி நடிகர் ஜிதேந்திராவை அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். அவரைத் தெரியாதவர்களுக்குக் கூட நிச்சயம் பாலாஜி டெலிஃபிலிம்ஸை தெரிந்திருக்கும். பாலாஜி டெலிஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது இந்தி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட இன்னபிற பிராந்திய மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இதன் ஸ்தாபகர் பாலிவுட்டின் மூத்த நடிகர் ஜித்தேந்திரா. இவரது மகளும், தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் மேற்பார்வையில் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழிலும் கூட சன், ஸ்டார் விஜய், ஜீ தமிழ், பாலிமர் போன்ற சேனல்களில் கணக்கற்ற நெடுந்தொடர்களைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

தென்னிந்தியத் திரையுலகில் கேரள நடிகை பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து திரைத்துறை சார்ந்த பெண்கள் அமைப்பினர், திரையுலகிலும், பொது வெளியிலும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை அச்சமின்றி வெளிக்கொணரும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

அதிலொன்று #MeToo ஹேஷ்டேக் பிரச்சாரம்.

- இதன் நோக்கம், பதின்ம வயதுகளில் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் அல்லது புதியவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு அதை குடும்பத்தினரிடம் கூட பகிர முடியாமல் அச்சப்பட்டு மூடி மறைத்தவர்கள் இனிமேலும் அப்படியே அச்சப்பட்டுக் கொண்டு வாழ்நாள் முழுதும் தீராத மன உளைச்சலில் உழல்வதைக் காட்டிலும் இந்த ஹேஷ்டேக் மூலமாக அதை தயக்கமின்றி வெளிப்படுத்தி தங்களது பாதிப்புக்கு ஒரு வடிகால் தேடிக் கொள்வதோடு, குற்றவாளிகளையும் இந்த சமூகத்தின் முன் அடையாளம் காட்டலாம் என்பதே!

இதனால் பாலியல் குற்றம் செய்து விட்டு அதற்கான குறைந்தபட்ச தண்டனை கூட அனுபவிக்காமல் இந்த சமூகத்தின் முன்னிலையில் பெரிய மனிதர்களாக வலம் வரும் பலரது முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என பெண்கள் அமைப்பினர் கருதினர். 

சமூக ஊடகங்களில் இந்த #MeToo  ஹேஷ் டேகுக்கு நல்ல புரிதலும் வரவேற்பும் இருந்ததால் பாலிவுட் நடிகைகள், விளையாட்டு வீரங்கனைகள், சமூகத்தில் அந்தஸ்துடன் வலம் வரும் தொழில்முனைவோர் உட்பட பிரபலமான பெண்கள் அனைவரும் தங்களுக்கு இளமையில் ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல்களையும், பாதிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். 

‘குற்றம் செய்தவர்கள் தான் அதை வெளியில் சொல்ல அஞ்ச வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் அல்ல’

- எனும் மிகச் சரியான அணுகுமுறையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேகில் மூத்த நடிகர் ஜிதேந்திராவின் உறவினராக பெண்ணொருவரும் சமூக ஊடகங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது; தனக்குப் 18 வயதிருக்கையில் ஒரு இந்தித் திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக தனது உறவினரான ஜிதேந்திரா(28), தனது தந்தையின் அனுமதியுடன் தன்னை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார் எனவும், அங்கே தன்னை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகவும் அந்தப் பெண் ஜிதேந்திரா மீது குற்றம் சுமத்தியுள்ளார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கான அவசியம் என்ன? என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு விதமான போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தான் பெண்களுக்கு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல்களை சமூகத்தின் முன் அச்சமின்றி முன் வைக்க உகந்த சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. என் விஷயத்தில் குற்றவாளியான ஜிதேந்திரா சமூகத்தில் பெரிய மனிதர் போர்வையில் உலவுபவர். பணபலம், அதிகார பலம், ஊடக பலலும் மிகுந்தவர். அவரைத் தனியொரு ஆளாக என்னால் எதிர்க்க முடியாது. அது மட்டுமல்ல, எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் இருக்கையில் நான் இப்படி ஒரு குற்றச்சாட்டை ஜிதேந்திரா மீது சுமத்தியிருந்தால் அவர்கள் நிச்சயம் உயிரோடு இருந்தவரை தங்கள் வாழ்நாள் மன உளைச்சல் அடைந்திருப்பார்கள். அந்தக் காரணத்திற்காகவும் தான் நான் இதுநாள் வரை பொறுமை காத்தேன்  என்கிறார்.

இனிமேல் அப்படியிருக்கத் தேவையில்லை. இப்போது பெண்கள், அதிகாரம் மற்றும் பணபலம், செல்வாக்கு உள்ளிட்ட விஷயங்களுக்காக குற்றவாளிகளை சமூகத்தின் பார்வையில் இருந்து தப்ப விட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதற்கொரு உதாரணம் தான் சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வந்தமை. அந்த தைரியத்தில் தான் இதுநாள் வரை என்னை மிகப்பெரும் மன உளைச்சலில் உழல வைத்துக் கொண்டிருந்த உண்மையைப் போட்டு உடைக்க வைத்தது’ என்கிறார் அவர்.

உறவினரது குற்றச்சாட்டு குறித்து ஜிதேந்திராவிடம் விளக்கம் கேட்கையில்; 

‘அவர் சொல்வதெல்லாம் பொய், ஆதாரமற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான குற்றச்சாட்டை என் மீது வைப்பதற்குக் காரணம் பொறாமையும், தொழிற்போட்டியுமே’

- என்கிறார் அவர்.

இருவரில் யார் சொல்வது நிஜம்? எனத் தெரியவில்லை. ஆனால், தற்போது ஜிதேந்திரா மீது  ஹிமாச்சலப் பிரதேச காவல்துறையிடம் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுப் புகார் ஒன்றை சட்ட ரீதியாகப் பதிவு செய்திருக்கிறார் அந்தப் பெண்மணி.
 

Image courtesy: first post.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com